– 6-ம் தேதி வரை கன மழை எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில், வரும் 6-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்த வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்,
“தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இது, மேலும் வலுப்பெற்று, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.
இதன் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கன மழையும், நாளை மிகக் கன மழையும் பெய்யும்.
சென்னையில் இன்று வானம் மேக மூட்டமாக காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும்.
வரும் 6-ம் தேதி கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிக கன மழையும்; செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு குறைவு. ஆழ்ந்த மண்டலமாக மாறி வலுவிழக்கும். தமிழகப் பகுதிகளில் அதி கன மழைக்கான ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் (கோடைக் காலத்தில்) கால கட்டத்தில் புயல் சின்னங்கள், காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் மிக அரிதாகவே ஏற்படும்.
கடந்த 1938-ம் ஆண்டில் இலங்கையை ஒட்டிய பகுதிகளில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது.
அதன்பிறகு தற்போது 84 ஆண்டுகளுக்கு பின் அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. 1994 மார்ச்சில் அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது.
அது, தாழ்வு மண்டலமாக வலுப்பெறவில்லை. இந்த ஆண்டு கோடை காலத்தை பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளை விட வெப்பம் குறைவாக இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
அதேபோல, தென் மாநிலங்களிலும் இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட குறைய வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, தமிழக வடக்கு கடலோரம், தெற்கு ஆந்திர கடலோரத்தில் இன்றும்; மத்திய மேற்கு, தென் மேற்கு வங்கக்கடல், வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நாளையும், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம்.
வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில், வரும் 6-ம் தேதி மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
எனவே, இந்தப் பகுதிகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்களும் உடனே கரை திரும்ப வேண்டும்” என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
04.03.2022 2 : 30 P.M