‘மாறன்’ – தனுஷுக்கு என்னாச்சு?!

தற்போதிருக்கும் நாயக நடிகர்களில் கதைத் தேர்வில் மிகக்கவனமாக இருப்பவர் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் நம்பப்படுபவர் தனுஷ். ‘அவரா இப்படி’ என்று ‘நய்யாண்டி’தனமாக சில திரைப்படங்களைத் தருவார்.

அந்த வரிசையில் ஒன்றாக இடம்பெறுகிறது டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ‘மாறன்’.

பத்திரிகையாளர்கள் பாவம்!

சத்தியமூர்த்தி (ராம்கி) ஒரு நேர்மையான பத்திரிகையாளர். அவரது மனைவி அமுதா (ஜீவிதா) நிறைமாத கர்ப்பிணி. மகன் மதிமாறனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், சத்தியமூர்த்தியை வழிமறிக்கிறது ஒரு கும்பல். அவர் எழுதிய செய்திக்காக படுகொலையில் ஈடுபடுகிறது.

அதேநேரத்தில் பிரசவத்தின்போது அமுதா ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்துவிட்டு இறந்துபோகிறார். இதையடுத்து மதிமாறனே அக்குழந்தைக்கு தாயப்பனாக மாறுகிறார்.

சில ஆண்டுகள் கழித்து, தங்கை ஸ்வேதா (ஸ்ம்ருதி வெங்கட்) உடன் பாசமும் சண்டையுமாக பொழுதைக் கழித்து வருகிறார் மதிமாறன். தந்தை வழியில் நேர்மையான ஊடகவியலாளராக வாழ்கிறார்.

இதனால், அடிக்கடி வெவ்வேறு நிறுவனங்கள் மாறுகிறார். அவ்வாறு புதிய நிறுவனத்தில் அவர் தரும் புலனாய்வுச் செய்தியால் முன்னாள் அமைச்சர் பழனியோடு (சமுத்திரக்கனி) மோதல் ஏற்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஒருநாள் ஸ்வேதா கடத்தப்படுகிறார். அவர் இருக்குமிடம் தேடிச் செல்லும் மதிமாறனுக்கு உடல் கருகிய நிலையில் ஒரு பெண் பிணமே பதிலாக கிடைக்கிறது.

உருக்குலைந்து போகும் மதிமாறன், இச்சதிக்குப் பின்னால் இருப்பவர் யார் என்று கண்டுபிடித்தாரா இல்லையா என்பதைச் சொல்கிறது மீதிக்கதை.

புலனாய்வுச் செய்திகள் எழுதுவதென்பது ஒரு தனிக்கலை. அதற்காக, அவர்களை சிஐடி ரேஞ்சுக்கு காட்டுவதெல்லாம் ரொம்ப ஓவர். அப்படி ஒருவர் இறங்கினால், ஒரு செய்திக்கட்டுரையோடு நடையைக் கட்ட வேண்டியதுதான்.

இந்த யதார்த்தம் திரையில் பளிச்சென்று தெரியாமல் போயிருப்பதுதான் ‘மாறன்’ தரும் அயர்ச்சிகளில் முதன்மையானது.

டோட்டலி ஓல்டு!

‘ஓல்டு ஒயின் இன் தி நியூ பாட்டில்’ என்ற சொலவடை ஆங்கில சினிமா விமர்சனங்களில் அதிகம் இடம்பெறும். மொத்தப் படமும் அரதப்பழசாகத் தோன்றினால் ‘பழைய புட்டியில் பழைய கள்ளு’ என்றாகிவிடும்.

கிட்டத்தட்ட அப்படியொரு கதையை ‘மாறன்’ படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

அப்பாவும் அம்மாவும் இறந்து போனபிறகு, அக்காவும் தம்பியும் தன்னந்தனியாக வளர்கிறார்கள் என்று 80களில் வெளியான ‘பழிக்குப் பழி’ ரேஞ்ச் திரைப்படங்களில் பார்த்திருப்போம். அண்ணனின் காதலியை பரிசோதிக்கும் தங்கைகளை 2000களில் கண்டிருப்போம்.

இவ்வளவு ஏன், நாயகி ஒயின்ஷாப்பில் வைத்து காதல் சொல்வதெல்லாம் 2010லேயே வந்தாகிவிட்டது. இத்தனையையும் தாண்டி புதிதாகச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, பார்த்தவுடன் பிரஷர் ஏறும் அளவுக்கு காட்சிகள் இருந்தால் என்ன செய்வது?

நாளைய செய்தி, கோ, சதுரங்கம் உட்பட வெகுசில படங்களே பத்திரிகை அல்லது ஊடக உலகை வலம் வரும் திரைக்கதைகளை தமிழுக்கு தந்திருக்கின்றன.

ஒரு கமர்ஷியல் திரைப்படத்தில் யதார்த்தம் இல்லாவிட்டாலும், அக்களம் முற்றிலுமாக அந்நியப்படக் கூடாது என்ற மெனக்கெடல் ‘கோ’வில் இருக்கும். இதில் அப்படி எதுவுமே இல்லை.

