எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தம்பி!

– தொகுப்பாளர் பி.ஹெச். அப்துல்ஹமீது

இலங்கை கொழும்பு நகரின் பசுமையைப் பற்றி வானொலி மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் பேசி தன் வசீகரக் குரலால் பிரபலமடைந்த தொகுப்பாளர் பி.ஹெச். அப்துல்ஹமீதின் அருமையான பதிவு கீழே.

“என்னைப் பொறுத்த வரையில் – வானொலி அறிவிப்பாளன் என்கிற முறையில் மக்களுக்குப் பரிச்சயமானவன். ஆனால் நான் எந்த ஊரில் பிறந்தவன் என்பது பல பேருக்குத் தெரியாது.

இலங்கையிலுள்ள பலரே அவரவர் பகுதியைச் சேர்ந்தவன் என்று என்னை நினைப்பதுண்டு. அதற்குக் காரணம் என்னுடன் யார் பேசுகிறார்களோ அவர்களுடைய வட்டார மொழிக்கு நான் மாறிவிடுவதுதான் காரணம்.

கொழும்பில் பிறந்தவன் நான். அதில் என்ன மகிழ்ச்சி என்றால் இது இலங்கையில் வாழக்கூடிய பல சமூகங்களின் பிரதிநிதிகள் வாழக்கூடிய பகுதி. பல மதங்கள், கலாச்சாரம் சார்ந்தவர்கள் வாழக்கூடிய பகுதி. நீண்ட காலமாகவே தலைநகரமாக இருந்த பகுதி.

ஆசிய அளவில் மிகவும் முக்கியமான துறைமுகம் உள்ள பகுதி. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் பிறந்து வளர்ந்ததால் இன, மொழி, மத பேத பாகுபாடுகள் எதுவும் தெரியாத நிலையிலேயே வளர்ந்தேன்.

‘தெமட்டக் கொடை’ – இது கொழும்பில் நான் பிறந்த பகுதி. “தெமிழகொடை” என்று சிங்களத்தில் சொல்வார்கள். தமிழர்களைக் கூட்டமாக வந்து கொட்டிய இடம் என்கிற அர்த்தத்தில் அந்தப் பெயர் வந்திருக்கலாம்.

அந்தப் பகுதியில் தமிழ் மகா வித்யாலயம் ஒன்றிருந்தது. நான் வளர்ந்த தோட்டம் கொழும்பில் மிகவும் பின்தங்கின, மின்சார வசதியில்லாமல் – தலைநகருக்குள் ஒரு கிராமமாக இருந்த பகுதி.

அதிலே இருந்தவர்கள் முழுக்க முழுக்கத் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சிங்கள பௌத்தர்கள் செய்ய முடியாத சில வேலைகளைச் செய்வதற்காக இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவர்கள். குறிப்பாக வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதனால் தமிழ்நாட்டுக் கலாசாரச் சூழல் எனக்குப் பரிச்சயம்.

அங்கே சாதாரண தேவமாதா கோவில் இருக்கும். எளிமையான கோவில். இருந்தும் பிரம்மாண்டமாக விழாவை நடத்துவார்கள். அதில் எல்லா ஏழைகளுக்கும் அன்னதானம் – வாழையிலை போட்டு மணக்க மணக்க வழங்குவார்கள்.

எனக்குச் சிறுவயதில் சாப்பிட ஆசை. ஆனால் வீட்டில் விடமாட்டார்கள். அதனால் திருட்டுத்தனமாகப் போய் அந்த வாழையிலையில் உட்கார்ந்து சாப்பிடுவேன். தமிழ்நாட்டுக் கலாச்சாரம், கலை வடிவங்கள் எல்லாம் அவர்களிடம் இருக்கும்.

மின்சார வசதியில்லாத அந்தத் தோட்டத்தில் முதன்முதலில் ஒருவர் வானொலி வாங்கி வந்திருந்தார். கூடவே பெரிய சைஸில் ஒரு பேட்டரியும் இருக்கும்.

எப்போதாவது அதைப் போடும்போது தோட்டத்தின் எந்த மூலையிலிருந்தாலும் ஆர்வத்துடன் குழந்தைகளுடன் சேர்ந்து ஓடிப் போய்ப் பார்த்தப்படி ரசிப்பேன். அந்தக் கருவி அப்போது அவ்வளவு ஆச்சர்யமாக இருக்கும்.

எங்கள் தோட்டத்திற்குப் பக்கத்திலேயே பௌத்த ஆலயம் இருக்கும். கிறிஸ்தவக் கோவில்கள் இருக்கும். மசூதிகள் இருக்கும். இனப்பிரச்சினை என்றாலே அப்போது என்னவென்று தெரியாது.

“மகாதேசாபதி” என்று சொல்வார்கள் கவர்னல் ஜெனரலை. ‘சர் ஒலிவர்னே குணதிலக’ என்று அப்போதிருந்த மகாதேசாபதி எங்களது தோட்டத்திற்கு அருகிலிருந்த பெரிய தென்னந்தோப்புக்கு வருவார்.

