பணி நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியிடங்களுக்கு செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வெளி இடங்களுக்கு பெண்கள் தனியாக செல்லும்போது போகும் இடம் பற்றிய அனைத்து தகவல்களையும் துல்லியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மக்கள் நடமாட்டம் இல்லாத சாலையில் தனியாக நடப்பது அல்லது இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத சாலைகளில் செல்வது கூடாது. தினமும் குறிப்பிட்ட சாலையில் செல்லும் நிலையில் யாராவது பின் தொடர்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் சேலைத் தலைப்பு, துப்பட்டா ஆகியவை வாகனத்தில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் கவனமாக இருக்கவும்.
வாகனங்களை நிறுத்தும்போது, அருகில் வேறு வாகனங்கள் இல்லாமல் தனியாக நிறுத்த வேண்டி வந்தால் சுற்றுப்புறத்தை எச்சரிக்கையாக கவனிக்கவும்.
பொது இடங்களில் காரணம் இல்லாமல் பர்ஸை திறந்து பார்ப்பது அல்லது பணத்தை எண்ணுவது போன்றவற்றை தவிர்க்கவும்.
ரெயில் அல்லது பேருந்துகளில் பயணிக்கும்போது தனியாக அமர்ந்து பயணிக்காமல் மற்ற பயணிகள் உள்ள இடங்களுக்குச் சென்று விடவும்.
மொபைல் போனில் மூழ்கிவிடாமல் உங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கவனிப்பது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.
வெளியிடங்களுக்குச் செல்லும்போது உடைகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். அழகாகவும், நாகரிகமாகவும் உடைகள் இருக்க வேண்டும். இறுக்கமான உடைகளைத் தவிருங்கள்.
செல்போனில் பேசிக்கொண்டே சூழல் பற்றி உணராமல் சாலையில் நடந்து செல்வது, தன்னுடைய சுய விபரங்கள் பற்றி செல்போனில் தெரிவிப்பது ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.
காலை நடைபயிற்சி, மால்கள், திரையரங்குகள் ஆகியவற்றுக்கு போகும்போது தங்க நகைகளை அணிவதைத் தவிர்த்து, எளிமையாக செல்வதே பாதுகாப்பானது.
பணி நிமித்தமாகவோ அல்லது இதர காரணங்களுக்காகவோ வெளியிடங்களில் தங்க நேரும்போது ரகசிய கேமரா மூலம் பெண்கள் படம் பிடிக்கப்படலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
மால்களில் உள்ள கழிவறைகள், துணிக்கடைகளில் ஆடை அணிந்து பார்க்கும் அறைகள், ஓட்டல் அறைகள் ஆகியவற்றில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது.
அப்படிப்பட்ட நிலையில் அறையில் உள்ள மின் விளக்கை அணைத்துவிட்டு, செல்போன் கேமராவால் பிளாஷ் இல்லாமல் அறை முழுவதும் புகைப்படமாக எடுத்துப் பார்க்கவும்.
கேமரா ஏதேனும் இருந்தால் அப்பகுதியில் சிவப்பு நிற வெளிச்சம் தென்படுவதை வைத்து எச்சரிக்கையாக செயல்படலாம்.
தமிழக காவல்துறை அறிமுகப்படுத்திய ‘காவலன்’ என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, தங்கள் சுய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
அதன் மூலம் நாம் செல்லும் இடம் பற்றி காவல்துறை கச்சிதமாக அறிந்து தேவைக்கேற்ப பாதுகாப்பு அளிப்பார்கள்.
– நன்றி: மாலை மலர்
02.03.2022 5 : 30 P.M