காங்கிரஸ் மீள்வதற்கு இரண்டு வழிகள்!

ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வி காங்கிரஸ் தொண்டர்களை ரொம்பவே சோர்வடைய செய்துள்ளது.

இந்திரா காந்தி குடும்ப உறுப்பினர்கள் காலம் காலமாக போட்டியிட்டு ஜெயித்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டு விட்டது என சொன்னால் தப்பில்லை.

387 பேர் டெபாசிட் காலி.

உ.பி.யில் மொத்தம் 403 தொகுதிகள். காங்கிரஸ் கட்சி 399 இடங்களில் தனித்து களம் இறங்கியது.

இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 387 தொகுதிகளில், காங்கிரஸ் டெபாசிட் இழந்துள்ளது.

அதனை விட இன்னொரு அதிர்ச்சியூட்டும் செய்தியும் உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 2.4 % வாக்குகளே கிடைத்துள்ளன. 399 இடங்களில் போட்டியிட்டு, இந்த சதவீதத்தை எட்டியுள்ளது.

உ.பி. தேர்தலில் முன்னாள் பிரதமர் சரண்சிங் தோற்றுவித்த ராஷ்டிரிய லோக்தளம் (ஆர்.எல்.டி), சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. அந்தக் கட்சிக்கு 33 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

அந்தக் கட்சி பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? 2.9 % காங்கிரசைக் காட்டிலும் அதிகம்.

33 தொகுதிகளில் நின்று, ஆர்.எல்.டி 2.9 % பெற்றுள்ள நிலையில் 399 தொகுதிகளில் களம் இறங்கி காங்கிரஸ் வெறும் 2.4 % வாங்கி இருப்பது, அந்தக் கட்சியின் அழிவாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தே அந்த வார்த்தையைப் பயன்படுத்தி விட்டார்.

”கட்சிக்காக வாழ்க்கையை தியாகம் செய்த என் போன்ற தலைவர்கள், எங்கள் கண் முன்னால் காங்கிரஸ் உயிரிழப்பதை எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்?’’ என ஆசாத் கண்ணீர் வடிக்கிறார்.

மீளும் வழி என்ன?

தொண்டர்களைத் தேற்றுவதற்காக ராகுல்காந்தி சம்பிரதாய அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ’’இந்தத் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம்’’ என்கிறார்.
காலம் கடந்து விட்டது.

தோல்வி புதிதல்ல.

2014 முதல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர் தோல்வி தான். அப்போதே பாடம் கற்றிருக்க வேண்டும்.

சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவர் கையில் தான் இப்போது கட்சி உள்ளது.

மூவருமே தீவிர அரசியல்வாதிகள் கிடையாது.

சோனியாவுக்கு உடல் நலம் சரியில்லை. கட்சியைக் கட்டமைக்க அவரால் தீவிரம் காட்ட முடியாது.

ராகுலும், பிரியங்காவும் தேர்தல் சமயத்தில் மட்டுமே முகம் காட்டுகிறார்கள்.

எனவே முழு நேரமும், அதாவது 24 மணி நேரமும் பாடுபடும் தலைவரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.

இது ஒரு வழி.

இன்னொரு  வழி, காங்கிரசில் இருந்து வெளியேறி செல்வாக்குடன் உள்ள  தலைவர்களை அழைக்கலாம்.

மம்தா, ஜெகன்மோகன் ரெட்டி, ரங்கசாமி போன்ற முதலமைச்சர்களையும், சரத் பவார் போன்ற செல்வாக்கு மிக்கவர்களையும் மீண்டும் கட்சிக்குள் இழுக்கலாம்.

இதனால் காங்கிரஸ் நிச்சயம் புத்துயிர் பெறும். புது பலத்தோடு 2024 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளலாம்.

சோனியா முயற்சி எடுப்பாரா?

-பி.எம்.எம்.

Comments (0)
Add Comment