மலைக்கள்ளன் படத்தில் தொடங்கிய எம்ஜிஆர் பார்முலா!

திரைப்பட உலகில் ‘பெஸ்ட் எண்டர்டெயினர்’ என்ற வார்த்தை இன்று அதிகமாகப் புழக்கத்தில் உள்ளது. அந்த வார்த்தையை மக்கள் அறியும் முன்னரே, தமிழ் சினிமாவில் அதற்கு அர்த்தம் தந்தவர் எம்ஜிஆர் என்றால் அது கண்டிப்பாக மிகையல்ல.

நாயகன் ஆவதற்கு முன்பும் சரி, நாயக அந்தஸ்து பெறவைத்த ‘ராஜகுமாரி’ தொடங்கி ‘நாம்’, ‘கூண்டுக்கிளி’ வரையிலும் சரி, அவர் நடித்த பாத்திரங்கள் அனைத்தும் கதையோடு பொருந்தச் செய்யும் வாய்ப்புகளாகவே அமைந்தன.

அவற்றில் இருந்து விலகி, ‘எம்ஜிஆர்’ என்ற மனிதரை ரசிகர்கள் ஆராதிக்கச் செய்த திரைப்படம் ‘மலைக்கள்ளன்’. இந்த படத்திற்குப் பிறகுதான், அவர் தன் படங்களுக்கான பார்முலாவை மெதுமெதுவாக உருவாக்கத் தொடங்கினார்.

இந்தப் படம் வெளியான 1954ஆம் ஆண்டில் தான் சிவாஜிக்கு ‘மனோகரா’, ‘தூக்கு தூக்கி’ என்று இரண்டு சூப்பர்ஹிட் திரைப்படங்கள் அமைந்தன.

அதேநேரத்தில், சிவாஜியுடன் எம்ஜிஆர் இணைந்து நடித்த ஒரே திரைப்படமான ‘கூண்டுக்கிளி’ ஆரவாரத்துடன் வெளியாகி தோல்வியைத் தழுவியது.

இந்த காலகட்டத்தில் தியாகராஜ பாகவதர், சின்னப்பாவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கோலோச்சப் போவது எம்ஜிஆரும் சிவாஜியும் தான் என்ற நிலைமை உருவானது.

சிவாஜி அதிகப் படங்களில் நடித்து நிறைய வெற்றிகளை ஈட்ட, தனக்கான படங்களைக் குறிவைத்துத் தேடத் தொடங்கினார் எம்ஜிஆர்.

அதனால், அவர் நிறைய பொருளாதார இழப்பையும் சந்திக்க வேண்டியிருந்தது வேறு விஷயம்.

ஹாலிவுட் தாக்கம் கொண்ட எம்ஜிஆர்!

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எம்ஜிஆர் படங்களைப் பார்க்கச் சலிக்காது என்று கூறுவோர் எண்ணிக்கை இப்போதும் மிக அதிகம். எம்ஜிஆரின் ரசிகர்களாக இருப்பதால் மட்டும் இவ்வாறு கூறுவதாகக் கருதக் கூடாது.

பெரும்பான்மையான எம்ஜிஆர் படங்கள் சிறந்த பொழுதுபோக்கு தன்மை கொண்டவை. அவர் படங்களைப் பார்க்கும்போது, ‘போரடிக்கிறது’ என்று சொல்ல மனம் வராது.

அதற்காக, அவர் மெனக்கெட்டது அந்தக் கால சினிமா ஜாம்பவான்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். குறிப்பாக, அவரது படங்களின் திரைக்கதைகளில் ஒருவித ‘ஹாலிவுட்தனம்’ இருக்கும்.

குறிப்பிட்ட பிரச்சனையை முன்வைத்து திரைக்கதை தொடங்கும்போதே, அதற்கு முன் இருந்த நிலைமை என்னவென்று ரசிகர்களுக்கு விளங்கிவிடும்.

கதை, கதாபாத்திரங்கள், திரைக்கதையில் முன்வைக்கப்படும் சவால் என்று எல்லாமே முதல் அரை மணி முதல் 45 நிமிடங்களுக்குள் ரசிகர்களுக்கு விளக்கப்பட்டுவிடும்.

அதேபோல, திரைக்கதையும் சில நாட்கள் அல்லது சில மாதங்களில் நிகழ்வதாகவே சொல்லப்படும். இதனை மீறி இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சிகள் கூட கதறியழ வைக்கும் சோகத் தன்மையோடு இருக்காது என்பது சாதாரண ரசிகர்களுக்குப் பிடித்தமான ஒரு அம்சம்.

