சிவாஜியை நடிகராக மாற்றிய அவமானங்கள்!

‘நூர்ஜகான்’ நாடகத்தில் பெண் வேடமிட்டு நூர்ஜகனாக நடித்த சிவாஜியின் நடிப்பு, நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பி.ஏ.பெருமாள் முதலியாருக்கு மிகவும் பிடித்துப் போனது.

அதன் பிறகு தேவி நாடக சபாவினர் நடத்தி வந்த ‘பராசக்தி’ நாடகத்தைக் கண்டதும் அதை திரைப்படமாக்கி விடவேண்டும் எனத் துடித்தார் பெருமாள்!

சிவாஜியை எப்படியாவது பராசக்தியில் நடிக்க வைக்கவேண்டும் என்ற முடிவுடன் ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரைச் சந்தித்து விபரம் சொல்லியிருக்கிறார்.

ஆனால், மெய்யப்பச் செட்டியார் பெருமாளிடம், “நாடகத்தில் நடிப்பது வேறு சினிமாவில் நடிப்பது வேறு, நாடகங்களில் நடித்து வரும் சிவாஜி சினிமாவில் நன்றாக நடிப்பாரா எனக்குச் சந்தேகமாகயிருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.

பி.ஏ.பெருமாளோ சிவாஜி தான் நடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

வசன உச்சரிப்புச் சோதனை நடந்த பொழுது பதட்டத்தில் சக்சஸ் என்ற வார்த்தையை “சத்தத்” எனப் பேசியிருக்கிறார் சிவாஜி.

“என்னப்பா இப்பிடி வசனம் பேசுற மீன் வாய்த் தொறந்த மாதிரி தொறக்குறியே” என சிவாஜியைத் திட்டியிருக்கிறார்கள்.

சிவாஜிக்கு மிகுந்த மனவருத்தம்.

இரட்டை இயக்குநர்களில் ஒருவரான கிருஷ்ணன், “கணேசா இதுலாம் சினிமாவில் சகஜம் தான். எப்பிடியாவது கஷ்டப்பட்டு இந்தப் படத்துல நடிச்சிரு, அப்புறம் எல்லா சினிமாக்காரங்களும் உன் பின்னாடி தான் வருவாங்க பாரு” என நம்பிக்கை ஊட்டியிருக்கிறார்.

சிவாஜி நடித்த சில காட்சிகள் மெய்யப்பச் செட்டியாருக்குத் திருப்தியளிக்கவில்லை. உடனே பெருமாளிடம் இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை, சிவாஜியத் தூக்கிட்டு கே.ஆர்.ராமசாமி இல்லேன்னா டி.ஆர்.மகாலிங்கத்தை நடிக்க வைக்கலாம் எனக் கூறியிருக்கிறார்.

அதற்கு பெருமாள் “உங்களுக்குத் திருப்தியளிக்காத காட்சிகளை வேண்டுமானால் திரும்ப எடுத்துக் கொள்வோம். ஆனால் இந்தப் படத்திலிருந்து சிவாஜியை நீக்க முடியாது” என உறுதியாகக் கூறிவிட்டார்.

தன்னுடன் முதன் முதலாக தயாரிப்பில் கூட்டணி சேர்ந்திருக்கும் பெருமாளுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற பெரும் கவலை மெய்யப்பச் செட்டியாருக்கு.

சிவாஜி நடித்த சில காட்சிகளைத் திரும்பவும் சூட் செய்து பல போராட்டங்களுக்குப் பின் நேஷனல் பிக்சர்ஸ் பேனரில் பராசக்தி (1952) வெளியானது.

முதலில் பராசக்தி படத்திற்கு அந்த நாடகத்தை எழுதிய பாலசுந்தரம் தான் வசனம் எழுதுவதாக இருந்தது.

நாடகம் வேறு சினிமா வேறு, சினிமாவிற்கு ஏற்றவாறு எழுத முடியாமல் பாலசுந்தரம் திணறவே அண்ணாவின் அடுக்கு மொழிப் பாதையில் வந்த கலைஞருக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

அண்ணாவின் வசனத்தைவிட கலைஞரின் வசனம் சிறப்பாக இருப்பதாக மக்கள் பேசிக் கொண்டார்கள். குணசேகரனைக் கொண்டாடினார்கள்.

“என்னை மாற்றும்படி பி.ஏ.பெருமாளிடம் பலரும் வற்புறுத்தினார்கள். ஆனால் என்னை வாழ வைத்த தெய்வமான அவர் இந்த விமர்சனங்கள் எதற்கும் செவி சாய்க்கவில்லை.

என்ன ஆனாலும் சரி. கணேசனை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். அவரது மன உறுதியும் அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையும்தான் என்னை நடிகனாக்கியது. எனக்கு வாழ்வு கொடுத்த தெய்வம் அவர்” என்று தனது சுயசரிதையில் சிவாஜி குறிப்பிட்டிருக்கிறார்.

Comments (0)
Add Comment