யுத்தம் வேண்டாம்…!

தாய் தலையங்கப் பக்கம்.

***

“யுத்தம் வேண்டாம்”

இது ரஷ்யாவின் மாபெரும் மக்கள் எழுத்தாளரான மார்க்சிம் கார்க்கி எழுதிய புத்தகத்தின் தலைப்பு.

’லெனினுடன் சில நாட்கள்’, ‘அமெரிக்காவிலே’ போன்ற மகத்தான நூல்களை கார்க்கி எழுதிய காலகட்டத்தில் சாதாரண மக்களைக் காவு வாங்கும் யுத்த வெறி வேண்டாம் என்பது தான் அதன் மையம்.

அதைத் தான் இன்றைய ரஷ்யாவுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

உக்ரைன் நாட்டை ’நேட்டோ’ அமைப்பில் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதம் போர் தொடுப்பது தானா?

உக்ரைனின் உள்நாட்டுப் பிரச்சினை ஒருவேளை காரணமாக இருந்தாலும், உலகம் எங்கும் கொரோனாவின் தாக்கம் பரவி, உயிரிழப்புகள் பெருகி, வாழ்வாதாரமே குலைந்து கொண்டிருக்கும் நிலையில், போர் நடவடிக்கை மேலும் எத்தகைய சீர்குலைவை ஏற்படுத்தும் என்பது ரஷ்யாவுக்குத் தெரியாதா?

உக்ரைனில் படைகளைக் குவித்து, போரைத் துவக்கியிருக்கிற ரஷ்யாவினால் பாதிப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் ரஷ்யாவை எச்சரித்திருக்கின்றன. பல உலக நாடுகள் கவலை தெரிவித்திருக்கின்றன.

உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்கள் பரஸ்பரம் பேச்சு வார்த்தை நடத்த இணங்கி வந்திருக்கிறார்கள். பேச்சு வார்த்தை சுமூகமாக நடந்து போர் முடிவுக்குவந்து அமைதி திரும்ப வேண்டும் என்பது தான் உலக மக்களின் விருப்பம்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் யாரைப் பிரதிநிதித்துவப் படுத்தி இந்தப் போர்ச் சூழலை உருவாக்கினார் என்பது விசித்தரமாகவும் இருக்கிறது.

ரஷ்யா ஒரு காலத்தில் வலியுறுத்திய பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு நேர் எதிராகவும் இருக்கிறது.

கொரோனாத் தொற்றிலிருந்து மானுட சமூகம் விடுபடத் திணறிக் கொண்டிருக்கையில், மேலும் கடுமையான பொருளார நெருக்கடியை ரஷ்யா உருவாக்கலாமா?

இதே ரஷ்யாவில் சோஷலிசப் புரட்சியை உருவாக்கியவரான லெனின் சொன்னதை விட, யாரும் பொருத்தமாகச் சொல்லிவிட முடியாது.

“நம் தவறுகளிலிருந்து நாம் பாடம் படிக்கிறோம்”

ரஷ்யா தற்போது உணர வேண்டியது இந்தப் பாடத்தைத் தான்.

26.02.2022 12 : 30 P.M

*

Comments (0)
Add Comment