வேலு நாச்சியாரைக் காப்பாற்றிய வெட்டுடையார் காளி!

‘வெட்டுடையார் அம்மன்’ என்றே சொல்கிறார்கள் சிவகங்கையில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் கொல்லங்குடி அருகில் உள்ள காளி கோவிலில் இருக்கிற அம்மனை.

கையில் திரிசூலம் – ஒரு காலை உயர்த்தி, ஒரு காலை இறக்கி அமர்ந்த நிலையில் வேகம். கண்களில் உக்கிரத்துடன் காட்சி அளிக்கிற அம்மனுக்குப் பின்னால், ஜீவனுள்ள ஒரு கதை.

முன்னூறு வருஷங்களுக்கு முன்பு.

சிவகங்கைச் சீமையை அப்போது ஆண்ட மன்னர், முத்துவடுகநாத பெரிய உடையத் தேவர். அவரைக் கொலை செய்ய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.

ஒரு சமயம் காளேசன் சன்னதியில் ஒளிந்திருந்து சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தார் ஆங்கிலேயப் படைத் தளபதி கா்னல் ஜோசப் ஸ்மித்.

மதில் சுவரின் மேல் பகுதியில் அவர் ஒளிந்திருந்த சமயம், உள்ளே நுழைகிறார் உடையத்தேவர்.

துப்பாக்கியால் குறி வைத்துச் சுடுகிறார் ஸ்மித். கீழே விழுந்து உயிர் துறக்கிறார் அந்த மன்னர்.

இது நடந்தது 1772 ஜூன் மாதம் 25-ம் தேதியில். உடையத்தேவரின் மனைவியான வேலுநாச்சியார், மருதுபாண்டியரையும் அழைத்துக்கொண்டு காளையார் கோவிலுக்கு வந்து கணவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

பிறகு அங்கிருந்து நாட்டரசன்கோட்டைக்குக் கிளம்புகிறார். அரியாக்குறிச்சி காடு இடையில் எதிர்படுகிறது. இந்த வழியில், ஆங்கிலேயப் படையும் வேலு நாச்சியாரைப் பிடிக்கத் துரத்தி வருகிறது.

அதற்குள் விரைந்து கீரனூா் கண்மாய் கரையைப் பரிவாரங்களுடன் தாண்டி விடுகிறார் நாச்சியார்.

ஆங்கிலேயப்படை புழுதிப் பறக்க வருகிறது.

காட்டிற்குள் அப்போது அய்யனார் கோவில் முன்பாக மாடு மேய்த்துக் கொண்டு இருக்கிறார் ஒரு பெண், வந்த படை அந்த இளம் பெண்ணைப் பார்த்ததும் நின்றது.

“இந்தப்பக்கம் வேலுநாச்சியார் பரிவாரங்களுடன் போனதைப் பார்த்தியா? எந்தப் பக்கம் போனாங்க?” அந்தப் பெண்ணின் பார்வையில் மிரட்சி இல்லை.

“அவுங்கப் போன திசை தெரியும். ஆனா சொல்ல மாட்டேன்”

வந்த படைக்குக் கோபத்தை கிளறி விட்டுவிட்டது அந்த பதில். கையில் இருந்த வாள்தான் பதிலுக்குப் பேசியது.

ஒரே வீச்சு தலை தனியாக

போய் விழுந்தது. உடையாள் என்கிற அந்தப் பெண் வெட்டுபட்டதும் ‘வெட்டுடையாள்’ ஆகி, ‘அம்மன்’ ஆனாள்.

பிறகு வெட்டுடையார் காளியம்மன்.

எட்டு வருடங்கள் கழித்து ஹைதர் அலி, திப்பு சுல்தான் உதவியுடன் சிவகங்கைச் சீமையை மீட்டாா் வேலுநாச்சியார். அரசியான பின் தனக்காக வெட்டுடையாள் வெட்டுப்பட்ட இடத்திற்குச் சென்றார்.

தெய்வாம்சத்துடன் நீதி தேவதையாக வெட்டுடையாள் விளங்குவதை நாச்சியாரிடம் சொல்கிறார்கள் மருதுபாண்டியர்.

கேட்டதும் நாச்சியாருக்கு மகிழ்ச்சி. உடனே அந்தக் கோவிலுக்குப் பூசாரிகளாக கருப்பு வேளார், காாி வேளார் என்று இருவரை நியமிக்கிறார். தன்னுடைய காணிக்கையாக தனது வைரத் தாலியையே செலுத்துகிறார்.

அதர்மத்தை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கான தெய்வீகமான அடையாளமாக நிற்கிறாள் வெட்டுடையாள்.

மனதில் இருக்கும் கஷ்டத்தோடு நேரில் இங்குவந்து, மனபாரத்தை இறக்குகிறார்கள். தீராத நோய்களுக்கு வேண்டிக்கொள்கிறார்கள் வியாபார கஷ்டமா? குழந்தைப்பேறு இல்லாமல் இருக்கிறதா?

எல்லாவற்றிற்கும் இங்கே வந்து வேண்டிக்கொண்டு நிறைவேறியதும் நேர்த்திக் கடனைக் கழிக்கிறார்கள்.

