பெண்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

மார்ச் – 8, சர்வதேச மகளிர் தினம்:

பெண்களைப் போற்றும் விதமாக அவர்களின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த மகளிர் தினம் எப்படி வந்தது? ஏன் கொண்டாட வேண்டும்? அதன் வரலாறு என்ன?

18-ம் நூற்றாண்டுகளில் பெண்கள் என்றால் வீட்டில் வேலைப்பார்க்க மட்டுமே என்றும் அவர்களை வெளியில் விடாமல் முடக்கி வைத்தார்கள்.

இது இந்தியாவில் மட்டும் இல்லை, தற்போது முன்னேறிய நாடுகள என்று கூறப்படும் அமெரிக்க, மேற்கத்திய நாடுகளிலும்தான்!

இந்த நிலைமை 1850-களில் மாறத்தொடங்கியது. தொழிற்சாலைகளின் வரவு, அலுவலகப் பணிக்குச் செல்வது என வீட்டுப்பிடியில் இருந்து தங்களை விடுவிக்கத் தொடங்கினர்.

அதே நேரம், ஆண்களுக்கு நிகராக பெண்கள் அலுவலக வேலைகளில் ஈடுபட்டாலும் ஊதியப் பாகுபாடு என்ற நிலை இருந்தது.

ஆரம்ப காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக ஒரு பெண் வேலை செய்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் உரிமையிலும், ஊதியத்திலும் பாகுபாடு இருந்தது.

இதைத் தடுக்கும் விதமாக நீதிக்காக குரல் கொடுத்தனர் பெண்கள். 1910-ம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் மாபெரும் பெண்கள் உரிமை மாநாட்டை நடத்தினார்கள்.

இந்த மாபெரும் மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த பல பெண்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். அந்த மாநாட்டில் முக்கியமானவராக கருதப்பட்டவர் ஜெர்மனியைச் சேர்ந்த புரட்சிப் பெண் கிளாரா ஜெட்கின்.

பெண்களின் உரிமைக்காக அவர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து குரல் கொடுத்துவந்த கிளாரா ஜெட்கின், அவர்களின் உரிமைகளைப் பேசுவதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் பெண்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும் எனக் கருதினார்.

அதன் விளைவாக அது குறித்து தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் பலவேறு காரணங்களால் அது நிறைவேறாமல் போனது.

அதன் பிறகு நடந்த புரட்சி என்றால், 1917-ல் ரஷ்யாவில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய புரட்சியைச் சொல்லலாம். இந்தப் புரட்சி உலக நாடுகளை திரும்பிப் பார்க்கவைத்தது. இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அப்போதைய ரஷ்ய மன்னர் ஜாரின் ஆட்சி கவிழ இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து 1920-ம் வருடம் சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார்.

அந்தப் புரட்சியை நினைவு கூறும் வகையில் பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையைப் பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

க்ரிகோரியன் நாள்காட்டியின் படி அவர்கள் கூறிய கடைசி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8-ம் தேதியாக இருந்தது.

அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாட வேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார். அன்று முதல் உலகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

பெண்கள் தினத்தில் இந்த ஆண்டின் சிறப்பு:

ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் வரும்போது பெண்களுக்கு அவசியமான ஒன்றை மையப்படுத்தி ஏதேனும் விஷயத்தை இலக்காக நிர்ணயம் செய்வார்கள்.

இந்த ஆண்டு ‘சவாலைத் தேர்வு செய்யுங்கள்’ என்ற தலைப்பை மையமாக கொண்டுள்ளது. அதாவது பெண்களின் சுய பாதுகாப்பு குறித்து கூறப்பட்டுள்ளது.

சுய பாதுகாப்பின் முக்கியத்துவம் என்ன?

இன்றைய சூழ்நிலையில் வேலைக்கு போகும் பெண்கள் அதிக அளவில் இருக்கின்றனர். வீட்டில் இருக்கும் ஆண்களைச் சார்ந்து இருக்காமல் தங்களுக்கு தேவையானதை தாங்களே சென்று வாங்கிவருவது, காய்கறி, குழந்தைகளை பள்ளியில் விடுதல் அழைத்து வருதல், வேறு சில வேலைகளுக்கும் வெளியில் சென்றுவருகின்றனர்.

தனியாக வெளியூர் செல்வது ஆகிய வேலைகளை யாரையும் நம்பி இல்லாமல் தானே தைரியமாக எதிர்கொள்கின்றனர். இருப்பினும் எல்லா நேரங்களிலும் சுய பாதுகாப்பு முக்கியமானது.

பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?

1. தனியாக இருக்கும் பெண்கள் வீட்டுக்கு வரும் நபர்களை எளிதில் நம்பிவிடக் கூடாது. வீட்டு வேலைக்கு ஆட்கள் அமர்த்தும்போது விசாரித்த பிறகே அவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்.

2. கதவை யாராவது தட்டினால் உடனடியாக திறக்கக்கூடாது, உள்ளே அனுமதிக்கவும் கூடாது.

3. பிரச்சனை வரும்போது சத்தம் போடவேண்டும்.

4 .பெண்கள் வெளியில் செல்லும் போது போனில் முழு சார்ஜ் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உதவி எண், உதவக்கூடிய நபர்களின் எண் போனில் இருப்பதை உறுதி செய்யுங்கள். எப்போது ஜிபிஎஸ் ஆன் செய்து வைத்திருப்பது ஆபத்து நேரத்தில் உதவியாக இருக்கும்.

நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை மறைக்காமல் கூறுங்கள்.

5. பையில் மிளகாய் பொடி, பெப்பர் ஸ்ப்ரே, சேப்டி ஸ்பிரே போன்றவை இருக்கட்டும் இது ஆபத்து நேரத்தில் கை கொடுக்கும்.

6. பிரச்சனை என்றால் அருகில் இருப்பவர்களை சத்தம் போட்டுக் கூப்பிடுங்கள், யாராவது உங்களுக்கு உதவலாம்.

மக்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாக பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் போனில் ‘காவலன்’ என்ற மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இது உங்கள் ஆபத்து காலத்தில் கைகொடுக்கும்.

7. ஏதேனும் ஒரு தற்காப்புக் கலை தெரிந்து கொள்வது அவசியம்.

அதே நேரம் பெண்களே…

எது, எப்படி இருந்தாலும் உங்களின் தைரியமும், புத்திசாலித்தனமும் தான் முதலில் உங்களைக் காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

– யாழினி சோமு

Comments (0)
Add Comment