விராத் கோஹ்லி, இன்றைய தலைமுறைக்கு தெரிந்த கிரிக்கெட் பிரபலம். கொஞ்சம் நுண்ணோக்கினால், அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களின் முன்மாதிரி என்பது புரியும். கிரிக்கெட் விளையாட மைதானத்தில் புகுந்துவிட்டால், அவர் ஒரு அசுரன்.
எதிரணி சிறியதோ, பெரியதோ, அவரது செயல்பாடு ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். களத்திற்கு வெளியேயும் வலியவர் எளியவர் என்ற பாகுபாடு பார்க்காமல் பழகுவது அவரது பெரும்பலம்.
அதேநேரத்தில், சாதாரண நேரங்களில் பயங்கர ஜாலியான மனிதராக இருப்பார். அவருடன் பழகிய கிரிக்கெட் வீரர்களின் கருத்து இது. அப்படிப்பட்ட கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டில் 100ஆவது ஆட்டத்தை ஆடி முடித்துள்ளார்.
கிரிக்கெட்டை மூச்சாகக் கொண்ட இளம் வீரர்களும் குழந்தைகளும் ஆட்டத்தை விளையாடும் விதம் குறித்து கோஹ்லியிடம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.
அவற்றை விட ஒருபடி அதிகமாகவே, கோஹ்லி எனும் தனிப்பட்ட நபரிடம் இருந்து நம்மால் ஏராளம் கற்றுக்கொள்ள முடியும்.
நான் ராஜா..!
“மைதானத்தில் நுழைந்துவிட்டால் கோஹ்லியிடம் தென்படும் ஆவேசத்தை வேறு எவருடனும் ஒப்பிட முடியாது. அந்த இடத்தில் அவர்தான் ராஜா என்ற நினைப்போடே செயல்படுவார்.
அடித்தால் செஞ்சுரிதான் என்ற எண்ணத்தோடே விளையாடுவார். என் வேலை இதுதான். இதுக்குதான் இங்க வந்திருக்கேன் என்பது போல ஒரு சீசனில் அவர் அடிக்கும் ரன்கள் மிக அதிகமாக இருக்கும்.”
19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் ஆடிய சங்க்வான் பிரதீப் சொன்னதுதான் இது.
மலேசியாவில் நடந்த யு-19 உலகக் கோப்பையை கோஹ்லி தலைமையிலான அணி வென்றபோது, அதில் இவரும் பங்கேற்றிருக்கிறார்.
ஒருமுறை கோஹ்லி வடக்கு மண்டல அணிக்காக ஆட, ஸ்ரீவஸ்தவா எனும் வீரர் மத்திய மண்டலத்துக்காக ஆடியிருக்கிறார். முதலில் ஆடிய ஸ்ரீவஸ்தவா 180 ரன்கள் எடுக்க, பதிலுக்கு 190 ரன்கள் எடுத்தாராம் கோஹ்லி.
இந்த ‘நீயா நானா’ போட்டியில் எவ்வளவு கவனம் வேண்டும் என்பது விளையாட்டு வீரர்களும் நன்கு தெரியும்.
”நிறைய பேரு அவரோட ஆட்டியூட் ஓவர்னு சொல்வாங்க. அவர் கொஞ்சம் வித்தியாசமானவர். அவ்வளவுதான்” என்று இந்நிகழ்ச்சியை நினைவு கூர்ந்திருக்கிறார் ஸ்ரீவஸ்தவா.
அசாத்திய தைரியம்!
கிட்டத்தட்ட 7-8 ஆண்டுகள் சங்க்வானும் கோஹ்லியும் ஒன்றாக கிரிக்கெட் ஆடியிருக்கின்றனர். ஒரே அறையில் தங்கியிருக்கின்றனர்.
மைதானத்தில் விளையாடி முடித்துவிட்டு ட்ரெஸ்ஸிங் ரூம் திரும்பினால், கோஹ்லி அடிக்கும் ஜோக்குகளால் அந்த இடமே அதிருமாம். அதே நேரத்தில், மற்றவர்களின் கிண்டல்களையும் ஏற்றுக்கொள்ளும் ரகம்.
