தூக்கமின்றித் தவிக்கும் 15 கோடி மக்கள்!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பைத் தாங்கி வருகிறது. அந்த வகையில் மார்ச் – 18 ஆம் தேதியாகிய இன்று சில முக்கியமான நினைவுகூறல்கள்.

உலக தூக்க தினம்

உலகம் முழுவதும் சுமார் 15 கோடிப் பேர் நாள்தோறும் தூக்கமின்றி தவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம், கவலையே முக்கிய காரணமாக இருக்கிறது.

ஆரோக்கியமான தூக்கமே பல பிரச்சனைகளைத் தீர்க்கிறது. தூக்கமே நல்ல மருந்தாக செயல்படுகிறது.

தூக்கம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2008ஆம் ஆண்டிலிருந்து மார்ச் மூன்றாவது வெள்ளிக்கிழமை (18.03.2022) இத்தினத்தைக் கொண்டாடுகிறது.

****

இந்திய ராணுவத் தளவாட தொழிற்சாலைகள் தினம்

இந்திய ராணுவ தளவாடத் தொழிற்சாலைகள் தினம் மார்ச் 18 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இந்திய நாட்டின் தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப்படைக்கு தேவையான நவீன பாதுகாப்பு சாதனங்களை நாடு முழுவதும் உள்ள 41 ராணுவத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும், பாதுகாப்பு சாதன போர்க்கருவிகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி, சோதனை என்று நிலம், கடல் மற்றும் ஆகாயத்தில் செயல்படக்கூடிய ஒரு விரிவான தயாரிப்பு அமைப்பாக செயல்படுகிறது.

உலகில் ஒரு அரசால் இயக்கப்படும் பாதுகாப்பு சாதன தொழிற்சாலையில் இது மிகப்பெரியது ஆகும்.

இந்தியா, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது அவர்களின் வர்த்தகம் மற்றும் அரசியல் செல்வாக்கை நிலைநாட்டுவதற்கு ஆயுத தளவாட உற்பத்தி அவசியத்தை உணர்ந்து 1775ஆம் ஆண்டு முதன்முதலாக கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் ராணுவக் குழு அமைக்கப்பட்டது.

இதுவே, தற்போதைய இந்திய பாதுகாப்பு உற்பத்தி சாதன தொழிற்சாலைகளுக்கு ஆரம்பமாக அமைந்தது.

****

டீசல் இன்ஜினை கண்டுபிடித்த ருடால்ஃப் கிறிஸ்டியன் பிறந்த தினம்

டீசல் இன்ஜினை கண்டுபிடித்த ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் 1858ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.

இவருடைய உடல்நலம் குன்றியதால் 1879ஆம் ஆண்டு படிப்பை தொடர முடியவில்லை. அந்த நேரத்தில், சல்ஸர் பிரதர்ஸ் மிஷின் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் சேர்ந்து பொறியியல் நுணுக்கங்களைக் கற்றார்.

பிறகு இவர் தனது பேராசிரியர் கார்ல் வான் லிண்டேவின் குளிர்சாதனப் பெட்டி தொழிற்சாலையில் சேர்ந்து, நவீன முறையில் குளிர்சாதனப் பெட்டியை வடிவமைக்க உதவினார்.

அடுத்த ஆண்டே இந்நிறுவனத்தின் இயக்குநரானார். இருவரும் இணைந்து பல இயந்திரங்களை வடிவமைத்தனர்.

இவர் இன்ஜின்கள் குறித்தும் ஆராய்ந்தார். அந்த இன்ஜின்களின் திறனை நான்கு மடங்கு அதிகரிக்க முடியும் என்று நம்பினார்.

இதற்காக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து விதவிதமான இன்ஜின்களை வடிவமைத்தார்.

நீராவி இன்ஜினில் 90 சதவீத எரிபொருள் வீணாவதைக் கண்டறிந்து, இறுதியில் அதற்கு பதிலாக ‘கம்ப்ரெஷன் இக்னிஷன்’ இன்ஜினை கண்டுபிடித்தார். அதுவே, இவரது பெயரில் டீசல் இன்ஜின் எனப்படுகிறது.

உலகின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக போற்றப்படும் டீசல் இன்ஜினை உருவாக்கி தொழில் வளர்ச்சியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய இவர் 1913ஆம் ஆண்டு மறைந்தார்.

Comments (0)
Add Comment