அனைவருக்கும் கேர் – ஆஃப் எம்.ஜி.ஆர் தான்!

– ஜெயலலிதாவுடனான பிரச்சாரப் பயண அனுபவம்

எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் மருத்துவச் சிகிச்சையில் இருந்த நேரம். அங்கிருந்தபடியே 1984-ம் ஆண்டு நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டார்.

ஜெயலலிதா அப்போது தான் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இருந்தும் அ.தி.மு.க.வுக்கான பிரச்சாரத்தைத் துவக்கியிருந்தார் ஜெயலலிதா.

மதுரையில் மாலை வேளையில் துவங்கியது அவருடைய பிரச்சாரம். பெரிய பிரச்சார வேன், பின்னால் பத்திரிகையாளர்களுக்காகத் தனி வேன். அதில் பதினைந்து பத்திரிகையாளர்கள்.

அதில் ஜூனியர் விகடன் இதழ் சார்பில் நானும்.

டி.என்.சேஷனைப் போன்ற தேர்தல் ஆணையர்கள் இல்லாததால் பிரச்சாரம் நீடித்தது
நள்ளிரவு வரை.

ஜெயலலிதாவின் பிரச்சாரத்தைப் பற்றிக் கூடவே சென்று நான் எழுதிய கட்டுரை 19.02.1984 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ வார இதழில் வெளி வந்தது.

ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும்போது, வேனிலிருந்து கீழிறங்கிச் சென்று, நான் எனது காமிராவில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

வெள்ளைச் சேலையில் அ.தி.மு.க கலர் பார்டர் போட்ட சேலையுடன் திறந்த வேனில் ஏறி ஜெயலலிதா சிரித்தபடி இரட்டை விரலைப் பிரித்துக் காட்டியபோது, அந்தக் காட்சியை எடுத்தபோது ஏதோ ஒரு சத்தம்.

சிறிது நேரத்தில் ஒருவர் ஜெ.பிரச்சார வேனிலிருந்து கீழிறங்கி என்னிடம் விசாரித்தார். பதில் சொல்வதற்குள் என் கையிலிருந்த காமிராவைப் பிடுங்கினார்.

அதிலிருந்து ஃபிலிம் ரோலைச் சட்டென்று உருவினார். கையில் எடுத்துக் கொண்டு போய்விட்டார்.

பிரச்சார வேன் கிளம்பிவிட்டது.

அப்போது நான் எழுதிய கட்டுரை இது தான்.
*
தொடர்ந்து இருபது நாட்கள் நீடிக்கின்றன ஜெயலலிதாவின் சூறாவளிப் பிரச்சாரம் ஆரம்பித்திருப்பது தென் பகுதிகளிலிருந்து.

தினமும் மாலை 6 மணியளவில் ஆரம்பிக்கிற பிரச்சாரம் காலை 5 மணி வரை கூட நீடிக்கிறது.

தொகுதிகளில் பயணிக்கிறபோது, எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியான வரவேற்பு ஜனங்களிடம்.

முன்பு கூட்டங்களில் பேசும்போது சின்னக் கதைகள் சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது பேச்சை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

மக்களைப் பார்த்து அடிக்கடி கேள்விகள் கேட்கிறார்.

“புரட்சிச் செல்வி வருகிறார்’’ என்ற அறிவிப்போடு ஜீப் ஒன்று முன்னால் போக, பின்னால் ஜெயலலிதாவின் பிரச்சார வேன். அதிலேயே மூன்று ‘பாடிகாட்’கள் கூடவே நின்று கூட்டத்தைக் கவனிக்கிறார்கள்.

அடுத்தடுத்து செக்யூரிட்டிக் காரர்களின் கார்கள். அதோடு போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் தனி. வேனில் இருந்தபடியே பல இடங்களில் கொடியேற்றினார்.

சுருக்கமான பேச்சிற்கிடையிலும், சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டு நாலாபுறமும் திரும்பியபடியே பேசுகிறார்.

“இப்போது அமெரிக்காவில் இருக்கும் எம்.ஜி.ஆர். ஜனவரி மாதம் தமிழகம் திரும்பி வரப் போகிறார். முதலமைச்சராகச் சென்றவர் திரும்பவும் முதலமைச்சராக இங்கு வரும்போது என்றவர் குரலை உயர்த்தி, “நானும் கூட வரட்டுமா, வேண்டாமா?’’ என்று கேட்டதும், “வாங்க.. வாங்க’’ என்று கோரஸாகக் கத்தின கழக ரத்தங்கள்.

ஒவ்வொரு தடவையும் ஒரு ஊரின் முன் பிரச்சார வேன் நிற்குமுன்பு காவலர்கள் திமுதிமுவென்று ஓடி, ‘மீட்டிங்’ முடிந்ததும், அவசரத்துடன் வந்து காரைத் தொற்றி ஏறிக் கொண்டார்கள்.

நாகமலைப் புதுக்கோட்டை வந்ததும் “அக்கா வாழ்க’’ என்கிற கோஷங்கள் போடப்பட்டன.

