சீனாவில் மீண்டும் கொரோனா வேகம் எடுத்திருக்கும் நிலையில் காலத் தேவை கருதி ஒரு மீள்பதிவு.
***
கொரோனா – பலருடைய உடலில் ஏற்படுத்தியிருக்கிற பாதிப்பு குறைவு. மனங்களில் ஏற்படுத்தியிருக்கிற, ஏற்படுத்திக் கொண்டிருக்கிற பாதிப்புகள் அதிகம்.
கொரோனா உருவானதாகச் சொல்லப்படும் சீனாவின் பொருளாதாரத்தையே அது சீர்குலைத்திருக்கிறது. ஏற்றுமதி குறைந்து போனது. பாதுகாப்பு ஏற்பாடுகளை அவசரத்துடன் செய்ய வேண்டியிருந்தது.
மக்களில் ஒரு சாராரைப் பாதுகாப்புக்காகத் தனிமைப்படுத்த வேண்டியிருந்தது. பல நாடுகளுடன் சீனா கொண்டிருந்த வர்த்தக உறவுகள் துண்டிக்கப்பட்டன.
இன்னும் சில காலத்திற்கு சீனாவுக்குச் சுற்றுலாப் பயணிகள் வருவது கூட குறைந்து போகலாம். அங்கிருந்து இறக்குமதி செய்யப் பல நாடுகள் முன்னுக்கு வரச் சில ஆண்டுகள் ஆகலாம்.
கொரோனா ஏற்படுத்தியிருக்கிற அதிகபட்சப் பாதிப்பு இது தான். வெறுமனே சீன மக்கள் சாப்பிடுகிற உணவுப் பொருட்களைக் காரணங்காட்டி மீம்ஸ் போடுகிறவர்கள் தங்கள் அறியாமையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சீன மக்கள் தற்போது மட்டும் இந்த உணவுகளைச் சாப்பிடவில்லை. எப்போதும் சாப்பிடுகிறவை தான்.
செரிமானத்திற்கேற்ற வகையிலும் உணவில் பலவற்றைச் சேர்த்தும், க்ரீன் டீ போன்றவற்றை இயல்பாகக் கொண்டது அவர்களுடைய உணவுமுறை.
அந்த உணவைப் பற்றித் தற்போது சமூகவலைத் தளங்களில் பரவும் செய்திகள், இன்னொரு விதத்தில் உணவு அரசியல் ஆதிக்க மனோபாவம் கொண்டவை.
உலக நாடுகளுக்கிடையே நடக்கும் பொருளாதார ஆதிக்கம் செலுத்தும் மறைமுகப் போட்டியில், சீனாவைப் பின்னுக்கு நகர்த்தும் அரசியலும், கொரோனாவுக்குப் பின்னால் இருக்கிறது.
இதற்கு முன் காலரா, மலேரியா, அம்மை, விதவிதமான காய்ச்சல்கள் உலக அளவில் பரவி ஏகப்பட்ட உயிர்களைப் பலி வாங்கியிருக்கின்றன.
அப்போதெல்லாம் இப்போதிருக்கிற அளவுக்கு ஊடக வெளிச்சம் கிடைக்காததால், வெறுமனே புள்ளி விபரங்களாக மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.
பொதுவுடமைச் சிந்தனை மிஞ்சியிருக்கும் நாடுகளில் ஒன்று சீனா. அதே சமயம் மரபார்ந்த பாரம்பரிய மருத்துவ மரபுக்கு முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கும் நாடும்கூட.
இப்போதும் அங்கு அலோபதி மருத்துவ முறையை விட, சீனாவின் பாரம்பரிய மருத்துவ மரபுக்கே அந்த நாட்டில் முக்கியத்துவமும், முன்னுரிமையும் தருகிறார்கள். எந்த மருத்துவமனைக்குப் போனாலும், அங்கு அதை உணர முடியும்.
சீன மருத்துவ மரபும் பல்லாண்டு காலப் பின்னணி கொண்டது. சீனர்களின் வாழ்வியலோடு ஒன்றிய ஒன்று.
இந்திய மருத்துவ மரபோடு இணைந்த ஆயுர்வேத, சித்த மரபைவிட மிஞ்சிய நிலையில் அலோபதி மருத்துவமுறை இந்தியாவில் முன்னணியில் இருப்பதைப் போன்ற திட்டமிட்ட மாற்றம் சீனாவில் இல்லை.
இன்றும் அங்கு அவர்களுடைய மருத்துவ மரபுக்கே முன்னுரிமை.
அந்தப் பாரம்பரியமான நம்பிக்கையின் மீது கல்லை எறிந்திருக்கிறது கொரோனா.
எப்படி சீனாவில் சட்டென்று பரவியது கொரோனா? இதற்குப் பின்னிருக்கிற அரசியல் என்ன? என்பதெல்லாம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.
சில ஆயிரம் ஆண்டுகாலப் பழமையும், பாரம்பரியப் பண்பும் கொண்ட சீன மருத்துவ மரபின் மூலம் தற்காலிகமாக ‘கொரோனா’ மூலம் அடைந்திருக்கிற தற்காலிகமான தடுமாற்றத்திலிருந்து மீண்டு சீனா எழுந்துவிடும்.
வள்ளுவன் சொன்ன மாதிரி – ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ என்பதை ஆராய வேண்டியிருக்கிறது.
சீனாவில் பிரபலமான பழமொழி:
‘விரல் சந்திரனைச் சுட்டுகிறது. முட்டாள் விரலைப் பார்க்கிறான்’.
அதே மாதிரி தான்.
நாம் கொரோனா விஷயத்தில் – விரலை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
– அகில் அரவிந்தன்