திரைக்கதை எழுதுவது எப்படி?

நூல் வாசிப்பு:

திரைக்கதையாசிரியர் சங்கர்தாஸ் எழுதிய நூல். ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பிளட் மணி ஆகிய திரைக்கதை, வசனம் எழுதிய நூலாசிரியர் திரைக்கதைக் கலையின் நுட்பங்களை விரிவாக எழுதியிருக்கிறார்.

எழுத்தாளர் சுஜாதா எழுதிய நூலுக்கு அடுத்து வந்திருக்கும் திரைக்கதை எழுதும் கலையை பயிற்றுவிக்கும் புதுமையான நூலாக வெளிவந்திருக்கிறது.

‘தாய்’ இணையதள வாசகர்களுக்காக நூலாசிரியரின் முன்னுரையில் இருந்து சில வார்த்தைகள்…

தமிழ்நாட்டில் தமிழ் இலக்கியம் படித்த இளைஞர்கள், திரைக்கதை எழுதுவது தங்களுக்கு உரிய பணி என்ற நினைவில்லாமல் இருக்கிறார்கள்.

சினிமாவைப் பற்றிப் படித்தவர்கள் மட்டும்தான் திரைக்கதை எழுத வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை.

திரைக்கதை எழுதுவதற்குக் குறைந்த பட்ச சினிமா அறிவு இருந்தால் போதும்.
எல்லா சினிமாவையும் பார்க்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை, சில முக்கியமான படங்களைப் பார்த்திருந்தால் போதும்.

அடிப்படையில் திரைக்கதை என்பது ஒரு Technical Document. பத்திர அலுவலகத்தில் இருப்பவர் பத்திரம் எழுதுவதுபோல தமிழ் இலக்கியம் படித்த அனைவரும் (ஆங்கில இலக்கியமும்தான்) திரைக்கதை எழுதலாம். தேவை இலக்கியத்தின்மீது ரசனையும் கொஞ்சம் கற்பனையும் அவ்வளவுதான்.

எனக்கும்கூட முதலில் இந்தத் துறையில் வந்தபோது ஒரு சினிமா துறைக்குள்
இலக்கியம் படித்த நாம் வந்திருக்கிறோம் என்ற உணர்வு இருந்தது. பிறகு நாம் இலக்கியத் துறையிலும் சினிமா துறையிலும் இணைந்து பயணிக்கிறோம் என்று நினைக்கத் தோன்றியது.

பத்தாண்டுகள் திரைக்கதை எழுதிய அனுபவம் வந்தபோது, திரைக்கதை என்பது தமிழ்
இலக்கியம் படித்தவர்கள் செய்ய வேண்டிய வேலை. அவர்களைத் தள்ளிவிட்டு மற்றவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்ற உண்மை புரிந்தது.

சினிமா என்பது முடிந்தவரை நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய துறை.
திறமை கொஞ்சமே கொஞ்சம் இருந்தாலும் வாய் ஜாலம் அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

நகரம் சார்ந்த நடுத்தர மாணவர்களுக்கும், வசதியானவர்களுக்கும் தங்களை வெளிப்படுத்திப் பேசும் கலை இயல்பாகவே இருக்கும். ஆனால், தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்கள் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள்.

தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள். தகுதி இருந்தாலும் வெளியில் சொல்வதற்குத் தயங்குவார்கள். அப்படித் தயக்கம் காட்டுபவர்களின் பணிவாய்ப்பை வசதியான பின்புலம் உள்ளவர்கள் எடுத்துக்கொள்வது இயல்பாகிவிடுகிறது.

தமிழ் இலக்கியம் படித்த மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும். நம்மால் எழுத
முடியும் என்ற தன்னம்பிக்கை. இந்த நூல் அதற்காகத் துணை செய்யும் கருவியாக இருக்க வேண்டும். இது குறித்து இந்த நூலில் மேலும் விரிவாக எழுதியிருக்கிறேன். தமிழ் இலக்கியம் படித்தவர்கள் பலர் திரைக்கதை எழுத வரும்போது நல்ல மாற்றங்கள்
பல நிகழும்.

தனித்துவம் நிறைந்த திரைக்கதையாசிரியர்கள் பலர் வரும்போது தொலைக்காட்சிப் படங்கள், ஆவணப்படங்கள், வணிகக் மேலாண்மை மேம்பாடு, வீடியோ கேம் உருவாக்கம் என எல்லாவற்றிலும் தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். சினிமாவில் திரைக்கதைத் துறை என்ற ஓர் இடம் இல்லாமலே இருக்கிறது. அது உருவாகும்.

மான்ஸ்டர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டின்போது அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான S.R. பிரபு பின்வருமாறு பேசினார்:

கதாசிரியர் என்கிற ஒரு டெக்னீசியன், மிகப் பெரிய உருவமாகவும்; அடிப்படையாகவும் தமிழ் சினிமாவில் இருக்கும் பட்சத்தில், தமிழ் சினிமாவின் நிலை இன்னும் அதிகமான உயரத்தை எட்டும். அப்படியான விஷயம் குறைவாக இருக்கிறது.

மான்ஸ்டர் படத் திரைக்கதை உருவான நேரத்தில், கதாசிரியர் சங்கர்தாஸோடு சேர்ந்து நெல்சன் வெங்கடேசன் பணியாற்றுவது பார்ப்பதற்கே சந்தோசமாக இருந்தது.

இதுபோன்ற கதாசிரியர்கள் நிறைய – (அதாவது,) கதை எழுதுவதை மட்டும் முக்கிய வேலையாக; தனியாக வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை என்றார்.

திரைக்கதையாசிரியரின் தேவையைத் தயாரிப்பாளர்கள் உணர்ந்த அளவிற்குக்கூட இயக்குநர்கள் உணரவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. சமீப காலங்களில் சிறு மாற்றம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலை வளர்ச்சி அடைந்தால், இன்று இயக்குநர்கள் எதிர்பார்ப்பதைத் திரைக்கதை ஆசிரியர்கள் எழுதிக் கொடுக்கவேண்டும் என்ற நிலை மாற்றம் பெற்று, திரைக்கதை ஆசிரியர்கள் எழுதியதை உள்வாங்கி இயக்குநர்கள் திரைப்படம் எடுக்கும் காலம் விரைவில் வந்துவிடும்.

தன்னம்பிக்கையோடு ஒரு துறையில் மனப்பூர்வமாக உள்ளிறங்குவது மட்டுமே நம்முடைய வேலை. பிறகு நம்மைச் செதுக்குவதைப் பற்றி மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

***

திரைக்கதை எழுதும் கலை: சங்கர்தாஸ்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்,
எண் 5 பரமேஸ்வரி நகர் முதல் தெரு,
அடையாறு, சென்னை – 20.

விலை: ரூ. 320

– பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment