காந்தி, நேருவால் புகழப்பட்ட ‘கவிக்குயில்’!

இந்தியாவின் கவிக்குயில் சரோஜினி நாயுடு நினைவு தினம் இன்று (மார்ச்-3).

ஆந்திராவில் வசித்த வங்காளக் குடும்பத்தில் பிறந்த சரோஜினி நாயுடுவின் அப்பா ஒரு கல்லூரியை உருவாக்கி ஹைதரபாத் நகரத்தில் முதல்வராக இருந்தார். தன் மகளை ஒரு அறிவியல் மேதையாக்க அவர் விரும்பினார். ஆனால், சரோஜினியின் உள்ளமோ கவிபாடுதலில் திளைத்தது.

மிகச்சிறிய வயதில் 1300 வரிகள் கொண்ட ‘ஏரியின் அழகி’ எனும் கவிதையை இயற்றினார். அதை படித்து பார்த்து பிரமித்த ஹைதராபாத் நிஜாம் இவரை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பினார்.

இங்கிலாந்திற்கு கணிதம் படிக்கப் போனவர் அங்கேயிருந்த இயற்கையின் வனப்பு இவரை ஆட்கொள்ள அற்புதமான கவிதைகள் எழுதினார்.

அதைப்படித்து பார்த்த ஆர்தர் சைமன்ஸ், எட்மண்ட் கோஸ் உள்ளிட்ட ஆங்கிலேய எழுத்தாளர்கள் வியந்தார்கள். ஆங்கில மொழி தாய்மொழியாக இல்லாத அவரின் கவித்துவம் அவர்களை பிரமிக்க வைத்தது.

சரோஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக கணிதத்தை தொடராமல் நாடு திரும்பினார். ஏற்கனவே வேறு சாதியைச் சேர்ந்த கோவிந்தசாமியுடன் காதல் அரும்பி இருந்தது இவருக்கு; வீட்டின் எதிர்ப்பை சமாளித்து அவரை கரம் பிடித்தார்.

இவரின் கவிதைகளைப் பார்த்து அரசு கெய்சரி ஹிந்த் எனும் பட்டத்தைத் தந்தது. கோகலேவின் அழைப்பை ஏற்று விடுதலைப்போரில் பங்கேற்றார் சரோஜினி. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆங்கிலேய அரசு தந்த தன் பட்டத்தைத் திரும்பத் தந்தார்.

1925-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார். இந்தியப் பெண் ஒருவர் காங்கிரசின் தலைவரானது அதுவே முதல் முறை. அவரை காந்தி ‘இந்தியாவின் கவிக்குயில்’ என அழைத்தார். நேரு இந்திய தேசியத்தின் ‘உதயத் தாரகை’ எனப் புகழ்ந்தார்.

ஆங்கிலேய அரசை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்களில் பங்குகொண்டு சிறை சென்றார். கவிதைகள் மூலம் எழுச்சியை ஏற்படுத்தினார்.

“கவிஞர் என்பவனும் இந்நாட்டின் ஒரு குடிமகன் தான், அவனும் மக்களில் ஓர் அங்கம்தான், நல்லதைக் கண்டால் போற்றிப் பாடும் கவிஞன், தீமையைக் கண்டால் தீப்பந்தத்துடன் அநீதியை அழிக்க அவன் கொதித்தெழுவதை யாராலும் தடுத்துவிட முடியாது” என சொன்னவர் கவிக்குயில் சரோஜினி நாயுடு.

02.03.2022  4 : 40 P.M

Comments (0)
Add Comment