இப்படியொரு ஆளுமைத்தன்மை மிகச்சில பேரிடம் மட்டுமே இருக்கும். இந்திய அணியின் கேப்டன் ஆனபிறகு, அவரை பொதுவெளியில் ‘ட்ரோல்’ செய்த சகாக்கள் உண்டு.
ஒருமுறை தென்னாப்பிரிக்காவுக்கு விளையாடச் சென்றபோது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் ‘மட்டன் ரோல்’ நன்றாக இருக்குமென்று கூறியிருக்கின்றனர் அங்கிருந்தவர்கள்.
அந்த காலகட்டத்தில், உணவின் மீதான கோஹ்லியின் காதல் இன்னதென்று வரையறுக்க முடியாததாக இருந்திருக்கிறது. ருசியான உணவு என்றால் எந்த இடத்திற்கும் செல்லத் தயாராக இருப்பாராம்.
தென்னாப்பிரிக்காவிலும் குறிப்பிட்ட இடத்தில் வன்முறையாளர்களின் அடாவடி அதிகம் என்று சிலர் எச்சரித்தும் கேட்காமல், கோஹ்லியும் சங்க்வானும் காரில் சென்று அந்த மட்டன் ரோலை சாப்பிட்டிருக்கின்றனர்.
அப்போது, அங்கு வந்த சிலர் பிரச்சனை செய்ய, காரை வேகமாக ‘ஸ்டார்ட்’ செய்து தங்கும் விடுதிக்கு திரும்பியிருக்கிறார் கோஹ்லி. அந்த தைரியம்தான் அவரது பலம் என்கிறார் சங்க்வான்.
அதே கோஹ்லி, தனது ஆட்டத்திறனை மேம்படுத்த உணவு வேட்கையைத் துறந்தது மிகப்பெரிய ஆச்சர்யம்.
விருப்பங்களைத் துறத்தல்!
விருப்பங்களைத் துரத்துவது என்பது வேறு; துறப்பது என்பது வேறு. ஒரு விருப்பம் அல்லது லட்சியம் அல்லது வேட்கைக்காக மற்றொன்றைத் துறப்பது தியாகத்திற்குச் சமம்.
மிகுந்த மன உறுதி இருந்தால் மட்டுமே அது சாத்தியம். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிக்கு முன்பும் சரி, அதன்பின்னர் இந்திய சீனியர் அணியில் கத்துக்குட்டியாய் நுழைந்தபோதும் சரி, மிகத்தேர்ந்த ஆட்டக்காரராகத் தன்னை தொடர்ந்து பட்டை தீட்டிக்கொண்டே இருந்தார் கோஹ்லி.
அப்போதெல்லாம், உடல் எடையை கொஞ்சம் குறைக்க வேண்டும் என்ற அறிவுரைகளை எதிர்கொண்டார். மற்றவர்கள் சொன்னபோது தலையை ஆட்டியவர், 2012இல் தானாக உடல் எடையைக் குறைத்து உடல்வாகை இறுக்கும் முடிவுக்கு வந்தார்.
கிட்டத்தட்ட 3 மாதங்களில் 12 கிலோ வரை எடை குறைந்தார். அதற்காக, தனக்குப் பிடித்தமான உணவுகளை ஒதுக்கிவிட்டு ஆவியில் வேக வைத்த உணவுகளையும் திரவ உணவுகளையும் மட்டுமே எடுத்துக்கொண்டார்.
இந்த ‘டயட்’டும் உடற்பயிற்சி நிலையமே கதி எனக் கிடந்ததும் ஒரு சிலரால் மட்டுமே பின்பற்றக்கூடியது. அதன் பலனாக, இன்றுவரை பீல்டிங்கிலும் பேட்டிங்கிலும் அதிகபட்ச திறனை வெளிப்படுத்த இந்த ‘பிட்னஸ்’ மட்டுமே உதவுகிறது.
