அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக்க விரும்பியவர் அண்ணா!

  • வாஜ்பாய்

மீள்பதிவு:

மொழி குறித்த விவாதங்கள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில் பாரதப் பிரதமராக இருந்த வாஜ்பாய் தன்னுடைய கவிதை நூலின் தமிழ் மொழி பெயர்ப்புக்கு எழுதியிருக்கிற முன்னுரை, எப்படிப்பட்ட தோழமையுணர்வும், புரிந்துணர்வும் இருக்க வேண்டும் என்பதற்கான காலத்தின் சாட்சியத்தைப் போலிருக்கிறது.

இதோ அந்த நூலில் இருந்து:

“ஆங்கிலம் நம்மை ஆண்ட வெளிநாட்டவரின் மொழி தான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய ‘எஜமானர்களை’ நாம் திருப்பி அனுப்ப முடிந்தது.

எப்படி நம் இந்தியத் தாய்நாடு வெளிநாடுகளிலிருந்து பல உயிர் காக்கும் முறைகளைப் பெற்றுக் கொண்டதோ, அதே முறையில் ஆங்கிலத்தையும் தமதாக்கிக் கொண்டது.

ஆங்கிலம் மிகச் சிறந்த வளப்பமான மொழி. நமக்கு மிகுந்த பயன்களைக் கொடுக்கும் மொழி. இந்தியாவில் பலர் இந்த மொழிக்கு மெருகேற்றி மிளிரச் செய்தது வரலாறு.

எனவே ஆங்கிலம் உலக மொழியாக இருப்பினும், பாரதத்தில் நமக்கு அது அந்நியமொழி அல்ல. நம்முடைய இந்திய மொழிகளின் குடும்பப் பரம்பரையில் ஒரு சகோதரியாகத் தான் ஆங்கிலம் இன்றும் இருக்கிறது.

நம்முடைய நாட்டின் சிறப்பு அம்சமாகிய “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கொள்கைக்கு இதுவும் ஒரு சான்று.

இந்தியும், தமிழும் சிலரால் தவறாக “இரண்டு துருவங்கள்” என்று கருதப்படும்போது, என்னைப் பொறுத்தவரை நான் காலத்தினால் அழியாத குறள்பாக்களைப் படைத்த திருவள்ளுவரையும், தேசபக்திப் பாடல்களால் சுதந்திரக் கனலை எழுப்பிய மகாகவி சுப்பிரமணிய பாரதியையும், உலகிற்கு அளித்த தமிழின் பால் மிகுந்த அன்பும், அளவற்ற பற்றும் கொண்டவன் என்று சொல்லிக் கொள்ள விழைகிறேன்.

இந்திய இலக்கிய, கலாச்சார, கலைத்துறைகளின் ஏற்றத்தில் தமிழர்களின் சீரிய பங்கு அளப்பரியது. அதே போல இந்தியாவின் மாபெரும் சமூக, பொருளாதாரத்துறை வளர்ச்சியில் தமிழ் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் கணிசமான பங்கு உண்டு.

சிங்கப்பூர், இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலே கூடப் பேசப்படுகின்ற உலக மொழி தமிழாகும்.

என்னுடைய கவிதைகள் தமிழில் வெளியிடப்படும் இந்த நேரத்தில் எனது கெழுதகை நண்பர் அமரர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்களை நினைவுகூர்ந்து ஒரு தனிப் பாராட்டுரை கூற நான் பெரிதும் விரும்புகிறேன்.

தமிழகத்தின் தலை சிறந்த தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான இப்பெருமகனார் எனது இனிய நண்பர்.

அதுமட்டுமல்ல, எங்களது நட்பு ஒருவர் பால் மற்றவர் கொண்ட நம்பிக்கையாலும், மரியாதையாலும் பெரிதும் வளர்ந்தது. இந்த நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது.

நானும், அவரும் 1960 களில் ராஜ்யசபா உறுப்பினர்களாகத் தில்லியில் இருந்தோம்.
அறிஞர் அண்ணா அவர்கள் இந்திய மொழிகள் எல்லாவற்றையும் நம் அரசியல் சாசனத்தின் கீழ் தேசிய மொழிகளாகக் கொண்டு வரவேண்டும் என்று நியாயமாக விரும்பினார்கள்.

சிலர் நினைப்பது போல அண்ணா அவர்கள் இந்திக்கு எதிரானவர் அல்ல. இது பற்றி ஒரு சிறு சம்பவத்தை நினைவுகூர்வது எனது கடமை.

1965 ம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தின் போது அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

“இந்தி மொழி பால் எங்களுக்கு என்ன வெறுப்பு? ஒளிவுமறைவின்றி நான் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். எந்த மொழியின் மீதும் எங்களுக்கு வெறுப்பு கிடையாது.

அதிலும் முக்கியமாக என் அருமை நண்பர் திரு.வாஜ்பாய் அவர்கள் பேசும் போது இந்தி மொழி ஒரு நல்ல மொழியாகவே இருக்கிறது என எண்ணுகிறேன்” என்றார்.

எனவே இந்தத் தமிழ் வெளியீட்டை என் அருமை நண்பர் மாபெரும் அண்ணா அவர்களின் நினைவுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்.”

2002 ஜனவரி 13 ஆம் தேதியன்று புது தில்லியில் டாக்டர்.கி.வேங்கட சுப்ரமணியன் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்ட ‘வாஜ்பாய்-31 ஒரு கவிதைத் தொகுப்பு’ என்ற நூலுக்கு வாஜ்பாய் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி.

Comments (0)
Add Comment