– மக்களவையில் கனிமொழி கேள்வி
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதில், தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்.பி.யான கனிமொழி மக்களவையில் பேசும்போது, ரயில்வேதுறை மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கும்போது தெற்கு ரயில்வேக்கு குறைந்தபட்ச நிதி ஒதுக்கி மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.
”வட இந்தியா, தென் இந்திய பகுதிகளில் இயக்கப்படும் ரயில் பெட்டிகளில் வித்தியாசம் இருப்பதாகக் கருதுகிறேன். தென் இந்தியாவில் ரயில் பெட்டிகளில் தண்ணீர் ஒழுகுவது போன்ற குறைபாடுகள் இருக்கின்றன. இதனால், பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். ரயில் பெட்டிகள் பாதுகாப்பற்றதாகவும் இருக்கின்றன.
நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்:
2022-23-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.59 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வட இந்திய ரயில்வேக்களுக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் பட்ஜெட்டில் 101 முறைக்கு மேல் புதிய ரயில் பாதைகளுக்காக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் தெற்கு ரயில்வேயைவிட வடக்கு ரயில்வேக்களுக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் தெற்கு ரயில்வேயில் ரூ.308 கோடி மட்டுமே புதிய ரயில் பாதை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், வட இந்திய ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 31,008 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே 17 கி.மீ. புதிய ரயில்வே பாதை திட்டத்துக்கு 59 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை-போடிநாயக்கனூர் இரட்டைப்பாதை திட்டத்துக்கு ரூ.125 கோடி, திருச்சிராப் பள்ளி-காரைக்கால்-வேளாங்கண்ணி முதல் திருத்துறைப்பூண்டி வரையிலான அகலப்பாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ. 121 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் சில உதாரணங்கள்தான்.
இங்குள்ள எங்கள் பிரதிநிதிகளின் சார்பில் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறேன். வடக்கு ரயில்வேக்கு வழங்கப்படுவதற்கும், தெற்கு ரயில்வேக்கு வழங்கப்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் பார்க்கும்போது எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
நீங்கள் அனைவருக்குமான இந்தியா, ஒரே நாடு என்று பேசுகிறீர்கள். ரயில்வேயும் ஒரே நாடு போலத்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். நிறுத்தப்பட்ட ரயில்கள், நிறுத்தங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்.
மக்கள் அவதியுறுகிறார்கள். ரயில் பெட்டிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தெற்கு ரயில்வேயை மேம்படுத்தப்பட வேண்டும்” என்று கனிமொழி வலியுறுத்தினார்.
16.03.2022 12 : 30 P.M