இந்த விஷயங்கள் எல்லாமே சொல்லிவைத்தாற்போல, மலைக்கள்ளன் படத்தில் உண்டு.

‘ராபின்ஹூட்’, ‘மாஸ்க் ஆஃப் ஜாரோ’ என்ற கதாபாத்திரங்களைக் கொண்டு மேற்கத்திய உலகில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. அவற்றின் தாக்கம் ‘மலைக்கள்ளன்’ பாத்திரத்தில் நிறைய..

புதினம் தழுவிய கதை!

மலைக்கள்ளன் என்ற நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் புதினத்தைத் தழுவியே இப்படம் உருவாக்கப்பட்டது. அதனால், டைட்டிலில் மலைக்கள்ளன் என்ற பெயருடன் நாமக்கல் கவிஞர் இயற்றியது என்றே குறிப்பிடப்பட்டது.

இத்திரைப்படம் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் எம்ஜிஆர் நடிக்க, தெலுங்கில் என்டிஆர் நடிக்க, ஒரு மாத இடைவெளியில் இரு படங்களும் வெளியாகின.

மலையாளம், கன்னடம், சிங்கள மொழிகளில் இப்படத்தை ஸ்ரீராமுலு நாயுடுவே தயாரித்து இயக்கினார்.

இந்தியிலும் திலீப்குமார் நடிப்பில் ‘ஆசாத்’ என்ற பெயரில் வெளியானது. இப்படத்தையும் அவரே இயக்கினார்.

திரைக்கதைக்கென்று தனி கிரெடிட் கொடுக்கப் படாவிட்டாலும், வசனகர்த்தா கருணாநிதிதான் அதற்கும் இன்சார்ஜ் என்று நாம் சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம்.

வழக்கமான கதை!

விஜயபுரி என்ற ஊரில் சொக்கேச முதலியார் என்ற பணக்காரர் வசிக்கிறார். அவரது மகள் பூங்கோதையைத் திருமணம் செய்ய வேண்டுமென்று வீரராஜன் விரும்புகிறார்.

உறவினர் என்றாலும், அவரது கெட்ட சகவாசத்தை மனதில் கொண்டு திருமணத்துக்கு மறுக்கிறார் சொக்கேசன். அதே நேரத்தில், மலைக்கள்ளன் மற்றும் காத்தவராயன் குறித்த பயத்தில் திணறுகிறது விஜயபுரி.

இருவரும் வெவ்வேறு நபர்களா அல்லது ஒரே நபரே இரண்டு வேடமிட்டு ஏமாற்றுகிறாரா என்று சந்தேகப்படுகிறார் விஜயபுரி காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு கருப்பையா. ஆனால், பயந்தாங்கொள்ளியான அவர் எந்த சாகசத்திலும் ஈடுபடத் தயாராக இல்லை.

அங்கு பணிமாற்றலாகி வரும் புதிய சப் இன்ஸ்பெக்டர் அனைத்து திருட்டு வழக்குகளையும் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்.

இந்த நிலையில், காத்தவராயன் உதவியுடன் பூங்கோதையைக் கடத்த முயற்சிக்கிறார் வீரராஜன். அந்த நேரத்தில் மலைக்கள்ளன் ஆட்கள் குறுக்கே புகுந்து, அவர்களது திட்டத்தைக் குலைக்கின்றனர்.

இதையடுத்து, பூங்கோதையைத் தனது ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்கிறார் மலைக்கள்ளன்.

குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பூங்கோதை வீடு திரும்ப, விஜயபுரியில் நடந்துவரும் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணி போலீசாருக்கு தெரிய வருகிறது.

அதே நேரத்தில் பூங்கோதைக்கும் மலைக்கள்ளனுக்குமான சம்பந்தம் என்னவென்பதையும் அறிய முடிகிறது.

முன்கதையின் நீளம்!

இனிய பாடல்கள், குதூகலிக்க வைக்கும் சண்டைக்காட்சிகள், மெல்லிய நகைச்சுவை என்று பல அம்சங்கள் மலைக்கள்ளனில் உண்டு. நடுநடுவே சோகம், வன்மம், காதல் என்று பல்வேறு உணர்ச்சிகள் திரைக்கதையில் வெளிப்படும்.

மலைக்கள்ளன், குமார வீரன், அப்துல் ரஹீம் என்று இப்படத்தில் மூன்று பாத்திரங்களில் எம்ஜிஆர் நடித்திருப்பார்.

