மைனா, சாட்டை போன்ற தரமான சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை எடுத்த ஷாலோம் ஸ்டுடியோ ஜான் மேக்ஸ் அவர்களின் தயாரிப்பில் ஆறாவது படைப்பாக ‘கா’ திரைப்படம் உருவாகி வெளியாகவுள்ளது.
இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவதாரம் எடுக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.
கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளில் சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும், மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் புகைப்படக் கலைஞராக (Wildlife Photographer) கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த சலீம் கவுஸ் வனத்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் சின்னத்திரை புகழ் கமலேஷ், காற்றுக்கென்ன வேலி புகழ் அக்ஷிதா, சூப்பர் டீலக்ஸ் பட புகழ் நவீன், கும்கி பட புகழ் மூணார் சுப்பிரமணியன் ஆகியோருடன் அர்ஜுன் சிங் என்கிற புதுமுக நடிகரும் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க காட்டின் பின்னணியில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாஞ்சில் இயக்கியுள்ளார்.
’கத்தாழ கண்ணாலே’ பாடல் புகழ் சுந்தர் சி பாபு இசையமைக்கிறார். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எலிசா படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த படம் பார்ப்பவர்களை ஒரு அடர்ந்த காட்டுக்குள் சென்று வந்த திகில் அனுபவத்தை நிச்சயமாக கொடுக்கும் என்கின்றனர் படக்குழுவினர். படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
காடுகளில் நிறைய காட்சிகளை ரிஸ்க் எடுத்து படமாக்கி உள்ளதாலும், வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா இந்த படத்தில் நடித்திருப்பதாலும் இந்தப் படம் நிச்சயம் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி சிறப்பாக இருக்கும் என நம்பலாம்.
-யாழினி சோமு