சினிமாவில் காதலைத் தவிர எதுவுமில்லை என்ற காலம் மலையேறி, காதல் அறவே இல்லை எனும் நிலை வந்துவிட்டது. பாலையில் கிடப்பவரின் வாயில் தூறல்கள் சிந்துவதைப் போல அவ்வப்போது சில காதல் திரைப்படங்கள் வெளியாகின்றன.
அந்த வரிசையில் அடங்குகிறது கொரியோகிராபர் பிருந்தா முதன்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் ‘ஹே சினாமிகா’.
மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம்பெற்ற ‘ஹே சினாமிகா’ பாடலை நினைவூட்டும் வகையில் இந்த டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. படமும் கூட அந்தக்கால மணிரத்னம் படங்களைப் பார்த்து எடுக்கப்பட்ட உணர்வையே ஏற்படுத்துகிறது.
துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அதிதிராவ் ஹைத்ரியும் காஜல் அகர்வாலும் நாயகியாக நடித்திருக்கின்றனர். ‘96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
காதல் திகட்டுதய்யா..!
ஆண் பாவம் படத்தில் வரும் ‘காதல் கசக்குதய்யா’ பாடல் வரியை லேசுபாசாக மாற்றி ‘காதல் திகட்டுதய்யா’ என்றால் அதுவே ‘ஹே சினாமிகா’!
கொச்சியில் தற்செயலாக சந்தித்துக்கொள்ளும் யாழனும் (துல்கர் சல்மான்) மோனாவும் (அதிதி ராவ்) முதல் பாரையிலேயே காதலில் விழுகின்றனர். உடனே கல்யாணம் செய்துகொண்டு, சென்னையில் வீடெடுத்து தங்குகின்றனர்.
ஒரு கட்டுமான நிறுவனத்தில் மோனா வேலை செய்ய, ‘நான் ஹவுஸ் ஹஸ்பண்டாக்கும்’ என்று கழுத்தில் ஏப்ரான் அணிந்துகொண்டு சமையலும் கையுமாக இருக்கிறார் யாழன்.
புத்தகங்கள் படிப்பதும் தோட்டத்தைப் பராமரிப்பதும் அவரது இதர வேலைகள்.
இவற்றுக்கு நடுவே ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டால் நிறுத்த மாட்டார் எனும் அளவுக்கு பேச்சு இவருக்கு உயிர் மூச்சு.
யாழனின் இந்த பேச்சும் அவர் சமைக்கும் உணவுகளும் ஒருகட்டத்தில் மோனாவுக்கு சலிப்பை ஏற்படுத்துகின்றன.
கணவரை விட்டு நிரந்தரமாகப் பிரிய மோனா எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிய, பணி நிமித்தம் பாண்டிச்சேரிக்கு மாற்றலாகிறார். அங்கும் யாழன் தொடர, சைக்காலஜிஸ்ட் மலர்விழியின் (காஜல் அகர்வால்) உதவியை நாடுகிறார்.
ஆண்கள் எல்லாருமே பெண்களைத் தவறாக அணுகுபவர்கள் என்ற எண்ணத்துடன் வாழும் மலர் யாழனைத் தன் வலையில் விழவைக்கும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிய, ஒருகட்டத்தில் அவரைத் தீவிரமாக காதலிக்கத் தொடங்குகிறார்.
அதே நேரத்தில், மோனாவுக்கும் யாழனின் இன்னொரு முகம் தெரிய வருகிறது. இறுதியில் யாழனின் கை பிடித்தவர் யார் என்பதோடு படம் நிறைவடைகிறது.
தமிழ் கலாசாரப்படி மனைவிக்கே கணவன் மீது உரிமையுண்டு என்றாலும், அந்த உறவுமுறையில் உண்மை இல்லாமல் போனால் என்ற கேள்வியோடு விரிகிறது திரைக்கதை.