அவரது அறிமுகமே படம் தொடங்கி கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகுதான் வரும். அதுவும் கூட, ஒட்டுமீசை தாடியுடன் ‘அப்துல் ரஹீம்’ பாத்திரத்தில் தான் தோன்றுவார்.

மலைக்கள்ளனின் ரகசிய இடத்திற்குப் பூங்கோதை சென்ற பின்னரே அவரது தோற்றம் திரையில் காண்பிக்கப்படும். அதுவரை பானுமதி, ஸ்ரீராம், சக்ரபாணி மற்றும் துரைராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளே அதிகமாக வந்து போகும்.

இயக்குநர் ஸ்ரீராமுலு

இயல்பான தோற்றத்தில் எம்ஜிஆர் எவ்வளவு அழகாக இருப்பார் என்று தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இப்படத்தை பார்த்து அறியலாம்.
எம்ஜிஆரின் ‘ஸ்டார்’ அந்தஸ்து!

நாயக அந்தஸ்து கிடைத்தபிறகு, தனக்கான இடம் நோக்கி எம்ஜிஆர் முன்னேறி வந்த நாட்களில் அவருக்குக் கிடைத்த பொக்கிஷம் ‘மலைக்கள்ளன்’ வாய்ப்பு.

எம்.ஜி.ராம்சந்தர் என்று குறிப்பிட்டு வந்த அவரது பெயர், இந்த படத்தில் இருந்துதான் எம்.ஜி.ராமசந்திரன் என்று மாறியது.

பின்னாட்களில் சந்திரனோடு ‘ச்’ சேர்ந்துகொண்டது. அதன்பின்னர், எம்ஜிஆருக்கு அதனைத் திருப்பித் தரத் தொடங்கினர் அவரது ரசிகக் கண்மணிகள்.

பானுமதி எனும் பேரழகி!

பானுமதி என்றவுடன் அவரது கணீரென்ற குரலும் கொஞ்சம் முரட்டுத்தனம் கலந்த அழகும்தான் நினைவுக்கு வரும். அந்த எண்ணத்தைத் தவிடுபொடியாக்கும் வகையில் இதில் பானுமதியின் அழகும் நடிப்பும் வெளிப்பட்டிருக்கும்.

எம்ஜிஆரும் பானுமதியும் ஜோடி சேர்ந்த முதல் படம் இதுவே. இதன்பின் அலிபாபாவும் 40 திருடர்களும், நாடோடி மன்னன், கலையரசி, தாய்க்குப் பின் தாரம் போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.

பானுமதியின் அறிமுகக் காட்சியே, பூங்கோதை எனும் பாத்திரத்தில் குதிரையில் வருவதாகத் தொடங்கும். அந்த காலத்தில் நாயகிகளில் சிலர் உச்சம் பெற்று விளங்கியதற்கான சான்று இது.

சக்கரபாணியும், துரைராஜூம்

எம்ஜிஆரின் சகோதரர் சக்ரபாணி இப்படத்தில் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருப்பார்.

இந்த வேடத்தில் முதலில் நடித்தவர் இயக்குனர் ஏ.பி.நாகராஜன். பின்னர், என்ன காரணத்தாலோ அவருக்குப் பதிலாக சக்ரபாணி நடித்து முடித்தார்.
ஏட் கருப்பையாவாக வரும் டி.எஸ்.துரைராஜுக்கும் சக்ரபாணிக்குமான உரையாடல்களில் இயல்பான நகைச்சுவை ததும்பும்.

திரைக்கதையில் தொய்வு ஏற்படும்போதெல்லாம் அந்த அயர்வைச் சரி செய்வது ‘அதுதான் சார் நம்ம ஐடியா’ எனும் துரைராஜின் ஒன்லைனர்கள் தான்.

கால ஓட்டத்தை மீறி இப்போதும் சிரிக்கத்தக்க வகையில் அவை இருப்பது வசனங்களில் கைவண்ணம் காட்டிய கருணாநிதியின் திறமைக்குச் சான்று.

பானுமதியின் அத்தையாக பி.எஸ்.ஞானமும் அவரது சகோதரியாக சந்தியாவும் நடித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாயாரான சந்தியா ‘பலே பாண்டியா’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக பின்னாட்களில் நடித்தார்.

இப்படத்தில் வீரராஜன் எனும் வில்லன் பாத்திரத்தில் நடித்தவர் ஸ்ரீராம். மதனமாலா, நவஜீவனம், சம்சாரம், பழனி, மர்மவீரன் போன்றவை இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கவை.

