அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு செல்லும்!

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கலாம் என உயர்நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பல்வேறு மருத்துவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,

“மாநில அரசு பிறப்பித்த அரசாணைக்கு எந்த தடையும் கிடையாது’’ என கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது.

இதையடுத்து 2022ம் ஆண்டு மருத்துவ கலந்தாய்வின் போது 50 சதவீத இடஒதுக்கீட்டை பயன்படுத்த தடை கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,

அதற்கு தடை விதிக்க மறுத்ததோடு, இந்த ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டு அதுசார்ந்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த என்.கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்திருந்த ரிட் மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்குகிறோம்.

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு தந்த அரசாணையை இடைக்காலமாக செயல்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் மருத்துவ உயர்படிப்புகளில் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிரான ரிட் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம். 50% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பிரதான வழக்கு விடுமுறைக்குப் பிறகு விசாரிக்கப்படும்” என்றனர்.

16.03.2022  12 : 30 P.M

Comments (0)
Add Comment