முழு விடுதலை கிடைக்க ஒத்துழைப்பு தாருங்கள்!

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் கோரிக்கை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

அவர்களில் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 9-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட பரோல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, இன்று புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் வெளியே வந்த பின்னர் பேசிய அவரது தாயார் அற்புதம்மாள்:

“நீதிக்கான 31 ஆண்டுகால நீண்ட போராட்டத்தில், மிகவும் முக்கியமான காலகட்டம் இது.

விடுதலை என்ற முழுமை நிலையை எட்ட, காலம் இன்னும் கைகூடவில்லை என்ற நிலையில் கிடைத்திருக்கின்ற இந்தப் பிணை ஓர் இடைக்கால நிவாரணம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என மிக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எனது மகன் உள்ளிட்ட அனைவரும் முழுமையாக விடுதலை பெறும்வரை, உங்கள் அனைவரது ஆதரவும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு, எங்கள் போராட்டம் தொடர்கிறது.

இதுவரை காலமும் எங்களின் நீதிக்கான போராட்டத்திற்கு துணை நின்று வரும் தமிழக முதல்வர், தமிழக அரசு மற்றும் எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்து அமைப்பினருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

என்னுள் நினைவுகளாக உறைந்துவிட்ட அன்பு மகள் செங்கொடியை நெஞ்சிலேந்தி, இத்தனை ஆண்டுகளாக எனது மகனின் உண்மை நிலை உணர்ந்து ஆதரவளித்து வரும் ஊடக நண்பர்கள், திரைப்படத்துறையினர், வழக்கறிஞர்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்திலும், தமிழகம் தாண்டி வசிக்கும் வெகு மக்களின் ஆதரவும், புரிதலுமே 31 ஆண்டுகளுக்குப் பிறகாவது, இந்த நிலையை எட்டக்கூடிய வாய்ப்பை தந்துள்ளது.

எனவே அவரவர் சக்திக்கு ஏற்ப சிறிதும் பெரிதுமாக இத்தனை ஆண்டுகளும் உதவியாக இருந்த அனைவரையும் தனித்தனியே சந்தித்து நன்றிகூற விருப்பம் இருப்பினும், தற்போது அது சாத்தியமற்றது என்பதை நீங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

முழுமையான விடுதலை கிடைத்து, அதற்கான சூழல் ஏற்படும் நாளில், விடுதலைக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லும் வாய்ப்பாக நானும், எனது மகனும் காத்திருக்கிறோம்.

எனவே தற்போது தற்காலிகமாக கிடைத்துள்ள இந்த இடைக்கால பிணையின் போது, அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

எனது மகனுக்கு பிணை கிடைக்க காரணமாக அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment