மார்ச் – 11 உலக பிளம்பிங் தினம்
ஒரு கை முறுக்கேறியிருக்க, இன்னொரு கையில் பைப் ரிஞ்ச். கூடவே முகத்தில் ஆக்ரோஷம், கண்களில் தீவிரம், உடல்மொழியில் வேகம் என்றிருந்தால், அது ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான அற்புதமான புகைப்பட உள்ளடக்கமாக அமையும். நிற்க.
இதுவரை ’பிளம்பர்’ என்ற பெயரிலோ அல்லது அத்தொழிலைச் செய்பவரை முதன்மையாகக் கொண்டோ திரைப்படங்கள் எதுவும் வெளியானதாகத் தெரியவில்லை. நமது நோக்கமும் கூட அது இல்லை.
பிளம்பிங் ஏன் முக்கியம்?
ஒரு கட்டடத்தை கட்டி உருவாக்குவதில் சித்தாளுக்கும் கொத்தனாருக்கும் மேஸ்திரிக்கும் இதர மேற்பார்வையாளர்களுக்கும் வடிவமைப்பாளர்களுக்கும் எவ்வளவு பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு அக்கட்டடத்தில் மின்சார, நீர், கழிவு அகற்றுதல் செயல்பாடுகளுக்கான பணிகளைச் செய்வோருக்கும் இருக்கிறது.
வீடோ, அலுவலகமோ அல்லது வேறு பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட இடமோ எதுவாக இருந்தாலும் நீர் வழி சரியாக அமைந்திருக்க வேண்டும்.
அதாகப்பட்டது, பிளம்பிங் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதோடு, சீரான இடைவெளியில் பராமரிப்புகளும் நிகழ்ந்தாக வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் தினசரி இயக்கமே திக்கற்றுப் போகும்.
சமையலறை, குளியலறை, கழிவறை என்று எவ்விடத்திலும் குழாயில் நீர் வரவில்லை என்றாலோ அல்லது நீர்க்கசிவு ஏற்பட்டாலோ அல்லது கழிவுநீரும் நன்னீரும் ஒன்றாகக் கலந்தாலோ பிரச்சனைதான்.
அடுக்ககங்களிலும் அடுத்தடுத்து இடைவெளியே இல்லாமல் வீடுகள் நிறைந்துள்ள தெருக்களிலும் வாழ்வோருக்கு இந்த அவஸ்தைகள் நன்கு தெரியும்.
அப்படியொரு சூழ்நிலையில், உடனடியாக ‘நம்ம ஏரியாவுல தெரிஞ்ச பிளம்பர் யாராவது இருக்காங்களா’ என்றுதான் விசாரிப்போம்.
சீர்மைமிக்க பணி!
பிளம்பிங் நன்றாகச் செய்யப்பட்டிருந்தால், அப்பணியைச் செய்தவர் குறித்த நினைவே நமக்கு இராது.
ஒருவேளை அரைகுறையாக பிளம்பிங் வேலைகள் நடைபெற்றிருந்தால், நீர்க்கசிவில் தொடங்கி அந்தக் கட்டடத்தின் அடிப்படையே ஆட்டம் காணும்.
நீர் செல்லும் குழாய்களில் பழுது ஏற்பட்டால் அதைச் சரி செய்வதற்கே மெனக்கெட வேண்டியிருக்கும்போது, சுவரின் உட்பகுதியில், தரைக்கு அடியில் பதிக்கப்பட்ட குழாய்களும் இணைப்புகளும் பழுதானால் நம் நிலைமை என்னவாகும்.
நீர்தேக்க தொட்டியை கட்டடத்தின் மேற்பகுதியில் அமைத்தது போதாதென்று தரைதளத்திற்கு கீழ் ‘சம்ப்’ என்ற பெயரில் பயன்படுத்திவரும் இக்காலகட்டத்தில், பிளம்பிங் சரியாக இருப்பதோடு அவற்றுக்கான பராமரிப்பு பணிகளும் சீரான இடைவெளியில் நடந்தாக வேண்டும்.
இல்லாவிட்டால் பண இழப்பில் தொடங்கி சுவாசக் கோளாறுகள், தோல் நோய்கள் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.
மிக முக்கியமாக, மனச்சோர்வும் தேவையற்ற பதற்றமும் தொற்றும்.
சமையலறையில் பாத்திரங்களைக் கழுவ முடியாமல் போனாலோ, கழிவறையை விட்டு வெளியேற முடியாமல் தவித்தாலோ இதனை உணர முடியும்.
அப்படிப்பட்ட நேரங்களில் குறிப்பிட்ட வசதிகளில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தாலே நிம்மதி என்ற மனநிலைக்குச் சென்றுவிடுவோம்.
இதுவே, பிளம்பிங் எத்தகைய சீர்மைமிக்க பணி என்பதைச் சொல்லும்.
பிளம்பர்களை கொண்டாடுவோம்!
ஆறு, குளம், வாய்க்கால்களில் குளித்து துவைத்து பாத்திரம் தேய்த்து புழங்கிய காலம் மங்கி, குடிநீருக்கும் இதர தேவைகளுக்குமான வசதிகள் வீட்டுக்குள்ளேயே கிடைத்துவரும் காலம் இது.
அதனைப் புரிந்துகொண்டவர்களால் பிளம்பர்களின் முக்கியத்துவத்தையும் அறிய முடியும்.
சிறியதோ, பெரியதோ ஒரு பணியில் ஏற்படும் குறைகளுக்கு, அதில் நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே மிகத்துல்லியமாகத் தீர்வு காண முடியும். அதனால் நம்மில் ஒருவராக வாழும் பிளம்பர்களைக் கொண்டாடுவது அவசியம்.
பிளம்பிங் பணியையும் அதனைச் செய்வோரையும் கவுரவிக்கும் வகையில், 2010 முதல் மார்ச் 10ஆம் தேதியன்று உலக பிளம்பிங் தினத்தைக் கொண்டாடி வருகிறது உலக பிளம்பிங் கவுன்சில்.
இந்தியாவிலும் இப்பணியை மேற்கொள்வோரை அங்கீகரிக்கும் வகையில் இந்திய பிளம்பிங் திறன்கள் கவுன்சில் செயல்பட்டு வருகிறது.
மின்சாரம், மோட்டார் வாகனங்கள் சார்ந்து இயங்குபவர்களைப் போன்று நீர்வழியைச் செம்மைப்படுத்தும் பிளம்பிங் பணியாளர்களும் ஒரு சமூகத்துக்கு மிக அவசியம்.
சீரான வளர்ச்சியோடு உலகம் முன்னோக்கிப் பயணிக்க அவர்களது பங்கும் கணிசம்.
ஆதலால், உலக பிளம்பிங் தினத்தை முன்னிட்டு நம்மோடு இருக்கும் பிளம்பர்களை வாழ்த்துவோம்.. பிளம்பிங் பணியைக் கொண்டாடுவோம்!
– பா. உதய்
11.03.2022 12 : 30 P.M