வெள்ளைத் தொப்பி, வெள்ளை ஆடையுடன் பிரிட்டிஷ் பாணியில் உடையணிந்திருப்பார். சிறுவர்களுக்குச் சில்லறையெல்லாம் கொடுப்பார். அதை வாங்குவதற்கு நாங்கள் போய் நின்றது ஞாபகத்திற்கு வருகிறது.

அப்போது எனக்குப் பத்து வயதிருக்கும். அது முஸ்லீம் மக்களின் நோன்புக்காலம். அப்போது இஸ்லாமிய பக்திப்பாடல்களை இசைத்துக் கொண்டு அதிகாலையில் நோன்புக்கு மக்களை எழுப்புவதற்காக – ஒரு தடியுடன் ‘பக்கீர்’ என்பவர் வருவார்.

வந்து ஒவ்வொரு வீடாகத்தட்டிவிட்டுப் போவார். 1958-ல் கொழும்பில் இனக்கலவரம் என்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்கள்.

அந்தச் செய்தி தெரியாமல் அதிகாலை நோன்பை நினைவுபடுத்துவதற்காக எங்கள் பகுதிக்கு வந்த பக்கீர் ராணுவத்தால் சுடப்பட்டு அந்த இடத்திலேயே இறந்து கிடந்தார். சிறுவயதில் இனக்கலவரத்திற்கு அடையாளமாக என் மனதில் பதிந்துபோனது அந்தக் காட்சி.

கொழும்பில் யாழ்ப்பாணத் தமிழர்களின் கடைகள் இருக்கும். பெரும்பாலும் சுருட்டுக் கடைகள், அதுதான் அங்கு பிரபலம். சில கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு சூறையாடப்பட்டாலும், ஒரு வாரத்தில் அங்கு கலவரம் நடந்த சுவடே தெரியாத அளவுக்கு மறைந்துவிடும்.

எந்தச் சமயத்தில் கொழும்பில் எங்கு கலவரம் நடந்தாலும், அந்தப் பகுதியில் திரும்பவும் கூடுதலாகத் தமிழர்கள் வந்து குடியேறுவது வழக்கமாக இருந்தது. இப்போதும் தமிழீழம் கேட்கப்படும் பகுதியைவிட மூன்றில் இரண்டு மடங்கு தமிழர்கள் மற்ற பகுதிகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இது முக்கியம். வெள்ளவத்தை, பம்பளப்பட்டி பகுதிகளைப் போய்ப் பார்த்தால் குட்டி யாழ்ப்பாணம் என்றுதான் சொல்ல வேண்டும். முழுக்கத் தமிழர் கோவில்கள், கடைகள்தான்.

சிறுவயதில் வகுப்பில் சமயப் பாட்டு என்று ஒன்றுண்டு. என் வகுப்பில் நான் மட்டும்தான் இஸ்லாமிய மாணவன். அதற்கென்று தனி ஆசிரியர் கிடையாது.
அதனால் இந்து சமய வகுப்பில்தான் உட்காருவேன்.

தேவார, திருவாசகமெல்லாம் தானாகவே மனனமாகிவிட்டது. இந்து மாணவர்கள் தேவாரம், திருவாசகத்தை வகுப்பில் ஒப்புவிக்கத் தயங்கும்போது நான் தயக்கமில்லாமல் சொல்வேன்.

பிறகு அகில இலங்கையில் ஆறுமுக நாவலரைப் பற்றி ஒரு பேச்சுப் போட்டி நடந்தபோது முதல் பரிசாக ஒரு தங்கப் பதக்கத்தை என்னால் பெற முடிந்தது. அது நடந்தது இலங்கையின் பிரபலமான விவேகானந்தர் மண்டபத்தில்.

எல்லா மதத்தவர்களும் சேர்ந்து கொண்டாடும் திருவிழாக்கள் இலங்கையில் அதிகம். “சிவன் ஒளிபாத மலை” என்பது இலங்கையின் உயரமான மலை. அதன் உச்சியில் ஒரு பாதச்சுவடு. அது சிவனுடைய பாதச்சுவடு என்று இந்துக்களும் நம்புகிறார்கள்.

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஆதாமின் முதல் சுவடு என்று நம்புகிறார்கள். பௌத்தர்கள் புத்தபெருமானுடையது என்று நினைக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து அங்கே போய் வழிபடுபவார்கள் என்பது தான் விசேஷம்.

இன்னொரு இடம் கதிர்காமம் முருகன் கோவில். தமிழ்க்கடவுள் முருகன் என்று சொல்லப்பட்டாலும், அவரைத் தலைக்கு மேல் வைத்துப் பூஜித்துக் கொண்டாடுகிறவர்கள் சிங்களவர்கள்.

காவடி எடுப்பவர்களில் 90 சதவிகிதம் அவர்கள்தான். அந்தக் கோவிலில் பூஜை கூட சிங்களவர்களே நடத்துகிறார்கள்.

முருகன் கோவிலுக்கு நேர் எதிரே ஒரு தர்ஹா. அதில் பால் குடி பாவா பள்ளிவாசல் இருக்கும். அதற்கு இந்துக்களும் போவார்கள். சிங்களவர்களும் வருவார்கள். இன்னொன்று தமிழர்களுக்கும் சிங்கவர்களுக்கும் ஒரே புத்தாண்டுதான்.