இன்று, கோஹ்லியை முன்மாதிரியாக கொண்டு கே.எஸ்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா உட்பட பல இளம் வீரர்கள் இந்த பாணியைப் பின்பற்றி வருகின்றனர்.
எண்ணங்களில் உறுதி!
19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் கோஹ்லி விளையாடிய காலம் தொட்டு அவரைக் கவனித்து வருகிறார் கிரிக்கெட் தேர்வுக்குழு உட்பட பல பொறுப்புகளை வகித்துள்ள மூத்த வீரர் சந்து போர்டே.
“வடக்கு மண்டல அணி பயிற்சியில் ஈடுபட்டபோது, பிசிசிஐ என்னை அங்கு அனுப்பியது.
அப்போதே நாம் ஒரு திருத்தம் சொன்னால், உடனடியாக நெட் பிராக்டீஸின் போது அதனைச் சரி செய்துகொள்வார்.
அவருக்கென்று ஒரு கருத்து இருந்தால் அதில் உறுதியாக இருப்பார். மனம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, நாம் சொல்லும் கருத்துகளுக்கு செவி சாய்ப்பார்.
அதேநேரத்தில், மற்றவர்கள் விளையாடுவதைப் பார்க்கும் ரகம் இல்லை அவர்.
எந்நேரமும் ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டுமென்று விரும்புவார்” என்று கோஹ்லியின் இயல்பு குறித்து குறிப்பிட்டிருக்கிறார் போர்டே.
அதேபோல, மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை தருவதில் அவரை மிஞ்ச ஆளில்லை என்கிறார்.
சமீபத்தில் 20-20, ஒருநாள், டெஸ்ட் என்று அடுத்தடுத்து தான் வகித்து வந்த கேப்டன் பொறுப்பைத் துறந்தார் கோஹ்லி.
ஐபிஎல்லுக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன்ஷிப்புக்கும் கூட ‘குட்பை’ சொல்லிவிட்டார்.
“ஒருமுறை நீங்கள் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டால், தேசிய அணி, ஐபிஎல் அணி என்று பாகுபாடெல்லாம் பார்க்க கூடாது. கோஹ்லி இனி ஒருபோதும் கேப்டனாக மாட்டார். ஒரு வீரராக மட்டுமே ஜொலிப்பார்” என்றிருக்கிறார் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி.
இவர், ஆர்சிபியின் கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் இருந்தவர்.
சரியோ, தவறோ தான் எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பவர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் விராத் கோஹ்லி.
ஏற்றுக்கொள்ளும் பக்குவம்!
மற்றவர்கள் சொல்லும் கருத்துகள் ஏற்கப்படக்கூடியவை என்றால், எக்காலத்திலும் அதனைப் பின்பற்றத் தயாராக இருப்பார். 19 வயதுக்கு உட்பட்ட அணியின் கேப்டனாக இருந்தபோது, அதிரடியாக விளையாடும் இயல்போடு இருந்திருக்கிறார் கோஹ்லி.
இதனால் அடுத்தடுத்த ஆட்டங்களில் ‘அவுட்’ ஆக, ‘எப்போது அடித்து ஆட வேண்டும் என்பதில் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதை எப்படி தவிர்ப்பது’ என்று பயிற்சியாளர் வாட்மோரிடம் கேட்டிருக்கிறார்.
இப்படி நேருக்கு நேர் கேட்கும் அணுகுமுறை எத்தனை வீரர்களிடம் உண்டு என்று தெரியாது. ஆனால், கோஹ்லிக்கு வாட்மோர் சொன்ன பதில்.
“40 ஓவருக்கு மேல் அடித்து ஆடு. அதுவரை பொறுமையாக இரு. அப்போது, உன் அதிரடிக்கு பலன் கிடைக்கும்”.
அதை அப்படியே கோஹ்லி பின்பற்ற, பெரியளவில் ‘ஸ்கோர்’ செய்திருக்கிறார்.
இந்திய அணியில் இடம்பிடித்தபிறகும் இந்த பாணியை கோஹ்லி பின்பற்றியதாகச் சொல்லும் வாட்மோர், ‘இப்போதெல்லாம் எந்த சூழ்நிலையில் ரன்ரேட்டை அதிகரிக்க வேண்டுமென்பது அவருக்கு அத்துபடியான விஷயம்’ என்றிருக்கிறார்.