உசிலம்பட்டியில் எம்.ஜி.ஆரிடம் “நான் தான் தேவர் மாவட்டப் பெயர் வைக்கச் சொன்னேன்’’ என்று ஜெயலலிதா பேசியதுமே, தி.மு.க. காரர்கள் “தேவரைப் பற்றி யார் பேசுறதுன்னே கிடையாதா?’’ என்று தேர்தல் அலுவலகத்திற்குள்ளேயே ஆக்ரோஷப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஜெயலலிதாவின் பேச்சில் சில விசேஷங்கள்.

அடுத்தடுத்த ஊர்களில் இருக்கிற குலசாமிகளின் பெயர்களை எல்லாம் வரிசையாக “காளியாத்தா.. ராக்காயி… இவங்களைக் கும்பிடுகிறவர்களைக் கேட்டுக்கிறேன்’’ என்று வரிசையாக மனப்பாடமாக குறிப்பிட்டார். (கிராமத்து உளவியல்!)

உடனே ஒரே கரகோஷம்.

செல்லம்பட்டி ஊரில் பிரச்சார வேன் நுழைந்ததுமே எம்.ஜி.ஆரின் பழைய பாடலான “என்னம்மா ராணி’’ என்கிற பாட்டு போடப்பட்டது. அப்போது அங்கிருந்த தி.மு.க.வினர் முகங்களில் அலாதியான திருப்தி!

ஏழுமலை ஊரில் கசகசவென்று கூட்டம். ஜெயலலிதா வேனில் நின்று பேசியபோதும், இரைச்சல் குறையவில்லை.

அதனால் வேனிலிருந்து இறங்கி ஊரில் போடப்பட்டிருந்த மேடைக்கு வந்தார் ஜெயலலிதா. வந்தால் மைக் வேலை செய்யவில்லை. மைக்செட் காரருக்குத் திட்டு விழுந்தது.

அதற்குள் கூட்டத்திற்குள் முண்டியடித்துக் கொண்டு வந்த ஒரு கோஷ்டி “அம்மா, எங்க மேலே கல்லெறியுறாங்க’’ என்று அலற, கூட்டம் சிதற ஆரம்பித்தது. கற்கள் பின்னால் வீசப்பட்டன.

காவல்துறை எஸ்.பி.யின் ஆர்டரின் பேரில் உடனே அந்தப் பகுதியை அமைதிப்படுத்தக் கிளம்பியது ஒரு போலீஸ் கோஷ்டி.

ஜெயலலிதா திரும்பவும் வேனுக்கு வந்தார். கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டதால், கூட்டம் அங்குமிங்கும் ஓடியது. வண்டிகள் கிளம்பும்போது, அந்தப் பகுதி எம்.எல்.ஏ.வான சேடபட்டி முத்தையாவின் கார்க்கண்ணாடியைக் குறி பார்த்து ஒரு கல் வந்து விழுந்தது. கார்கள் வரிசையாகக் கிளம்பிவிட்டன.

கிளம்புகிற போது, ஒரு பத்து வயதுப் பையனைத் தலையில் காயத்துடன் அழைத்து வந்தார்கள். அதோடு கார் மதுரை திரும்பியது. மதுரையில் பெரிய அளவில் திரண்டிருந்தது கூட்டம்.

“மீனாட்சிப்பட்டிணம் எனது தாய்வீடு’’ என்று ஆரம்பித்தவர்,

“நான் இப்போது கொள்கை பரப்புச் செயலாளர் இல்லை. நான் வெறும் ஜெயலலிதா தான். இதைச் சொல்வதற்காக நான் வெட்கப்படவில்லை. அ.தி.மு.க.வில் உள்ள அனைவருக்கும் கேர் ஆஃப் எம்.ஜி.ஆர் தான்.

“காலா அருகில் வாடா. உன்னைக் காலால் உதைக்கிறேன்’’ என்று பதினாறு வயது இளைஞராக ஜனவரி மாதம் மூன்றாவது பிறவி எடுத்துத் திரும்பி வரப் போகிறார் எம்.ஜி.ஆர்’’ என்றார்.

வேட்பாளர்கள் பலர் மேடையிலிருந்தும் மதுரை அ.தி.மு.க வேட்பாளரான காளிமுத்துவும், மதுரை எஸ்.பாண்டியனும் கூட்டத்திற்கு வரவில்லை.

ஜெயலலிதாவைத் தங்கள் தொகுதிகளுக்கு அழைக்கப் போவதில்லை என்று இருவருமே முடிவு செய்திருந்தாலும், ஜெயலலிதா மேடையில் காளிமுத்துவை மிகவும் பாராட்டிப் பேசியது நிறையப் பேருக்கு ஆச்சர்யம்.

“சங்கம் வளர்த்த ஊர் இந்த மதுரை. இங்கு தமிழை வளர்க்கும் பணியைச் செய்திருக்கிறார் காளிமுத்து. அவர் மாற்றாரும் பாராட்டும் முத்தமிழ் வித்தகர். தமிழ்க்கடல். எம்.ஜி.ஆரின் அன்புத்தம்பி’’ என்று வரிசையாக ஜெயலலிதா அடுக்கிக் கொண்டே போக, கூட்டத்தில் கைதட்டல் ‘செமை’ !

கொஞ்சம் சூடு; கொஞ்சம் கனிவு: 5 – மணா

நன்றி: ஜூனியர் விகடன் 19.12.1984 இதழ்.

Comments (0)
Add Comment