நாம் உயிர் வாழத் தேவையான காற்று, நீர், நிலம் என அனைத்தையுமே அன்றாடம் மாசுபடுத்தி வருகிறோம்.
ஓசோன் படலத்தில் விழும் ஓட்டைகள் உலக அழிவை தீர்மானிக்க போவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். தற்போது ஒலி, ஒளி மாசுவும் பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இயற்கையை இழந்து கொண்டிருக்கிறோம். சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் காற்று மாசின் எதிர்வினைகள் கணக்கிட முடியாத அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து வருகின்றன.
பொதுப் போக்குவரத்தை உதறித் தள்ளிவிட்டு, இரு சக்கர வாகனங்கள், கார்கள் என ஒருவர் மட்டும் பயணித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருவது கொடுமையின் உச்சம்.
தமிழ்நாட்டில் காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கான சிறிய, அதே நேரத்தில் மிகவும் பயனளிக்கக் கூடிய திட்டத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கியுள்ளது.
சென்னையில் உள்ள வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் இருசக்கர வாகனங்களிலோ, கார் உள்ளிட்ட வாகனங்களிலோ அலுவலகம் வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக பொதுப் போக்குவரத்தையோ, நடந்தோ அல்லது சைக்கிளிலோ அலுவலகம் வர பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனை பிற அரசுத் துறைகளில் உள்ள ஊழியர்கள் மத்தியிலும் பரப்பும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சுற்றுச்சுழல் மாசுப்படுவதை தடுக்கும் விதமாக, மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள இல்லத்தில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் வந்தடைந்தார்.
மாவட்ட ஆட்சியரோடு அதிகாரிகளும் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தடைந்தனர். ஆட்சியரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே வியப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.