இன்னும் இரண்டு ஆண்டுகளில் மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத பின்னடைவை சந்தித்து வருகிறது.
கடந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் நடந்தது.
இப்போது நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல் முடிவே அப்போதும் எதிரொலித்தது என்பது ஆச்சர்யமான உண்மை.
என்ன ஆச்சர்யம்?
கடந்த ஆண்டு நடந்த தேர்தலின்போது புதுச்சேரியில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.
ஆனால், கடைசி ஒரு மாதத்தில் கட்சி மாறிகளால் நிகழ்ந்த கோளாறால் அங்கு ஆட்சியை இழந்தது.
கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.
மேற்குவங்க மாநிலத்தில் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கமுடியவில்லை.
அதன்பிறகு பஞ்சாபில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.
கடந்த ஆண்டு புதுச்சேரியில் ஆட்சியை இழந்தது போல் இந்த ஆண்டு பஞ்சாபில் ஆட்சியை இழந்துள்ளது.
மற்ற 4 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக உ.பி.யில் இரண்டு இடங்களில் மட்டும் வென்றுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியை எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய சவால் – ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் மாநில சட்டசபை தேர்தல்.
ஏனென்றால் இந்தியாவில் இந்த இரு மாநிலங்களில் மட்டும் தான் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
(மகாராஷ்டிரா, ஜார்கண்டில் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றுள்ளதை, காங்கிரஸ் ஆளும், மாநிலம் என்ற லிஸ்டில் சேர்க்க முடியாது)
சத்தீஸ்கரிலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் தோற்கும் பட்சத்தில், ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியில் இல்லாமல் காங்கிரஸ் சந்திக்கும் முதல் பொதுத்தேர்தலாக இருக்கும்.
எனவே இந்த இரண்டு மாநிலங்களில் வென்றால் தான் கொஞ்சநஞ்ச மரியாதையை காங்கிரஸ் காப்பாற்ற முடியும்.
2014 தேர்தலில் காங்கிரஸ் தோற்றதும் தலைவர் பதவியில் இருந்து சோனியா விலகினார்.
ராகுல் பொறுப்புக்கு வந்தார். 2019 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் தோற்றது.
ராகுல் விலகினார். சோனியா தற்காலிக தலைவராக பதவி ஏற்றார். இன்னும் நீடிக்கிறார். ஆனால் செயல்படவில்லை. காரணம் உடம்பு ஒத்துழைக்கவில்லை.
5 மாநிலத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று விலகுவதாக அறிவித்தார்.
காரியக் கமிட்டி உறுப்பினர்கள் ஏற்கவில்லை.
காங்கிரஸ் அல்லாத குடும்பத்தில் இருந்து வரும் தலைவரை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
திமுக எத்தனை தோல்வியை சந்தித்தாலும் கருணாநிதிக்காக மட்டுமே, கட்சி உயிர்ப்புடன் இருந்ததோ அதுபோல் தான் காங்கிரசும்.
எத்தனை தோல்வியை சந்தித்தாலும், அந்த கட்சி நேரு குடும்ப வாரிசுகளிடம் தான் பத்திரமாக இருக்க முடியும் என தொண்டர்கள் நம்புகிறார்கள்.
எனவே, பிரியங்காவை அகில இந்திய தலைவர் பதவியில் அமர்த்தும் திட்டத்தை செயல்படுத்த மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாது, இன்னும் இரண்டு ஆண்டுகள் தேசம் முழுவதையும் பிரியங்கா சுற்றி வந்தால், காங்கிரஸை பிழைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை கட்சிகாரர்களிடம் உள்ளது.
சோனியாவும், ராகுலும் ஓகே சொல்லி விட்டால், பிரியங்கா தலைவர் பதவி ஏற்பார்.
சில தினங்களில் மாற்றங்கள் நடக்கலாம்.
- பி.எம்.எம்
17.03.2022 4 : 30 P.M