ரஷ்யா – உக்ரைன் யுத்தத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை; நடுநிலை வகித்தது.
11/3 என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா வீட்டோ வாக்களிப்பின் மூலம் முறியடித்தது. இந்தியாவின் நிலை இப்போது உக்ரைனில் வாழும் தன் மக்களை காப்பாற்ற வேண்டும் என ஆனது. அதிலும் குறிப்பாக மாணவர்களை.
18000 ஆயிரம் இந்திய மாணவர்கள், உக்ரைனில் இருந்தனர். அதில் சுமார் 1000 பேரை மட்டும் இதுவரை திருப்பி கொண்டு வந்துள்ளோம். மீதி 17000 பேர்?
உக்ரைன் அருகிலுள்ள பிற நாடுகளில் இருந்து மட்டுமே கொண்டுவர முடியும். ‘ஆப்ரேஷன் கங்கா’ மூலம் இவர்களைக் கொண்டு வர குறைந்தது 23 நாட்கள் ஆகுமாம் இப்போது இந்தியா செய்துள்ள ஏற்பாட்டின்படி.
ஹங்கேரி, போலந்து எனப் பல நாடுகளின் எல்லைவரை தடைகளைத் தாண்டி கொட்டும் பனியில், மாணவர்கள் அவர்களாக ரயிலில் ஏறி வர வேண்டும். போலந்து எல்லையில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் குவிந்துள்ளனர்.
யுத்தம் தொடங்கி 6 நாட்கள் முடிந்து விட்டது. இப்போதுதான் ‘ஆப்ரேஷன் கங்கா’ தொடங்கப்பட்டுள்ளது.
வங்கிகள் இயங்கவில்லை. சூப்பர் மார்க்கட்டுகள் காலியாக உள்ளன. இரவில் பங்கர்களில் தூங்க வேண்டும். உணவு ரொட்டியும், பிஸ்கெட்டும் மட்டுமே. ஒரு இந்திய மாணவர் ஏற்கனவே குண்டு வெடிப்பில் பலியாகி விட்டார்.
நமது மாணவர்களின் நிலைமை இப்படி என்றால் மாணவர்கள் அல்லாத பிற இந்தியர்களின் கதி?
யுத்த அபாயம் சூழும் நேரத்திலேயே நம் மக்களை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்திய ராணுவ விமானங்களைக் கொண்டு நடத்தும் ‘ஆப்ரேஷன் கங்கா’ மிகத் தாமதமான நடவடிக்கை.
ஏர் இந்தியா அரசின் வசம் இல்லை. அமைச்சர்கள் நேரடியாக களத்தில் போய் நடவடிக்கை என விளம்பரம் செய்யலாமே தவிர, என்ன பயன் விளையும்?
எப்படி காப்பாற்றப் போகிறார்கள் 17000 மாணவர்களை? குண்டு மழை பொழியும் போது, விமான நிலையம் வரை மாணவர்கள் எப்படி பத்திரமாக வந்து சேர முடியும்?
தவிக்கும் இந்திய மாணவர்களின் பெற்றோரின் நிலையை எண்ணினால் பெரும் கலக்கம் எற்படுகின்றது.
தகுதி வாய்ந்த உயர் கல்வி நிலையங்களில் கல்வியை உறுதி செய்தால் ஏன் மாணவர்கள், கல்வி கற்க வெளிநாட்டு பல்கலைக் கழகங்களைத் தேடி அலைய வேண்டும். அதை அவர்களுக்கு அளிக்காதாது யாருடைய குற்றம்?
-ஆதிரன்
02.03.2022 10 : 50 A.M