காரில் கடத்தப்பட்ட கவிஞர்!

பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அந்த கால கட்டங்களில் ஒரு நாளில் இரண்டு (அ) மூன்று படங்களுக்குக் கூட பாடல் எழுத வேண்டிய நிர்ப்பந்தம்!

அவருடைய பாடல்கள் அத்தனையும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட காலம் அது.!

இனிய பண்புடைய அவரால் யார் வந்து படத்திற்கு பாட்டு எழுதக் கூப்பிட்டாலும் நிராகரிப்பதில்லை.

ஒரு பெரிய படத்தயாரிப்பு நிறுவனத்தின் படம் ஒன்று முடிவடைந்த நிலையில் படம் வெளியாக தேதி குறித்தாகி விட்டது. இரண்டு பாடல்கள் தான் பாக்கி.

கவிஞர் பட்டுக்கோட்டையாரை தனிமையில் சந்தித்து சூழ்நிலையை விளக்கி ரிலீஸ் தேதி குறித்த விபரத்தைச் சொல்லி, பாடல் எழுதச் சொல்லலாம் என அவரை சந்திக்கச் சென்றார் பட தயாரிப்பாளர்.

அதிகாலை 5 மணிக்கே ராயப்பேட்டையில் இருந்த பட்டுக்கோட்டையார் இல்லத்துக்கு சென்றார் அவர்.

ஆனால், அவருக்கு முன் ஏற்கெனவே மூன்று கார்கள் அவரை அழைத்துப் போக நின்றிருந்தன.

விசாரித்த போது கவிஞர் இரவு 1 மணி வரை வேறு பட நிறுவனங்களுக்கு பாடல் எழுதிவிட்டு 2.00 மணிக்குத் தான் தூங்கச் சென்றார் என்றார்கள்.

எட்டு மணிக்கு மேல் தான் எழுந்திருப்பார் என்றும் சொன்னார்கள். அந்த சமயத்தில் அவ்வளவு பிஸியாக இருந்தார் கல்யாண சுந்தரம்.

சந்திக்க முடியாமல் திரும்பிய பட அதிபர் வேறு ஒரு இடத்தில் அவரைத் தனிமையில் சந்தித்து நிலைமையைக் கூறி, மற்ற தயாரிப்பாளர்கள் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் பாடல் எழுத ஒரு ஐடியா செய்தார்.

கல்யாண சுந்தரத்தை ஒரு காரில் கடத்தி எண்ணுருக்கு அருகே ஒரு விடுதியில் யாருக்கும் தெரியாமல் தங்க வைத்தார்.

ஒரு பணியாளரையும் அருகில் அமர்த்தி அவருக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு ஏற்பாடு செய்தார்.

பின்னர் பாடலுக்கான சிச்சுவேஷன் சொல்லி காத்திருந்து அவர் எழுதிய ஒரு பாடலை வாங்கிக் கொண்டு மீண்டும் அவரை அடுத்த நாள் காலை காரில் சென்னையில் இறக்கினார்.

இப்படிக் கவிஞரைக் கடத்தி பாடல் எழுதி வாங்கியவர் ஜுபிடர் பிலிம்ஸ் அதிபர் ஹபிபுல்லா.

இப்படி எழுதி வாங்கிய பாடல் தான்…

“சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா “
நான் சொல்லப்போற வார்த்தையை நீயும் எண்ணிப் பாரடா”

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் மிக அருமையான பாடல். படம் – அரசிளங்குமாரி. இசை – இசை மேதை ஜி.ராமநாதன்

கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதிய இந்தப் படத்தில் பாடலை பாடியவர் திரு டி.எம்.சௌந்தரராஜன்.

– நன்றி: முகநூல் பதிவு

10.03.2022  6 : 30 P.M

Comments (0)
Add Comment