தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் வரலாறு!

நூல் வாசிப்பு:

● நூற்றாண்டைக் கண்ட திராவிட இயக்கத்தின் வரலாற்றை விரல் நுனியில் வைத்திருப்பவர், திராவிட வரலாற்று ஆய்வாளர் க. திருவுக்கரசு. நீதிகட்சியின் வரலாற்றை எழுதி நூலாக தந்தவர்.

● தற்போது திராவிட இயக்க வரலாற்றை எழுதும் பணியில் உள்ளார். அந்த வரலாற்று வரிசையில் அவர் படைத்ததுதான் – தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் வரலாறு!

● தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாவதற்கு முன்பே, பெரியாரின் பிரச்சாரம் கம்யூனிச மயமாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும் மதத்தை பற்றிய லெனின் புத்தகத்தையும் பெரியார் தனது – சுயமரியாதை பிரச்சார வெளியீடாக கொண்டு வந்தார்.

● பெரியாரின் குடிஅரசு ஏட்டில் தான் ‘சிந்தனைச் சிற்பி’ சிங்கார வேலர் தனது கட்டுரைகள் வழியாக பொதுவுடைமைக்கான விதைகளை தூவினார்.
அன்றே திராவிட இயக்கம் தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை கொண்டதாகவே இருந்ததாக நூலாசிரியர் தெரிவிக்கிறார்!

● இந்திய தொழிற்சங்க இயக்க வரலாற்றில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. தொழிற்சங்க பதிவுச்சட்டம் ஏற்படுவதற்கு முன்னரே சென்னையில் 1918ல் ‘சென்னை தொழிற்சங்கம்’ உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்தவர் திருவி.க!

● திமுக சார்பில் தொழிற்சங்கங்கள் சென்னையில் 1958ல் பதினொன்றுக்கும் மேலாக இருந்தன. பிற்காலத்தில் திமுக பிரமுகர்களாக இருந்த பலர், அன்று இந்த தொழிற்சங்களால் உருவாகி பின்பு கட்சியில் முன்னணித் தளபதியானார்கள்.

● சென்னையில் – அரங்கண்ணல் | இராகவானந்தம் | என்.வி.என். சோமு | இரகுமான்கான். கோவையில் – உடுமலை நாராயணன் | கோவை செழியன் | காட்டூர் கோபால் | திருப்பூர் துரைசாமி. மதுரையில் சிவசாமி | பெருமாள் | துரைராஜ்.. மற்ற பகுதிகளில் தா. கிருட்டிணன் | நெல்லை ஆறுமுகம்… இப்படிப் பல முன்னோடிகள் என தகவல்களை தருகிறார் திருநாவுக்கரசு.

● அன்று திராவிட தொழிலாளர்கள் தங்களுக்கென்று தனித்தனியாக சங்கங்களை உருவாக்கி போராடி கொண்டிருந்தார்கள்! பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சலவை தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், தூய்மை தொழிலாளர்கள், ரெயில்வே தொழிலாளர்கள், சைக்கிள் ரிக்சா தொழிலாளர்கள், மின்வாரியம், கைத்தறி தொழிலாளர்கள் என தனித்தனியாக!

● இவைகளை இணைத்து ஒரு மத்திய தொழிற்சங்கம் தேவையென்ற கோரிக்கை வர ஆரம்பித்தது. கோவையில் நடந்த திமுக பொதுக்கூழுவில் (20.02.1955) தீர்மானம் கூட
கொண்டு வரப்பட்டது.

● திராவிட முன்னேற்ற கழகத்தின் தொழிலாளர் அணியாக நீண்ட நெடிய காலத்திற்குப்பின், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு – தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை என்ற ‘தொமுச பேரவை’ 01.05.1970ல் துவங்கப்பட்டது. அதுவரை தனியாக இயங்கிய திராவிட தொழிலாளர்கள் சங்கங்கள் அனைத்தும் அதில் இணைக்கப்பட்டன!

● தொமுச பேரவை தமிழகத்தையும் தாண்டி பல மாநிலங்களிலும் தன்னை விரிவு படுத்தியதால் அதற்கு மத்திய தொழிற்சங்க அந்தஸ்தும் கிடைத்தது.

அதன் சிகரமாக, 2012ல் ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் மாநாட்டில், தொமுச பேரவையின் பொதுச்செயலாளரும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திரு. மு.சண்முகம் பங்கு பெற்று உரையாற்றினார் என்ற தகவலையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

● திராவிட இயக்கத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளோர், திமுகவின் தொமுச பேரவையின் வரலாற்றையும் படித்தறிவது அவசியமாகும். அதற்கு இதைவிட வேறு சிறந்த நூல் எதுவும் கிடையாது.

பெரிய பொறுப்போடும் அர்ப்பணிப்போடும் இந்த நூலை படைத்த திருநாவுக்கரசு அய்யாவுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்!

– தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் வரலாறு
– க.திருநாவுக்கரசு
– தளபதி பதிப்பகம்
– பக்கங்கள் 180
– விலை ரூ. 220/-

  • பொ. நாகராஜன்.
Comments (0)
Add Comment