“எப்படியாவது நீதி வழங்குவாள் வெட்டுடையாள்” என்ற நம்பிக்கை இருப்பதால், காசு வெட்டிப் போடும் பழக்கம் இங்கிருக்கிறது.

10 பைசாவிலிருந்து இருபது, ஐம்பது பைசா வரை, வெட்டுடையாளுக்கு நேர்ந்து கொண்டு வெட்டினால் சம்பந்தப்பட்ட எதிரியை பழி வாங்குகிறாள் என்று ஒரு நம்பிக்கை.

அநீதி கிடைத்து விட்டதாகவோ, மோசடி செய்து விட்டதாகவோ கருதினால், நீதிமன்றம் மாதிரி நேரே இங்கு வந்து காசு வெட்டுகிறார்கள்.

வெட்டுடையாள் முன்பு சில வழக்குகளும் நடப்பதுண்டு. வழக்கு சம்பந்தப்பட்ட இரு கோஷ்டியினரும் சூடத்துடன் வந்து அம்மன் முன் சூடத்தைக் கொளுத்திக் கையால் அணைக்கச் சொல்கிறார்கள்.

“அம்மன் முன் பொய் சொன்னாள் அவனை அம்மன் பழிவாங்கிவிடுவாள்” என்ற நம்பிக்கை இருப்பதால், சூடத்தை அணைக்கிறவன் சொல்வதை நம்புகிறார்கள்.

அங்கேயே சமாதானம் ஆகிப்போகிறார்கள்.

நேரடியாக வர முடியாதவர்கள் தங்களுடைய வேண்டுதலைக் குறிப்பாக எழுதி அனுப்பி, கூடவே அர்ச்சனைக்கான பணத்தையும், மணியாா்டராக கோவிலுக்கு அனுப்பி விடுகிறார்கள்.

ஒரு மாதத்திற்கு இப்படிப்பட்ட மணியார்டராக ஒண்ணேகால் லட்சம் ரூபாய் வரை வருகிறது.

எளிமையாகத் தெரிந்தாலும் இங்கு வந்து போகிற மக்கள் கூட்டத்தினால், 1940-லிருந்தே அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் போய்விட்டது இந்தக் கோவில்.

நுழைந்ததும் ஆங்காரத்துடன் வெட்டுடையாள் காளியம்மன். காலடியில் பழிவாங்கப்படும் ஒருவன். திரிசூலம், கழுத்தைச் சுற்றி நிறைந்திருக்கும் எலுமிச்சம்பழ மாலைகள்.

காசு வெட்டிப் போட்டு, வேண்டியது நிறைவேறிவிட்டால் தங்கம், வெள்ளியிலான சிறு பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

தினமும் நான்குகால பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு திறக்கும் கோவிலை, மாலை 6 மணிக்குச் சாத்துகிறார்கள்.

கோவிலுக்குள்ளேயே வெட்டுடைய அய்யனார், சோனைக் கருப்பசாமி என்று பரிகார தேவதைகள் உட்பட நவசாமிகள்.

கிழக்கு நோக்கியிருக்கிற அய்யனார் முகத்தில் சூரியோதயத்தின் போது வெயில் சிறு சதுரமாக வந்துவிழுகிறது. மாலை மறையும்போது மேற்கு நோக்கி இருக்கிற வெட்டுடையாள் முகத்தில் வந்து விழுகிறது வெயில் கீற்று.

நீதிபதிகள் உட்படப் பலர் வந்து வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தின்போது கொடியேற்றுகிறார்கள்.

அன்று துவங்கி 10 நாட்கள் ஊரே களைகட்ட நடக்கிறது திருவிழா. எல்லா சாதி சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ‘மண்டகப்படி’ அமைக்கிறார்கள்.

இது தவிர ஆடி மாதம் 19 ஆம் தேதி பூச்சொரிதல் விழா பிரமாண்டமாக நடக்கிறது. நவராத்திரி விஜயதசமி அன்று குதிரை வாகனத்தில் சுற்றி வருகிறாள் வெட்டுடையார் அம்மன்.

வருகிற பக்தர்களுக்கு பிரசாதத்தை இலவசமாக வழங்குகிறார்கள். செவ்வாய், வெள்ளியன்று மட்டும் ஆயிரக்கணக்கில் கூட்டம் வருகிறது.

கோயிலை விட்டு வெளியே வந்தால் வெப்பம் கதைக்கிற மண். சுற்றிலும் கருவேல மரக்காடு.

கோவிலுக்குப் பக்கவாட்டில், நீண்ட அரிவாளுடன் கற்சிலைகளாக அமர்ந்திருக்கிறார்கள் வெட்டுடையாளுக்குப் பூசாரிகளாக நியமிக்கப்பட்ட இரு வேளார்கள்.

கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என்று பாகுபாடில்லாமல் பலரும் வருகிறார்கள். காரணம் தனக்கு எப்படியும் நீதி கிடைக்கும் என்று கிராமப்புற, நகர்ப்புறமக்கள் மனதில் பதிந்து கிடக்கும் நம்பிக்கைதான்.

-மணா 

24.02.2022 12 : 30 P.M

Comments (0)
Add Comment