யாழன் யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்குப் பதில் அறிவதற்கான காட்சிகள் நீள நீள, நமக்கு பல கொட்டாவிகள் வருவது சோகம்.
எங்கும் எளிமை!
எந்த போலித்தனங்களும் இல்லாமல் தன்னை அப்படியே பிறர் முன் வெளிப்படுத்திக் கொள்பவனாகவே யாழன் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.
நேர்மறை என்ற பெயரில் கெட்டதிலும் நல்லது பார்த்து என்னதான் கண்டோம் என்று கேட்கும் அப்பாத்திரம், குறைகளைப் பேசுபவராலேயே இச்சமூகம் நாள் தோறும் வளர்கிறது எனும் கொள்கையைக் கொண்டவராக காட்டப்படுகிறது.
வட்டார உணவே உடலுக்கு வலுவூட்டும், துரித உணவு தேவையில்லை, பெண்களின் உடைகளை ஆண்கள் அணியக்கூடாதா, பெண் வேலைக்குச் செல்ல ஆண் வீட்டில் இருக்கலாமே,
கண்ணியம் காப்பதே உண்மையான ஆண்மை என்பது உட்பட சமகாலத்தில் பேசுபொருளாக இருக்கும் பல்வேறு விஷயங்கள் இப்படத்தில் வசனங்களாகவும் காட்சிகளின் பின்னணியாகவும் இடம்பெற்றிருக்கின்றன.
ஆனாலும், கதை முழுக்க ‘எங்கும் எதிலும் எளிமை’ எனும் அம்சம் நிறைந்திருப்பதைத் தனியே சுட்டிக்காட்டாமல் போயிருப்பது ஏதோ ஒன்று விடுபட்ட உணர்வைத் தருகிறது.
நாயகன் மீது நாயகிக்கு வரும் சலிப்பில் இருந்தே திரைக்கதை தொடங்குவதால், அந்த காரணத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள நகைச்சுவை வசனங்கள் பல இடங்களில் தாமதமாகவே புரிகிறது.
ஒவ்வொரு காட்சியும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊதிப் பெருத்திருப்பதை தவிர்த்திருந்தால், இன்னும் கொஞ்சம் காட்சிகளை ’ஊடுபாவு’ போல கோர்த்திருக்கலாம்.
இதனால் பார்த்த முகங்களே மீண்டும் மீண்டும் வந்து வெறுப்பையும் காதலையும் மலை போல கொட்டுவது அயர்வைத் தருகிறது.
திரைக்கதை, வசனம் எழுதிய மதன் கார்க்கி, கொரிய ஒரிஜினல் ‘ஆல் அபவுட் மை ஒய்ஃப்’ கதையில் இருந்து எத்தனை தூரம் விலகிப் பயணித்திருக்கிறார் என்று தெரியவில்லை.
ஆனாலும், இந்த கேள்விகள் அடிக்கடி தோன்றாத வகையில் படத்தில் நாயகன் துல்கர், நாயகிகள் அதிதிராவ், காஜல் மற்றும் நட்சத்திரா நாகேஷ், ஆர்ஜே விஜய் என்று பலரும் நன்றாக நடித்திருக்கின்றனர்.
யோகிபாபு வரும் காட்சி கண்டிப்பாக இத்திரைக்கதைக்கு தேவையில்லை.
முதன்மையான மூன்று பாத்திரங்களை மையப்படுத்தியே திரைக்கதை நகர்வதால், பெரும்பாலும் அவர்களது க்ளோசப் ஷாட்களே அதிகமும் இடம்பெற்றிருக்கின்றன.
ஒட்டுமொத்த ஒளிப்பதிவும் கலர்ஃபுல்லாக இருக்குமாறு மிக அழகாக படமாக்கியிருக்கிறார் ப்ரீதா ஜெயராமன்.