மாறனைப் பழிவாங்குவதற்காக வில்லன் சொல்லும் காரணம் எல்லாம் பெரியளவில் நியாயப்ப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அப்படியிருந்தால் மட்டுமே, மொத்தக் கதையும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் மிஸ்ஸிங்!

இதைத் தாண்டி சொல்வதற்கு படத்தில் பெரிதாக காட்சிகளும் இல்லை. அதேநேரத்தில் கார்த்திக் நரேன் முந்தைய படமான ‘மாஃபியா’ பார்த்தவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியைத் தராது.

தனுஷின் தேர்வா இது?

‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘பொல்லாதவன்’, ‘வேலையில்லா பட்டதாரி’ உட்பட தனுஷின் படங்களில் குறிப்பிடத்தக்க அளவில் ஏதோ ஒரு அம்சம் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும்.

கமர்ஷியல் படம் என்பதையும் மீறி, ‘இவன் நம்மள்ல ஒருத்தன்’ என்று ரசிகர்களைக் கொண்டாட வைத்திருக்கும். சமீபகாலமாக அந்த மேஜிக்கை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதை ‘கர்ணன்’, ‘பட்டாஸ்’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘ஜகமே தந்திரம்’ போன்ற படங்கள் காட்டின.

‘பாட்ஷா’ டைப் திரைக்கதைகளே அவரது பலம் என்பதை மறந்துவிட்டு ‘பீமா’ ரேஞ்சுக்கு திரையில் வந்து போவதை என்னவென்று சொல்வது?

இந்த அதீத பில்டப்கள் ‘மாயை’ என்று நன்றாகத் தெரிந்தும் அதனை அவர் அனுமதிக்க காரணம் என்ன? இந்த கேள்விகள் ‘மாறன்’ பார்த்ததும் உச்சம் தொடுகின்றன.

தனுஷே திரையில் துண்டாகத் தெரியும்போது மாளவிகா மோகனன், ஸ்ம்ருதி, சமுத்திரக்கனி, நரேன் உட்பட வேறு எவரது நடிப்பும் நம்மைக் கவரவில்லை.

இயக்குனர் அமீரும் அந்த வரிசையில் இணைந்து போயிருப்பது சோகம்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் ‘ஏதோ இருக்கு’ என்று சொல்ல வைத்தாலும் மனதில் ஒட்டவில்லை. மாறாக, அவரது பின்னணி இசை காட்சிகளில் இல்லாத அழுத்தத்தை ஒட்டவைக்க முயன்றிருக்கிறது.

விவேகானந்தம் சந்தோசத்தின் ஒளிப்பதிவும் ஜிகே பிரசன்னாவின் படத்தொகுப்பும் இயக்குனரின் சொல்பேச்சு கேட்கும் பணியைத் தந்திருப்பதை காட்டுகிறது.

துருவங்கள் பதினாறு படத்தில் ’பீட்சா’ போன்று கதை சொல்லலில் ஒரு ‘அட’ போட வைத்திருப்பார் கார்த்திக் நரேன். தவிர படத்தில் சில காட்சிகள் உருவாக்கப்பட்ட விதம் ‘வாவ்’ என்று சொல்ல வைத்திருக்கும்.

‘மாறன்’ படத்தில் சில பிரேம்கள் அழகாக தெரிந்தாலும், அவை நமக்கு பிளாஸ்டிக் வாசனையையே நினைவூட்டுகின்றன.

மருந்துக்கு கூட திரைக்கதைக்கான பின்னணியைச் சரிபார்ப்பதிலும், அதனை ஒழுங்குபடுத்துவதிலும் ஆர்வம் காட்டவில்லை என்பது பளிச்சென்று தெரிகிறது.

சரிந்த எதிர்பார்ப்பு!

பாடலாசிரியர் விவேக் மற்றும் மலையாள திரைக்கதையாசிரியர்கள் சுஹாஸ் – ஷர்பு இணை ‘மாறன்’ முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவதாகத் தகவல்கள் வந்தன.

இது, திரையில் புதுவித கதை சொல்லலை காணும் ஆர்வத்தை உருவாக்கியிருந்தது. ஆனால், படம் தந்ததோ அதற்கு மாறான ஏமாற்றத்தைத்தான்.

கார்த்திக் நரேன் எந்தளவுக்கு திரைக்கதை எழுத இவர்களின் துணையை பயன்படுத்திக் கொண்டார் என்பது தெரியவில்லை.

கண்டிப்பாக, அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பை முற்றிலுமாகச் சரித்திருக்கிறது இத்திரைப்படம் என்பதே உண்மை.

மற்ற எல்லோரையும்விட, ‘மாறன்’ படத்தைக் காண ரசிகர்கள் முண்டியடித்ததற்கு ஒரே காரணம் தனுஷ் மட்டுமே. இந்த படத்தை பார்த்தபிறகு ‘தனுஷுக்கு என்னாச்சு’ என்ற ஒற்றைக் கேள்வியைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை!

– உதய் பாடகலிங்கம்

16.03.2022  12 : 10 P.M

Comments (0)
Add Comment