டாக்டர் வேடத்தில் ஒரு காட்சியில் தலைகாட்டியிருப்பார் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு. நடிகராக நாடக கம்பெனிகளில் வாழ்வைத் தொடங்கி இசையமைப்பாளராக தடம் மாறியவர் இதில் நடித்திருப்பது இன்னொரு ஆச்சர்யம்.

மயக்கும் இசை!

ஸ்ரீவள்ளி, ராஜகுமாரி என்று எம்ஜிஆர் நடித்த படங்களில்தான், எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு இசையமைப்பாளர் அந்தஸ்தை அடைந்தார். எம்ஜிஆருக்கு நாயக அந்தஸ்து கிடைக்க சிபாரிசு செய்தவர்களில் இவரும் ஒருவர்.

இசையமைப்பாளர் சுப்பையா

இதுவே, பின்னாட்களில் எம்ஜிஆருடன் இவரது நட்புறவு தொடரக் காரணமானது.
எம்ஜிஆரின் வாழ்வையே மாற்றியமைத்த ‘நாடோடி மன்னன்’ படத்துக்கும் இவர்தான் இசையமைத்தார்.

அரசியலில் எம்ஜிஆர் இறங்கியபோது, அவரது பாதுகாப்பு அரணாக விளங்கியவர் இவர்.

தான் எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்’ புத்தகத்தில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார் எம்ஜிஆர்.

மலைக்கள்ளன் திரைப்படம் ஆறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டபோது, இந்தி தவிர்த்து மற்றனைத்துப் படங்களுக்கும் இவரே இசையமைத்தார்.

பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இவரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த நன்றிக்கடனுக்காக, குழந்தைப்பேறு இல்லாத குருவையும் துணைவியாரையும் கடைசிக்காலம் வரை தனது வீட்டில் வைத்துப் பராமரித்தார்.

எம்ஜிஆருக்கு பொருந்திய டிஎம்எஸ் குரல்!

டைட்டிலில் பின்னணி இசையின் கீழ் பெரியநாயகி, சௌந்திரராஜன் ஆகிய பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.

அதாகப்பட்டது, டி.எம்.எஸ். என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட டி.எம்.சௌந்தரராஜன் இந்த படத்தில் இருந்துதான் எம்ஜிஆருக்கு பின்னணி பாடத் தொடங்கினார்.

‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ பாடல் இன்றும் தெவிட்டாத தேனமுதாக ஒலிக்கும். இந்த படத்திற்குப் பின், எம்ஜிஆரின் குரலாகவே மாறிப்போனார்.

1954ஆம் ஆண்டில் வெளியான ‘தூக்குதூக்கி’ படத்தில்தான் முதன்முதலாக சிவாஜிக்கு வாயசைத்திருந்தார் டி.எம்.எஸ். பின்னர், அவரது படங்களிலும் தொடர்ச்சியாகப் பாடத் தொடங்கினார்.

‘தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்ற நாமக்கல் கவிஞரின் பாடல் டைட்டில் காட்சியில் ஒலிக்கும். ரா.பாலசுப்பிரமணியன், ராமய்யா தாஸ், மக்களன்பன் ஆகியோரும் இதில் பாடல்கள் எழுதியுள்ளனர்.

கதாபாத்திரமான ‘விஞ்ச்’

மலைக்கள்ளன் படத்தில் வரும் ‘விஞ்ச்’ எம்ஜிஆர் மறைந்திருக்கும் ரகசிய இடத்துக்குச் செல்லப் பயன்படுத்தப்படும். பழனி மலையில் அதனைப் பார்த்த மக்களுக்கு, அந்த காட்சி அதிசயமாகத்தான் இருக்க வேண்டும்.

நாமக்கல் கவிஞர்

அளவுக்கு மீறி அதனைக் காட்டாமல், ஒரு சண்டைக்காட்சியில் மட்டும் விஞ்ச்சை நிறுத்தி அதில் கட்டப்பட்டிருக்கும் கயிறை அறுப்பதாகக் காட்டப்படும்.

டைட்டிலில் தயாரிப்பு இயக்கம் ஸ்ரீராமுலு நாயுடு என்று வரும்போது, எழுத்தின் பின்னணியில் ‘விஞ்ச்’ காட்டப்படும். இதுவே அப்படத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக அதனைப் படக்குழுவினர் கருதினர் என்று எடுத்துக்கொள்ள முடிகிறது.

