மீள் பதிவு :
கால முரண்:
“மோடியா? இந்த லேடியா?” என்று தேர்தல் பிரச்சாரத்தில் சவால் விட்டு முன்னாள் முதல்வரான ஜெயலலிதா பேசியதை நினைவுள்ளவர்கள் மறந்திருக்க முடியாது.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயலலிதா, “இனி எப்போதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கிற தவறைச் செய்ய மாட்டேன்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.
பா.ஜ.க.வும் துவக்கத்தில் “கழங்கங்கள் இல்லாத தமிழகம்” என்ற முழக்கத்தை முன் வைத்தது. அ.தி.மு.க அரசையும் விமர்சித்தது.
2018 ஜூலை மாதம் 9ஆம் தேதி சென்னையில் நடந்த பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அப்போதைய பா.ஜ.க தேசியத் தலைவரான அமித்ஷா பேசியதைக் கொஞ்சம் பார்க்கலாமா?
“பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஊழல் விரட்டப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தைப் பற்றி நினைக்கும்போது வருத்தம் ஏற்படுகிறது.
இந்தியாவிலேயே அதிக ஊழல் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் ஊழலற்ற நல்லாட்சியை அமைக்க பா.ஜ.க நிர்வாகிகள் சபதம் ஏற்க வேண்டும்.
“ஓட்டுக்கு நோட்டு” என்பதிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்.
தமிழ்மொழி, கலாச்சாரத்தின் பெருமையைக் காப்பதில் பா.ஜ.க மற்ற கட்சிகளைவிட, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மோடி ஆட்சியில் தான் ரயில் டிக்கெட்டுகள் தமிழில் அச்சடிக்கப்பட்டன.
தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி என்று அமைகிறதோ, அன்று தமிழகத்தைத் தாண்டி தமிழின் பெருமை எடுத்துச் செல்லப்படும்.
ஊழல் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, நல்லாட்சி அடிப்படையில் கூட்டணி அமைக்கப்படும். தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைய சக்தி கேந்திரப் பொறுப்பாளர்கள் சபதம் ஏற்க வேண்டும்” என்று பேசிய போது, மறுநாள் நாளிதழ்கள் அதற்குக் கொடுத்த தலைப்பு:“இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் தமிழகம்”
ஆனால் காலத்தின் விசித்திரமாக – அதே அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தற்போது கூட்டணி வைத்திருக்கின்றன.
சிலவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பதே பிழையாகிவிடும் சூழல் இது.
கவுண்டமணியின் பிரபலமான வசனம் தான் நினைவில் ஓடுகிறது.
“அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா..”
– யூகி