இந்திய சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய நாளாக இன்றைய தினம் (மார்ச்-12) கருதப்படுகிறது.
வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக உப்பு சத்தியா கிரகத்தை அறிவித்த மகாத்மா காந்தி, தண்டியில் உப்பை எடுப்பதற்காக தனது ‘தண்டி யாத்திரை’யை தொடங்கிய நாள் இது.
தண்டி யாத்திரை 92-வது ஆண்டு நிறைவை காணும் இந்நாளில் உப்பு சத்தியா கிரகத்தைப் பற்றியும், காந்தியின் தண்டி யாத்திரையைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
இந்தியர்களின் செல்வங்களையெல்லாம் கொள்ளையடித்து தங்கள் நாட்டுக்கு கொண்டுசென்ற ஆங்கிலேய அரசு, நம் நாட்டு மக்களை மேலும் கசக்கிப் பிழியும் வகையில் உப்புக்கு வரி விதித்தது.
இந்தியர்கள் யாரும் உப்பை தயாரிக்க கூடாது என்றும், ஆங்கிலேய நிறுவனத்திடம் இருந்துதான் உப்பை வாங்கவேண்டும் என்றும் கடுமையான உத்தரவை பிறப்பித்தது.
இதனால் கடும் கோபம் கொண்ட மகாத்மா காந்தி, ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்து தண்டிக்கு பாத யாத்திரையாகச் சென்று உப்பு சத்யாகிரகத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.
அத்துடன் ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தையும் தொடங்கினார்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய எழுச்சியை தண்டி யாத்திரையும், ஒத்துழையாமை இயக்கமும் ஏற்படுத்தியது.
1930-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி 80 சத்தியாகிரகிகளுடன் இணைந்து சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்து மகாத்மா காந்தி, தண்டி யாத்திரையைத் தொடங்கினார். 24 நாட்கள் நீண்ட மிக நீண்ட பயணமாக இது இருந்தது.
இந்தப் பயணம், ஒவ்வொரு ஊரை எட்டும்போதும் அங்குள்ள நூற்றுக்கணக்கானவர்கள் அதில் இணைந்துகொண்டனர்.
இப்படியாக இந்த யாத்திரை தண்டியை எட்டும்போது, அதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தது.
தண்டி யாத்திரையைத் தொடங்கியபோது காந்தியடிகளின் வயது 61. ஆனால் அந்த வயதிலும் அவர் சுறுசுறுப்பாக இருந்தார்.
தண்டி யாத்திரையின்போது தினமும் 10 மைல் தூரம் நடந்த அவர், ஒவ்வொரு ஊரிலும் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார்.
ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு காந்தியின் பாதயாத்திரை தொடங்கும். இதற்காக தினமும் காலை 4 மணிக்கே எழுந்துவிடும் காந்தியடிகள், அன்றைய தினம் தான் செய்ய வேண்டிய வேலைகள், எழுத வேண்டிய கடிதங்கள் ஆகியவற்றை எழுதி முடித்து, தன் தினசரி பிரார்த்தனைகளை முடித்து சரியாக 5.30 மணிக்கு பாத யாத்திரைக்கு தயாராகி விடுவார்.
பாத யாத்திரை செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் பொதுக் கூட்டங்களும் நடப்பதால், ஒவ்வொரு நாளும் அது முடிய இரவு 9 மணிவரை ஆகும்.
அதற்குப் பிறகும், செய்தியாளர்களைச் சந்திப்பது, முக்கியத் தலைவர்களைச் சந்திப்பது என்று முக்கியமான வேலைகளை செய்து முடித்த பின்னரே காந்தியடிகள் படுக்கப் போவார்.
61 வயதிலும் அவர் காட்டிய சுறுசுறுப்பு அனைவரையும் கவர்ந்தது.
இந்தப் போராட்டத்தின்போது ஒவ்வொரு ஊரிலும் பேசிய காந்தியடிகள், அந்நிய துணிகளை நிராகரிக்குமாறும், கள்ளுக் கடைகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுமாறும் பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இது பெண்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டனர். நாட்டில் சுதந்திர வேட்கை முன் எப்போதையும் விட கொழுந்துவிட்டு எரிந்தது.
24 நாட்கள் நீண்ட இந்த 241 மைல் தூரப் பயணம் ஏப்ரல் 5-ம் தேதி தண்டியில் நிறைவு பெற்றது.
இந்தப் போராட்டத்தின் நிறைவில் காந்தியடிகளுடன் ஆயிரக்கணக்கானோர் களத்தில் நின்றனர்.
அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு கடலில் குளித்த காந்தியடிகள், அதன்பின் தொண்டர்களுடன் வெள்ளையர்களின் சட்டத்தை மீறி தண்டியில் உப்பை எடுத்து தனது போராட்டத்தை நிறைவு செய்தார்.
இந்தப் போராட்டத்தின் போது நாடெங்கிலும் சுமார் 95 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரணதி