குழந்தைக் கடத்தலைத் தடுக்க வேண்டும்!

சென்னையில்  மார்ச் 5-ம் தேதியன்று ‘குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுப்பதும் குழந்தைகளுக்கான உரிமைகளை உயர்த்திப் பிடிப்பதும்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

சென்னை மாநகர காவல்துறை, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து சென்னையில் உள்ள மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் நடத்தியது.

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாஸ்கரன், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

சென்னையின் நலிந்த பிரிவினர் மத்தியிலிருந்தும் கொத்தடிமைத்தனத்தில் சிக்கி மீண்டவர்களிடருந்தும் சுமார் 100 குழந்தைகள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சிறப்புரையில் பேசிய சங்கர் ஜிவால், “பல்வேறு அமைப்புகளை இணைத்து மனித உரிமை ஆணையம் நடத்துகிற இத்தகைய நிகழ்ச்சிகளை நாம் பாராட்ட வேண்டும்.

குற்றங்களுக்கு பலியாகக்கூடிய நலிந்த குழந்தைகளுக்கான இந்த நிகழ்வுகளை நடத்துவதன் மூலமாக  குற்றங்கள் நடைபெறாமல் நாம் முன்கூட்டியே தடுக்கிறோம்.

இதன் காரணமாக அத்தகையோரை திருத்துவதற்காக 30 அல்லது 40 ஆண்டுகள் காவல்துறையில் செய்யப்படுகிற பணிகள் மிச்சமடையும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், குழந்தைகள் கடத்தப்படுதலைத் தடுப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்வதில் தனக்கு உள்ள விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

நீதிபதி பாஸ்கரன் பேசும்போது, “நலிந்த மக்கள் பிரிவினர்களின் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்ற அமைப்புகளோடு இணைந்து செயல்படுகின்றன.

நலிந்த சமூகங்களின் குழந்தைகளுக்கு உள்ள உரிமைகளைப் பாதுகாப்பதில் மனித உரிமைகள் ஆணையத்துக்கும் மற்ற அமைப்புகளுக்கும் பொறுப்புகள் உள்ளன” என்று சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் டாக்டர் கே.விஜயா கார்த்திகேயன் ஐஏஎஸ், ஆணையத்தின் உறுப்பினர்களான டி.ஜெயச்சந்திரன்,

டாக்டர் ஏ.சித்ரஞ்சன் மோகன்தாஸ் ஐஏஎஸ் (ஓய்வு), டாக்டர் மகேந்தர்குமார் ரசூத் ஐபிஎஸ், காவல்துறை தலைவர் (புலனாய்வு), மாவட்ட நீதிபதி ஜி.கருணாநிதி ஆகியோரும் பங்கேற்றனர்.

சென்னை மாநகர மேற்கு மண்டலத்தின் இணை ஆணையர்  திருமதி எஸ்.ராஜேஸ்வரி ஐபிஎஸ், சவுத் பார் பிரீடம் எனும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  ஏ.தேவநேயன், இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் திருமதி மெர்லின் பிரீடா உள்பட பலரும் கலந்துகொண்டு கருத்தரங்கைச் சிறப்பித்தனர்.

  • பா. மகிழ்மதி

08.03.2022  11 : 50 A.M

Comments (0)
Add Comment