பெண் விடுதலை – பாரதி!

‘சகோதரிகளே! நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத்தளைகளால் கட்டுண்டிருக்கிறோம்.

நமக்கு அவர்கள் அண்ணன், தம்பிகளாகவும் மாமன், மைத்துனர்களாகவும் தந்தை, பாட்டனார்களாகவும் கணவர், காதலராகவும் வாய்த்திருக்கின்றனர்.

இவர்களே நமக்குப் பகைவர்களாய் மூண்டிருக்கையிலே இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது என்னுடைய மனம் குருச்சேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ச்சுனனுடைய மனம் திகைத்ததுபோலத் திகைக்கிறது. ஆண் மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்காத காரியம்.

அது பற்றியே சாத்விக எதிர்ப்பினால் அவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்… இந்த சாத்விக எதிர்ப்பு முறையை நாம் அனுசரிக்கத் தொடங்க வேண்டுமெனின், இந்தக் காலமே சரியான காலம்.

இந்த வருஷமே சரியான வருஷம். இந்த மாசமே சரியான மாசம். இன்றே நல்ல நாள். இந்த முகூர்த்தமே நல்ல முகூர்த்தம்’

– பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது என்கிற கட்டுரையில் பாரதி எழுதியது இது.

பெண் விடுதலை பேசும் இது போன்ற நூறு நூறு வரிகளை பாரதியின் கதைகள், கவிதைகள், கட்டுரைகளிலிருந்து மேற்கோளாக, கிளி சீட்டெடுத்துப் போடுவதுபோல் எடுத்து எடுத்துப் போட முடியும்.

பாரதி மறைந்த நூற்றாண்டைக் கடந்துகொண்டிருக்கும் நம் சமூகம் மேலே குறிப்பிட்டிருக்கும் பத்தியில் பாரதி சொன்னதுபோல சாத்விகமான எதிர்ப்பையும், சட்டபூர்வ எதிர்ப்பையும், சில சமயங்களில் தடியெடுத்த எதிர்ப்பையும் காட்டி வந்தபோதும் ‘ஆணாதிக்கம்’ மட்டும் இன்றும் நின்று நிலைத்திருக்கிறது.

ஆணாதிக்கத்தின் சில கூறுகள் மங்கியிருப்பினும் வேறு சில புதிய கூறுகள் முளைத்துள்ளதையும் காண்கிறோம். பாரதி விரித்த பெண்விடுதலைக் கனவின் உள் அடுக்குகளை நாம் முழுதாக உள்வாங்கத் தவறினோம்; செயல்படுத்தத் தவறினோம்.

ஐந்து வயதில் தாயை இழந்த பாரதி, தன் 14 வயதில் ஒன்பது வயது செல்லம்மாளின் கரம் பற்றி நடக்கத் தொடங்கியவர். பாரதி வாழ்வில் குறுக்கிட்ட மூன்றாவது பெண் சகோதரி நிவேதிதா.

சிந்தனையை உலுக்கிய கேள்வி

ஒருமுறை காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்ற பாரதியார் கொல்கத்தாவில் தங்குகிறார். அங்கே சகோதரி நிவேதிதாவைச் சந்தித்து உரையாடு கிறார். அப்போது நிவேதிதா, பாரதி தன்னுடன் செல்லம்மாளை அழைத்து வராததைக் குறிப்பிட்டு, “உங்கள் மனைவிக்குச் சம உரிமை கொடுக்காத நீங்கள் எப்படி நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தருவீர்கள்?” என்று கேட்கிறார். அந்தக் கேள்வி அது வரை பாரதி கொண்டிருந்த பெண்கள் விடுதலை குறித்த சிந்தனையை உலுக்கி மாற்றி அமைத்தது.

அந்த மேனாட்டுப் பெண்மணியையே அவர் தன் குருவாகக் கொண்டார் என்பது மிகுந்த ‘கால முக்கியத்துவம்’ கொண்டது. இன்று பாரதியை அவரவர் நோக்கத்துக்கேற்ப அடையாளப்படுத்த வும் சொந்தம் கொண்டாடவும் முயல்கின்றனர். ஆனால், பாரதி என்றால் விடுதலை என்பதுதான் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையும் விட்டுச் சென்றிருக்கும் முத்திரை, அடையாளம். விடுதலை வேண்டும் வேண்டும் எனச் சும்மா செப்பித் திரிந்தவரல்ல பாரதி. காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரவாதப் பிரிவின் தமிழ்க்கிளையின் சுதேச வீரர் வ.உ.சிதம்பரனாரின் உற்றத் தோழராகக் களத்தில் நின்றவர்.

“பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே – வெள்ளைப்

பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே”

என்று அரசியல் தளத்தில் சாதி எதிர்ப்பு, காலனிய எதிர்ப்பு என்கிற இரட்டைத் தேசியத்தைத் தெளிவாக முன்னெடுத்த பாரதி சமூக விடுதலையின் ஆதாரமான அடிப்படைத் தேவையாகப் பெண் விடுதலையை முன்வைத்தவர். எவற்றையெல்லாம் பெண்ணின் அடையாளமாக, பெண்மையின் கூறுகளாகக் காலம்காலமாக நம் சமூகம் தூக்கிப் பிடித்து வந்ததோ அவற்றையெல்லாம் மறுத்து, மாற்று அடையாளங்களை பாரதி முன்வைத்தார்.

