உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தோடு, ரஷ்யா போரைத் தொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது.
அந்தத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா ஒதுங்கி இருந்தது. இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் என்ற தலைப்பிலான தீர்மானம், 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா., பொதுச் சபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
மொத்தம் 96 நாடுகள் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தன. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், அமெரிக்கா உட்பட 141 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன.
பெலாரஸ், எரீதிரியா, வடக்கு கொரியா, ரஷ்யா மற்றும் சிரியா, தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இந்தியா, வங்கதேசம், சீனா, பாகிஸ்தான், இலங்கை உட்பட 34 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளவை:
உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை எடுப்பதாக, பிப்ரவரி 24-ல் ரஷ்யா வெளியிட்ட அறிவிப்பு கண்டனத்துக்குரியது.
சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டின் நில எல்லையை ஆக்கிரமிக்கும் வகையில் அச்சுறுத்துவதை ஏற்க முடியாது.
அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைக்க ரஷ்யா உத்தரவிட்டுள்ளதும் கடும் கண்டனத்துக்குரியது. உறுப்பு நாட்டின் இறையாண்மை, சுதந்திரம், எல்லையை பாதுகாக்கும் உரிமைக்கு எதிரான எந்தச் செயலையும் ஏற்க முடியாது.
உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு, இந்த சபை தன் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.
ரஷ்யா எவ்வித நிபந்தனையும் இல்லாமல், போரை உடனடியாக நிறுத்த வேண்டும். அந்நாடு உக்ரைனில் இருந்து தன் படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும்” என இதில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் மூலம், உலக நாடுகள் தங்களுடைய கருத்துக்களைத் திடமாக தெரிவித்துள்ளன. அதற்கு என்னுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.
04.03.2022 11 : 55 A.M