பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘குதிரை வால்’ திரைப்படம். படத்தின் போஸ்டர், டீசர் என ப்ரமோக்கள் ஈர்த்தன.
சரி, படம் எப்படி இருக்கிறது?
‘கலைடாஸ்கோப் போல பலவித உணர்வுகளைத் தரும் படம்’ என்று அறிவாளிகள், சினிமா ரசிகர்கள் சொல்லக்கூடும்.
‘நீர் மோர், மாம்பழ ஜூஸ், கோகோகோலா கலந்து குடித்த மாதிரி இருக்கிறது’ என நம்மைப் போன்ற ‘பாமர’ ரசிகர்கள் சொல்வார்கள்.
அப்படி ஒரு படம் குதிரைவால்.
நாயகன் கலையரசன், உறக்கத்தில் கனவு காண்கிறார். திடுக்கிட்டு விழிக்கும்போது, தனக்கு வால் முளைத்திருப்பதாக உணர்கிறார்.
“ஏன் வால் முளைத்தது” என அவர் தேடி அலைவதுதான் கதை.
கனவுதான் காரணம் என்கிறார் குறி சொல்லும் பாட்டி, ஜோதிடம்தான் காரணம் என்கிறார் ஜோதிடர். இப்படி பல மாதிரி சொல்கிறார்கள்.
அதுவாவது பரவாயில்ல, கலையரசனின் மாஸ்டர், ஏதோ a+b = c என்றெல்லாம் கணக்குப் போட்டு, “இதோ பார் கணக்கில் உன் குதிரைக்கு வால் வந்துவிட்டது” என்கிறார்.
ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் தொடர்பில்லை; ஆனால் தொடர்பு இருக்கிறது.
திடீரென கனவுக்குள் புகுவதும், நிஜத்துக்குள் வருவதும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
‘அந்த மலை மேல ஏறினா வானத்தைத் தொட்டுரலாம்.. ஆனால் நாம் போகப்போக மலை நகர்ந்துகிட்டே போகும்’ என சீரியஸாக சொல்கிறார் நாயகி.
லேசாக தலை கிறுகிறுக்கிறது நமக்கு.
இடையில் கலையரசன் கனவுக்குள் நுழைய, அவருக்குள் கனவு புக.. முடியல…
மார்டர்ன் ஆர்ட் என்பது பெரும்பாலோருக்கு புரியாது. ஆனால் அதில் ஒரு அர்த்தம் இருப்பதாக சிலர் ரசிப்பார்கள்.
அதே போல பின் நவீனத்துவ எழுத்து என்று சொல்லி, வெகு பலருக்கும் புரியாத வார்த்தை அடுக்குகளை ரசிப்போரும் உண்டு.
ஒரு திரைப்படத்தில் வடிவேலு, “பத்தினிகளுக்கு மட்டும்தான்டா கடவுள் தெரிவார்” என்று சொல்ல, அனைவரும், “அதோ கடவுள் தெரிகிறார்” என்று சொல்லி சமாளிப்பார்கள்.
இன்னொரு பெண் கனவிலேயே கலவி கொண்டு கர்ப்பமாகிறார்.
அப்படித்தான் பலரும் தப்பிக்க வேண்டி இருக்கும்.
‘இலக்கியத்தரமாக’ விமர்சிப்பது என்றால், கதையில் வரும் கனவுத்தன்மை, கற்பனையில் உருவாகும் லட்சினையில் ஊழிப் பெருவெள்ளத்தில், படிமங்களில் நிசப்த வெயில் தோன்ற,
நுண் அரசியல் குறியீடுகள் எழுந்து நிற்க பல காரணிகள் அந்தர உலகுக்கு இட்டுச் செல்கின்றன என எழுதலாம்; படிப்பவர்கள் அடிக்க வருவார்கள்.
அந்தக் காலத்தில் ஊமைப்படங்கள் திரையிடப்படும்போது, திரையரங்குகளில் ஒருவர் கதை சொல்லிக்கொண்டே இருப்பாராம்.
அதுபோல இந்தப் படத்தின் ‘கதையை’ அல்லது ‘கதைகளை’ அல்லது காட்சிப் படிமங்களை இயக்குநரோ, கதாசிரியரோ சொன்னால்தான் உண்டு.
இடையில் எம்.ஜி.ஆர். மரணித்த தகவல் வருவதாக காட்சி உள்ளது. அப்போது பெரிய கிணறு ஒன்றில் அவரது தொப்பியும், கண்ணாடியும் மிதப்பதாக காண்பிக்கிறார்கள்.
ஒரு தலைவரின் அடையாளப் பொருட்களை இப்படி காட்சிப் படுத்துவது, அதை சென்சார் அனுமதிப்பது ஆச்சரியம்தான்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார் இராஜேஷ். மனோஜ் லியோனல் ஜாசன் – ஷ்யாம் சுந்தர் இரட்டையர்கள் இயக்கி இருக்கிறார்கள்.
பாடகர் பிரதீப் குமார் இசையப்பாளராக அறிமுகமாகி உள்ளார். பாடல்கள் மனதில் நிற்கவில்லை.
படத்தில் இரண்டு ஆறுதல்கள்.
கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு முதலாவது. கதை நடக்கும் அறைகளையும், கிராமத்து காட்சிகளையும் அத்தனை சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்.
அதே போல கலை இயக்குனர் ராமு தங்கராஜூம் கவனம் ஈர்க்கிறார்.
மற்றபடி கலையரசன் உள்ளிட்ட நடிகர்கள், இசை அமைப்பாளர் பிதீப் குமார், எடிட்டர் கிரிதரன் என படக்குழுவினர் என்ன புரிந்துகொண்டு தங்கள் பணியைச் செய்தார்கள் எனத் தெரியவில்லை.
தயாரிப்பாளர் பா.ரஞ்சித், எப்படி கதை கேட்டார், என்ன புரிந்துகொண்டார் என்பதைச் சொன்னால் பரவாயில்லை.
ஏதோ ரியாலிக், மேஜிக்கலி என்றெல்லாம் பின்நவீனத்துவத்தில் சொல்கிறார்களே அப்படியான பின்நவீனத்துவப் படமோ என்னமோ!
மக்களைக் குழப்பும் படம். கேட்டால், புரிந்து கொள்ளத் தகுதி வேண்டும் என்பார்கள்.
ரசிக்கும், புரிந்துகொள்ளும் தகுதி எல்லோருக்கும் இருக்கிறது. அந்த மனிதர்களின் பணத்தை வாங்கி இப்படிக் குழப்படியான படத்தை அளிக்கலாமா என்கிற புரிதல்தான் படக்குழுவினருக்கு இல்லை.
ரொம்ப எளிமையான விசயம்.
நாயகன் கலையரனுக்கு வால் முளைத்து விட்டதுதான் பிரச்சினையாக இருக்கிறது. கதையின் அடி நாதம் அதுதான்.
வாலை கத்தரித்துவிட்டால் போதுமே.
ஆனால் அப்படி செய்தால் படமே இருக்காது. ஆனால், ரசிகர்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள்.
– சோமாஸ்
19.03.2022 10 : 50 A.M