ஊருக்கு மட்டுமல்ல உபதேசம்

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பைப் பெண்ணின் கல்யாணக் குணங்களாகச் சித்தரித்த காலத்தில், ‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்’ என்றார். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் பெண்ணின் குணங்கள் என்றார். கற்புநிலையை இரு கட்சிக்கும் பொதுவில் வைத்தார். கணவனுக்குப் பின்னால் தலைகுனிந்து நடப்பதே பெண்ணின் சிறந்த இயல்பு என்றிருந்த காலத்தில் செல்லாம்மாளின் தோளில் கை போட்டு, தன்னுடன் இணைந்து நடக்கச் செய்தார்.

பாரதியின் வீட்டில் மூன்றாவது குழந்தையாகவே வளர்ந்த யதுகிரி அம்மாள் அவருக்கும் பாரதிக்கும் நடந்த ஓர் உரையாடலில் பாரதி கூறியதாக எழுதுகிறார்:

“இன்னொரு வேடிக்கை ரெயிலில் பார்த்தேன். ஒரு சின்ன வண்டியில் இளம் வயதுடைய கணவன் மனைவி இருவர், நான் ஆக மூவரே இருந்தோம். கணவனும் நானும் ஊர்க்கதைகள் பேசினோம். அவன் காப்பி வாங்கி வரப் போனான். அப்பொழுது அந்தப் பெண் என்னை ஊர், பெயர் எல்லாம் விசாரித்தாள். கணவன் தலையைக் கண்டதும் வாய்ப்பூட்டு. பிறகு நான் வெற்றிலை வாங்க இறங்கினேன். அவர்கள் இருவரும் சந்தோஷமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்; என் தலையைக் கண்டதும் வாய்ப்பூட்டு! இது என்ன வழக்கம்? இது சுத்த முட்டாள்தனம். பெரிய பிரசங்கம் பண்ணிவிட வேண்டும்போல் இருந்தது எனக்கு. பிரயாசைப்பட்டு மனத்தை அடக்கிக்கொண்டேன்.”

ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யாமல் தன் சொந்த வாழ்க்கையிலும் தன் உறவுகளுக்குள்ளும் தான் கொண்ட கொள்கைகளை விவாதிப்பதை பாரதி வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். அறிவுச் சமூகத்தோடும் அதே சமயம் குடும்பப் பெண்களோடும் ஒரே நேரத்தில் உரையாடல் நடத்தும் அவரால்தான் பெண்விடுதலைக்காகச் செயல்பூர்வமாகவும் முற்போக்காகவும் சிந்திக்கவும் பேசவும் முடியும்.

விடுதலையின் ஆரம்பப் படிகள்

பெண்களுக்கு விடுதலையின் முக்கியமான ஆரம்பப் படிகள் என்று பாரதி ஒன்பது கட்டளைகளை முன்வைக்கிறார்.

1. பெண்களை ருதுவாகும் முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.

2. அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.

3. விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.

4. பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் செய்துகொள்வதைத் தடுக்கக் கூடாது.

5. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்.

6. பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக் கூடாதென்றும் பழகக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்.

7. பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.

8. தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.

9. தமிழருக்கு சுயராஜ்ஜியம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்.

‘பெண் விடுதலை’ என்னும் கட்டுரையில்தான் பாரதி இப்படி எழுதியிருக்கிறார். இவற்றில் பல இன்று சட்டமாகியுள்ளன, சில நடைமுறைக்கும் வந்துள்ளன என்றாலும் சமூகத்தில் ‘புலப்படத்தக்க மாற்றங்கள்’ இன்னும் முழுமையாகத் தோன்றிவிடவில்லை. இங்கே நாம் கவனிக்க வேண்டியது, பாரதிக்குப் பெண் விடுதலைக்கான ஒரு செயல்திட்டம் இருந்தது என்பதே. இன்று பெண்விடுதலைக்கான நமது உருப்படியான செயல்திட்டம் என்ன?

பாரதியின் பெண்ணியச் சிந்தனைகள் அன்றே பரிபூரணமாக முழுமை பெற்றுவிடவில்லைதான். பெண்ணை நுகர்பொருளாக வரிக்கும் பழைய சிந்தனையின் மிச்சங்கள் பாரதியின் மொழியிலும் வெளிப்பாட்டிலும் வர்ணனையிலும் இருந்தன. பெட்டைப்புலம்பல், ஆண்பிள்ளைகள் அல்லமோ, பாட்டுக்கலந்திடவே அங்கோர் பத்தினிப் பெண் வேண்டும், அவன் காரியங்கள் யாவினும் கைகொடுத்து என்பது போன்ற வெளிப்பாடுகளில் விமர்சிக்கவும் விவாதிக்கவும் இடமுண்டுதான். என்றாலும், முழுமையை நோக்கிய பயணத்திலும் தான் வாழ்ந்த காலத்தை மீறிச் சிந்தித்தவனாகவும் பெண்விடுதலைக் கருத்தியல் தளத்திலும் பாரதி இயங்கினான் என்பதே முக்கியமல்லவா?

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

  • நன்றி இந்து தமிழ் திசை நாளிதழ்
Comments (0)
Add Comment