அப்போதும், இப்போதும் நெட் பிராக்டீஸில் முதல் ஆளாக நுழைந்து கடைசி ஆளாக வெளியேறுவது கோஹ்லியிடம் தொற்றிக்கொண்டிருக்கும் பழக்கம்.
விதிகளை உடை!
பாகிஸ்தானோடு விளையாடும்போது மட்டும் பொங்கும் சில இந்திய வீரர்களை பார்த்திருக்கிறோம். அவர்களில் இருந்து வித்தியாசப்பட்டு. அந்நாட்டு வீரர்களோடு நட்பு பாராட்டுவார் கோஹ்லி.
ஆஸ்திரேலிய வீரர்களைக் கண்டு பம்மிய காலம் போய், அவர்களுக்கு ஈடாக ‘ஸ்லெட்ஜிங்’கில் இந்தியர்கள் பொளந்து கட்டியது இப்போதும் ஒரு கனவுதான்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மைதானத்தின் தன்மைக்கேற்பத்தான் வீரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஜாம்பவான்கள் கூறிவரும் காலகட்டத்தில்,
பழைய ‘கிளாசிக்’ காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 5 பவுலர்கள், 5 பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட் கீப்பர் என்று களமிறங்கும் வித்தையைச் செயல்படுத்தி, தங்களுக்குச் சாதகமில்லாத மைதானங்களிலும் ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது போல தொடர் வெற்றிகளை குவித்தவர் கோஹ்லி.
கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமல்ல, அதற்குண்டான நெறிமுறைகளிலும் கூட மாற்றங்களைச் செயல்படுத்துபவர்.
சமீபத்தில் 100ஆவது டெஸ்டில் விளையாடியதையொட்டி மைதானத்தில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டபோது, மனைவி அனுஷ்காவையும் உடன் அழைத்து வந்தார். அவரால்தான் இந்த சாதனையைச் செய்தேன் என்றார்.
இந்நிகழ்வால் மரபுகளை மீறிவிட்டதாக கண்டனங்கள் குவிந்தாலும், ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பஸ்ரா
“அவர் தரநிலைகளை, விதிகளை மாற்றியிருக்கிறார்; எந்தவொரு வீரரின் 100ஆவது ஆட்டத்திலும் இப்படியொரு காட்சியை நான் கண்டதில்லை” என்று கோஹ்லியை புகழ்ந்திருக்கிறார்.
தந்தை மரணித்தபோது ரஞ்சி ஆட்டத்தில் ஆடச் சென்றபோதும் சரி, தனது சிறுவயது பயிற்சியாளருக்கு ‘சர்ப்ரைஸ் கிப்டா’க காரை பரிசளித்தபோதும் சரி, சக வீரர்களிடம் இருந்து பெருமளவு வேறுபட்டவர் கோஹ்லி.
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியபிறகு ஒரு வீரராக மட்டுமே தன் பங்களிப்பைத் தருவதும்கூட ஒருவகையில் சவால்தான்.
இனிவரும் நாட்களில், அதையும் எளிதாக அவர் கைக்கொள்ளக்கூடும்; சச்சினின் அதிக சதங்கள் சாதனையை முறியடிக்கக்கூடும். அந்த வகையில், கோஹ்லியிடம் இருந்து களத்திற்கு உள்ளும் புறமும் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.
கிரிக்கெட் விளையாடாதோர்க்கும் கூட இது பொருந்தும். காரணம், ’எந்தவொரு சாதனையும் பின்னே வருபவர்கள் அதனைத் தாண்டிச் செல்வதற்காகவே’ என்ற கொள்கையுடையவர் கோஹ்லி.
எந்த துறையைச் சேர்ந்தவருக்கும் ‘ரோல்மாடல்’ ஆக இந்தவொரு தகுதி போதும்!
-உதய் பாடகலிங்கம்
10.03.2022 11 : 10 A.M