பாதுகாப்பாக இருக்கும் ‘மலைக்கள்ளன்’

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சைலன் போஸ். ஸ்ரீராமுலு இப்படத்தை வேறு மொழிகளில் இயக்கியபோது, அனைத்திலும் அவர் பணிபுரிந்தார். 1932இல் சினிமா பேசத் தொடங்கிய காலம் முதல் 1963 வரை இவர் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார்.

சில இந்திப் படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். அந்த வகையில் இளவரசு, நட்ராஜ் சுப்பிரமணியம், அருள்தாஸ் போன்றோர்களுக்கு இவர் ஒரு முன்னோடி.

தேசியவிருதை முதன்முதலாக மத்திய அரசு அறிவித்தபோது, அதனை வென்ற முதல் தமிழ் திரைப்படம் ‘மலைக்கள்ளன்’. இத்திரைப்படத்தின் நெகட்டிவ் தற்போது மும்பை தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வில்லனுடன் மோதும் சண்டைக்காட்சி முடிந்தபின்னும், நாயகன் தனது குடும்பத்தினருக்குத் தான் யார் என்று தெரிவிக்கும் வகையில் சுமார் அரை மணி நேரக் காட்சிகள் நீளும்.

அதேபோல, வெளிப்புறக் காட்சிகளும் இந்த படத்தில் மிகக் குறைவு.

ஆனாலும், இந்த படத்தை மக்கள் ரசித்தனர், கொண்டாடினர். அதன் பலனாக, 1954இல் வெளியான படங்களில் அதிக வசூலை இத்திரைப்படம் ஈட்டியது.

குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், சக்கரவர்த்தி திருமகள், மகாதேவி என்று பல்வேறு ஹிட்களை தந்தபோதும், மலைக்கள்ளன் போன்ற மெகாஹிட் கொடுக்க முடியாத வருத்தமே அவரை ‘நாடோடி மன்னன்’ படத்தை உருவாக்கச் செய்தது.

இதுவே, ‘மலைக்கள்ளன்’ எப்படிப்பட்ட மாற்றத்தை எம்ஜிஆரின் திரையுலகில் உருவாக்கியது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இப்படத்தின் வழியே மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தது வரலாறு!

படத்தின் பெயர்: மலைக்கள்ளன்

மூலக்கதை: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை,

வசனம்: கருணாநிதி,

தயாரிப்பு, இயக்கம்: ஸ்ரீராமுலு நாயுடு,

இசை: சுப்பய்யா நாயுடு,

கலை இயக்கம்: செல்லையா, ஒளிப்பதிவு: சைலன் போஸ், ஒலிப்பதிவு: துரை,

புராசசிங்: நாதன், மோஹன், படத்தொகுப்பு: வேலுசாமி, ஸ்டூடியோ: பக்‌ஷிராஜா ஸ்டூடியோஸ்

நடிப்பு: எம்.ஜி.ராமசந்திரன், பி.பானுமதி, ஸ்ரீராம், டி.எஸ்.துரைராஜ், எம்.ஜி.சக்ரபாணி, டி.பாலசுப்பிரமணியம், பி.எஸ்.ஞானம், சந்தியா மற்றும் பலர்.

*****

– எம்.ஜி.ஆரின் உறவினரும், வழக்கறிஞருமான முனைவர் குமார் ராஜேந்திரன் தொகுத்து, @மெரினாபுக்ஸ் (www.marinabooks.com) நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் இருந்து ஒரு பகுதி…

800 பக்கங்களும் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்ட அழகான இந்த நூலின் விலை ரூ.1800.

சென்னை புத்தகக் கண்காட்சியில் அறிமுகச் சலுகையாக 30 சதவிகித தள்ளுபடியுடன் ரூ.1250-க்கு கிடைக்கிறது.

அத்துடன் எம்.ஜி.ஆரைப் பற்றி அவரது மனைவி திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் எழுதிய ‘எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்’ என்ற 150 ரூபாய் மதிப்புள்ள நூல் இலவசமாகக் கிடைக்கிறது.

இந்த நூலிலும் எம்.ஜி.ஆரைப் பற்றிய இதுவரை வெளிவராத பல அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நூல் பற்றிய மேலும் தகவல்களுக்கு…

மெரினா புக்ஸ்
ஸ்டால் எண் – 261 & 262
அலைபேசி: 88834 88866 / 75400 09515

26.02.2022 10 : 50 A.M

Comments (0)
Add Comment