சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே…! கேட்டிருப்பீர்களே!
“சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே’’ என்று துவங்கி “செந்தமிழ்த் தேன்மொழியாள்’’ என்று நகர்கிற,
“ஆடை கட்டி வந்த நிலவோ’’ ‘’தீர்த்தக்கரையினிலே‘’ என்று துவங்குகிற பாடல்களை?
டி.ஆர்.மகாலிங்கத்தின் குரல் தான்!
வயலின் இழுவையில் வருகிற ராகம் மாதிரியான பிசிரற்ற என்னவொரு குரல்?
பலருக்கு இந்தக் குரலில் அந்தக் காலத்திய பாடல்களைக் கேட்கும்போது ஒரு குறுகுறுப்பு ஏற்படலாம்.
கொஞ்சம் பின்னோக்கிச் சில விஷயங்கள்.
மதுரை மாவட்டத்தில் செழிப்பான பகுதியான சோழவந்தானில் வைகையாற்றின் தென்பகுதியில் இருக்கிறது தென்கரை கிராமம்.
இங்குள்ள அகரஹாரத்தில். வைதீகமான பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் மகாலிங்கம். சிறுவயதிலே இருந்து பாட்டு தொற்றிவிட்டது.
பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் சேர்ந்து கிடைத்தவை பெண் வேஷங்கள். அடுத்து கிருஷ்ணர் வேஷம். ஏ.வி.மெய்யப்பச செட்டியாரால் கிராமத்துக்கு வந்து அழைத்துச்செல்லப்பட்டபோது மகாலிங்கத்துக்கு வயது 12.
நந்தகுமார் – படத்தில் கிருஷ்ணர் வேடம். படம் வெற்றி.
தொடர்ந்து – ஸ்ரீவள்ளி, வேதாள உலகம், நாமிருவர் என்று ஏ.வி.எம் தயாரித்த படங்களில் வாய்ப்பு. ஸ்ரீவள்ளியில் மகாலிங்கத்தின் பாடல்கள் அனைத்தும் அந்தக் காலத்தில் ‘ஹிட்’.
புகழின் உச்சிக்குப் போனார் மகாலிங்கம்.
சென்னையில் வசதியான வீடு. 27 கார்களுடன் வாழ்ந்த அவர் ‘மச்சரேகை’, ‘மோகன சுந்தரம்’ என்று சொந்தப் படங்களை எடுத்தாலும் எடுத்தார்.
சட்டென்று பலத்த சரிவு.
அவருடைய மார்க்கெட் சரிந்து வீடு ஏலத்திற்குப் போனது.
ஒதுங்கியிருந்த அவருடைய வீட்டிற்கு முன்னால் 1958ல் வந்து நின்றது கவிஞர் கண்ணதாசனின் கார். அவருடைய சொந்தக் கம்பெனியில் தயாரான ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் மறுபடியும் கதாநாயகன் மகாலிங்கம்.
“திராவிடப் பொன்னாடே’’
“செந்தமிழ்த் தேன் மொழியாள்’’ – பாடல்களுடன் படம் நல்ல ஹிட்.
அப்புறம் சில படங்களில் நடித்தாலும், சென்னை வாழ்க்கை அலுத்துவிட்டது மகாலிங்கத்திற்கு. சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார்.
ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார். இசைக் கச்சேரிகளில் பாடினார்.
இடையில் ஏ.பி.நாகராஜன் ‘’திருவிளையாடல்’’ படத்தை எடுத்தபோது நடித்துப் பாடினார். ராஜராஜ சோழனிலும் நடித்தார், பாடினார். ‘’தென்றலோடு உடன் பிறந்தாள்’’ பாட்டு நினைவுக்கு வருகிறதா?
இருந்தும் 1976 லிருந்து உடல் நலம் குன்றிய நிலையிலும் பாடிக் கொண்டிருந்தவர் கோவையில் ஒரு கோவில் விழாவுக்குப் பாடக் கிளம்பிக் கொண்டிருந்தபோது அடக்கமாகிப் போனார்.
சோழ வந்தானுக்கு அருகில் உள்ள தென்கரையில் உள்ள டி.ஆர்.மகாலங்கத்தின் வீட்டிற்குப் போனபோது நடு ஹாலில் மகாலிங்கம் பலருடன் எடுத்துக் கொண்ட படங்கள்.
காமராஜர், எம்.ஜி.ஆர், சிவாஜி என்று பலருடன் பவ்யமாக நிற்கும் படங்கள்.
“அப்போ இவருக்குச் சரியான டிரஸ் கூடக் கிடையாது. இவரைத் தேடி ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் கிராமத்துக்கு வந்தப்போ ‘’வாங்க மாமா.. நான் கூட்டிட்டுப் போறேன்’’னு இவரே எங்க வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தார்.
வீட்டுக்கு வந்த செட்டியார் அட்வான்ஸாக ஒரு தொகை கொடுத்து இவரை அழைச்சுண்டு போனார். இந்த வாழ்க்கைக்கு அவர் தான் ஆதாரம்’’
என்று பழைய நினைவுகளைத் துல்லியமாகப் பகிர்ந்து கொண்டார் மகாலிங்கத்தின் மனைவியான கோமதியம்மாள்.
நடுக்கூடத்தில் கன்னத்தில் கை வைத்த படி கண்ணதாசனின் பெரிய படம்.
அதைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறார்.
“சென்னையில் சம்பாதிச்சு நல்லா வாழ்ந்து சொந்தப்படங்கள் எடுத்து நொடிச்சுப் போய் ரொம்பக் கஷ்டமான நிலை. அப்போ தான் கவிஞர் வந்து மாலையிட்ட மங்கையில் புக் பண்ணினார்.
அன்றைக்குச் சாயந்தரமே காரில் இரண்டு மூட்டை அரிசி எங்க வீட்டுக்கு வந்தது. கண்ணதாசன் எங்களுக்கு இன்னொரு தெய்வம் மாதிரி.
அப்புறம் என்னவோ இவருக்குக் கிராமத்துக்குப் போகணும்னு தோணிருச்சு.. இங்கே வந்துட்டோம்’’ – தழுதழுப்புடன் சொல்கிறார் கோமதியம்மாள்.
வீட்டில் தனித்து ஒரு அறை. அதில் ஒரு தகரப்பெட்டி. அந்தக் காலத்தில் நாடகங்களில் நடித்த போது உடுத்திய உடைகள், கிரீடங்கள். எல்லாமே காலத்தின் மெருகு குலைந்திருக்கின்றன.
வீட்டில் இருந்த மகாலிங்கத்தின் பேரனான ராஜேஷ் தாத்தா மகாலிங்கத்தின் ஆர்மோனியத்தைத் துடைத்து சுருதி கூட்டி நமக்கு முன்னால் பாடுகிறார்.
மகாலிங்கத்தை உச்சிக்குக் கொண்டு போன அதே பாட்டு. அதே குரல்.
“சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக்காட்டினிலே…’’
பாட்டைப் பாடியபோது மகாலிங்கத்தின் குரல் ஊடுருவி மூன்றாவது தலைமுறையில் ஒலிக்கிற போதும் கணீரென்று இருக்கிறது.
விஸ்தாரமான குரல் அடுக்குகளில் சர்வ சாதாரணமாக ஏறிப் போகிற மாதிரிப் பாடுகிறார் பேரன்.
கேட்கிறபோது காலத்தில் பின்னகர்வதைப் போன்ற
உணர்வு ஏற்படுகிறது.’’
-மணா
-1993 ஜூலை 31 ல் வெளியான ‘’தினமணி சுடர்’’ இணைப்பிதழில் நான் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.