கதையை நேர்கோடாக காட்ட முயன்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர். பாடல் காட்சிகளில் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பின்னணி இசை காட்சிகளின் அடிநாதத்தை இன்னும் கொஞ்சம் உயரம் உயர்த்தினாலும், இறுதி 15 நிமிட காட்சிகளில் அது ஆறாவது விரலாகவே படுகிறது. கொஞ்சம் மவுனத்திற்கும் இடம் விட்டிருக்கலாம்.
‘அச்சமில்லை’ நவீனத்தில் தோய்த்த பழம்பெருமை என்றால், ‘தோழி’, ’மேகம்’ பாடல்கள் வித்தியாசமான மெலடியை நம் காதுகளில் நிரப்புகின்றன. ‘சிறகை’ பாடல் கேட்கையில் 90களின் இளையராஜா நம் நினைவுக்கு வருகிறார்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், குடும்பத்தோடு பார்க்க ஏதுவான ஒரு திரைப்படத்தை தந்திருக்கிறார் பிருந்தா.
நாயகிகள் இருவரும் ‘க்ளிவேஜ்’ தெரியுமாறு உடையணிந்தாலும், அது திரையில் ஆபாசமாக தென்படாதது ஒரு பெண் இயக்குனராக இருப்பதன் வித்தியாசத்தைக் காட்டுகிறது.
அது அப்பாத்திரங்களின் வாழ்க்கை முறை என்று தோன்ற வைப்பதுவே இயக்குனராக அவர் பெற்றிருக்கும் வெற்றி.
இறுதிக்காட்சியில் துல்கரும் அதிதியும் பேசும்போது சுற்றியிருப்பவர்கள் ‘செட் பிராப்பர்டி’ போல இருப்பதைத் தவிர்த்துப் பார்த்தால், அனைத்து காட்சிகளும் ஒரு புதிய உலகை நம் முன் வைப்பதை உணர முடியும்.
ஆல் கிளாஸ் ‘ஹிட்’டா?!
‘ஹே சினாமிகா’வில் இடம்பெற்ற பெண் பாத்திரங்கள் அனைத்துமே நன்றாகப் படித்த, பணியில் இருக்கிற, நன்றாகச் சம்பாதிக்கிற, கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிப்பவர்களாகவே இருக்கின்றனர்.
ஆனாலும், அதிதி மற்றும் காஜல் பாத்திரங்களை ஒன்றுக்கொன்று முரணாகப் படைத்திருப்பது அழகு.
இருவரும் சேர்ந்தாடும்போது ‘சபாஷ் சரியான போட்டி’ என்று சொல்லலாம் என்றால், அந்தளவுக்கு இருவரையும் நடனமாட விடாமல் கதாபாத்திரங்களாகவே நடமாட விட்டிருக்கிறார் பிருந்தா.
இருவரில் ஒருவர் தனது உடலழகை ஒருவர் பாலியல் ரீதியில் கிண்டலடிப்பதை ‘ஜஸ்ட் லைக் தட்’ தாண்டிச் செல்ல, இன்னொருவர் அப்படிப்பட்ட அவஸ்தைகளை நாள்தோறும் அனுபவித்த வேதனைகளை வெறுப்பை மலையாக மனதுக்குள் குவித்து வைத்திருக்கிறார்.
இவ்விரண்டு பாத்திரங்களின் இயல்பையும் மாற்றும் பொறுப்பு நாயகனுக்கு இருப்பதாக காட்டுவதுதான் இத்திரைக்கதையின் அடிப்படை.
இதுவே, இப்படத்தை ‘ஏ’ கிளாஸ் ஆடியன்சுக்கானது என்று ஒதுக்கிவிடும் அபாயத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது.
நோயும் மருந்தும் காதலே எனும் மையக்கரு நம் நெஞ்சில் ஒட்டாமல் உலர்ந்து விடுகிறது.
கூடவே, திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் மிகச்சிறந்த காதல் படைப்பாகி இருக்குமே என்ற ஏக்கம் எழுவதையும் நம்மால் தவிர்க்க முடியவில்லை.
– பா.உதய்
07.03.2022 12 : 30 P.M