யுத்தம் கொடுமையானது. அதன் விளைவுகள் எத்துணை கொடூரமானவை என விளக்க வேண்டியது இல்லை.
யுத்தம் தொடங்குவதற்கான நியாயங்கள் எத்தனை வலுவானதாக இருந்தாலும், போர் கொடுமையானதுதான். அதனால் பெரும் பாதிப்பிற்கு முதல் இலக்காக உள்ளாவது அப்பாவி மக்கள்தான்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவது எனத் தீர்மானித்திருப்பது தன் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்பதே உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தத்திற்காக சொல்லும் காரணங்களில் முக்கியமானது.
படையெடுப்பிற்கு முன்பே ஐ.நா. சபையில் ரஷ்யா இதுபற்றி விவாதித்து இருக்கலாம்.
ஐ.நா. சபை வலுவற்ற அமைப்பாக இருந்தபோதும், அதன் தீர்மானங்கள் உலக நாடுகளால் பெரிதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்தியா போன்ற நடுநிலை எடுக்கும் நாடுகளைக் கொண்டு ரஷ்யா உக்ரைனுக்கு இன்னும் அழுத்தம் தந்திருக்கலாம். அருகிலிருக்கும் ஆசியா, வளைகுடா நாடுகளின் மூலம் உக்ரைனை கடுமையாக எச்சரித்திருக்கலாம்.
இன்னும் கொஞ்சம் ராஜதந்திர, டிப்ளமேடிக்கான வழிமுறைகளை கையாண்டிருக்கலாம். மொத்தத்தில் ரஷ்யா அவசரப்பட்டு விட்டது.
ஏன் இதனை எல்லாம் செய்திருக்கலாம் எனில்.
1. அடிப்படையில் அரசியல் அனுபவம் அற்ற அரை வேக்காடான உக்ரைனின் தலைமையும், அதன் முதிர்ச்சியற்ற அரசியல் நிலைபாடும்.
2. உக்ரைனின் கையில் இருக்கும் அபாயகரமான 15 அணுசக்தி உலைகள்.
3. உக்ரைனில் வசிக்கும் 40 லட்சம் ரஷ்ய மக்கள்.
4. அதன் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ளக் காத்திருக்கும் நேட்டோ நாடுகள்.
5. யுத்தத்தை விரும்பும் பன்னாட்டு ஆயுத கார்ப்பேரேட் சந்தை வியாபாரிகள்.
6. உக்ரைனில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள்.
7. எல்லாவற்றிற்கும் மேலாக சோவியத்தின் பெருமை மிக்க அங்கமாக, அதன் கலாச்சாரத்தின் ஒரு பிரதிநிதியாக இருந்த ஒரு பகுதி உக்ரைன்.
இதையெல்லாம் இன்னும் தீவிரமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இருக்க வேண்டிய பொறுப்பு ரஷ்யாவிற்கு இருந்திருக்க வேண்டும். வீட்டோ பவருள்ள, பொறுப்புள்ள வல்லரசு நாடு தானே ரஷ்யா?
ஆக்ரமிப்பு நோக்கம் அல்ல என்கிறார் புட்டின். உண்மைதான் இதனை இந்தியா முழுமையாக நம்பித்தான் ஐநா பாதுகாப்பு சபையில் நடுநிலை என நிலைபாடு எடுத்துள்ளது எனலாம். ஆனால் உலகின் பிறநாடுகள் எந்த அளவிற்கு ரஷ்யாவின் இந்த வார்த்தைகளை நம்பும்?
எந்தக் கட்டத்திலும் அணு ஆயுத யுத்தமாக மாறும் அபாயம். அதனால் உருவாகும் சர்வதேச பதட்ட நிலை.
தாக்குதலில் சற்று எல்லை மீறினாலும், தவறினாலும், அணு உலைகள் தாக்கப்பட்டால், அல்லது அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் எத்தனை பயங்கர விளைவுகளை அது ஏற்படுத்தும் இத்தனை பெரிய ரிஸ்க் ரஷ்யா இந்த விஷயத்தில் எடுத்திருக்க வேண்டுமா என்ன?
அணு உலைகளின் மிக நெருங்கிய எல்லைவரை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இது மிகுந்த கவலை அளிக்கிறது.
யுத்த நிலவரச் செய்திகளாகக் குடியிருப்புப் பகுதிகளில், பள்ளிகளில் குண்டுவீச்சு நடை பெற்றுள்ளதாக காணொலிகள், ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ரஷ்யத் தரப்பு செய்திகளை அறிய ஊடக வசதி இல்லை. யுத்தத்தில் முதல்பலி “உண்மைதானே.”
அகதிகளாக ஐரோப்பிய எல்லைகளில், கொட்டும் பனிக்குளிரில் லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறுகின்ற அவலம்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கல்வி கற்க வந்து, யுத்த சூழலில் மாட்டித் தவிக்கும் மாணவர்களின் துயர நிலை.
யுத்தத்தை காரணம் காட்டி பெட்ரோல், தங்கம் விலையை உயர்த்தும் சர்வதேச வணிகச் சந்தை. அதன் பாதிப்பாக உயரும் விலைவாசிக் குறியீடு, தாறுமாறாக மாறும் பங்குச் சந்தை நிலவரங்கள்.
ஆதர்ச நாடாக இருந்த சோவியத் சிதைந்து இன்று தங்களுக்குள் யுத்தமிடும் நிலையைக் கண்டு மனம் வேதனை கொள்கிறது.
எவ்வளவு விரைவாக இந்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறதோ, அவ்வளவு நலம் பயக்கும் உக்ரேனிற்கும், உலகத்திற்கும். அது நடக்கும் என நம்புவோம்.
– ஆதிரன்