“தமிழ்ச் சிங்கள புத்தாண்டை” ஒரே நாளில் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவார்கள். எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள பௌத்த கோவிலுக்குள் பிள்ளையர் சிலை, விஷ்ணு சிலை, அம்மன் சிலை தாண்டி புத்தர் சிலை இருக்கும். பல பௌத்த ஆலங்களிலும் இதே நிலை.

வழிபாட்டு முறைகளில் இவ்வளவு தூரம் தமிழர்களும், சிங்களர்களும் ஒன்றிணைந்திருக்கிறபோது, ஊரடங்கு உத்தரவு போடக்கூடிய அளவுக்கு ஏன் இவர்களுக்கிடையே மோதல் வருகிறது என்று சிறுவயது மூளையோடு நான் யோசிப்பேன். கேள்விகள் கேட்பேன்.

“மதத்தில் முழுமையான நம்பிக்கை இருந்தால் இனத்தைப்பற்றியேப் பேசக் கூடாதுதானே? இனத்தைப் பற்றிப் பேசினால் மதமே வேண்டாமே!” இப்படிப் பல கேள்விகள். அப்போதிருந்த ஆசிரியர்களால் இதற்கு விடை சொல்ல முடிந்ததில்லை.

‘வன்முறை நமது உடம்பில் இருக்கிறதா? குழுவாக நாம் சேரும்போது உத்வேகத்துடன் அது வெளிப்படுகிறதா? அதற்கு இனம், மொழி என்று பல தலைப்புகளை நாமே வைத்துக்கொள்கிறோமா?’ இந்தக் கேள்விகள் இருக்கின்றன இப்போதும்.

வருஷத்துக்குக்கொரு தடவை “வெசாக்” பண்டிகை கொண்டாடுவார்கள். எல்லாரும் கலந்து கொள்வார்கள். நிறையப் பந்தல்கள், தோரணங்கள், தோரணங்களில் புத்தரின் ஜாதகக் கதைகளைச் சித்திரமாக்கியிருப்பார்கள். அதை நாடகமாக ஒலிபெருக்கிகளில் சொல்வார்கள்.

மின்சார பல்புகள் வினோதமான அலங்காரத்துடன் மினுங்கும். அதைப்போல கொழும்பின் இன்னொரு உற்சாகம் “வேல்விழா” செட்டியார் சமூகத்தினர் கொண்டாடுவார்கள். முருகனை ஊர்வலமாக எடுத்து வருவார்கள்.

இதிலும் எல்லோரும் சந்தோஷமாகக் கலந்துகொள்வார்கள். இந்தியாவில் இருந்தெல்லாம் சமய சொற்பொழிவாளர்கள், பக்திப் பாடல் பாடுகிறவர்கள், காருகுறிச்சி அருணாசலம், ஷேக் சின்னமௌலானா போன்ற நாதஸ்வர மேதைகள் எல்லாம் வருவார்கள்.

‘கப்பித்தாவத்தை கோவில்’ என்று கொழும்பில் ஒரு கோவில் உண்டு. அங்கு பித்துக்குளி முருகதாஸ் அடிக்கடி வந்து போவார். எனக்கு அவரது குரல் ரொம்பப் பிடிக்கும்.

சிவராத்திரி, நவராத்திரிக் காலங்களில் அவரது கச்சேரியை இரவு வரை நண்பர்களுடன் உட்கார்ந்திருந்து கேட்பேன்.

அவரது குரலும், ஆர்மோனிய இசையும் ஒன்றிணைவதைக் கேட்டு மெய்மறந்து போவேன். இனக்கல் வரமோ, மதத் துவேஷமோ இல்லாத எவ்வளவு அருமையான நாட்கள் அவை?

கொச்சிகடை பகுதியில் உள்ள அந்தோணியார் கோவில் மிகப் பழமையான ஆலயம். அதில் பல மதத்தவர்களும் கலந்துகொள்வார்கள். இவ்வாறு பல மத நிகழ்ச்சிகளில் மத வேறுபாடுகளை மீறி பலர் சந்தோஷமாகக் கலந்துகொள்கிற இடமும் கொழும்புதான். அந்த அளவுக்கு மத நல்லிணக்கம் இங்குள்ள மனதில் இயல்பாகப் படிந்திருந்தது.

இன்றைக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் கடைகள் நிறைந்திருக்கிற இடம் செட்டியார் தெரு. அந்தப் பகுதியில் சிவாலயம் உண்டு. முருகன் ஆலயம் உண்டு. கொழும்பு பனிரெண்டு பகுதியில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம்கள் வாழக்கூடிய பகுதி.

இலங்கையில் தமிழ்க் கிறிஸ்துவர்கள் உண்டு. சிங்களக் கிறிஸ்தவர்கள் உண்டு. ஆனால் சிங்கள முஸ்லீம்கள் எங்குமே இல்லை. தென்பகுதியில் வாழ்ந்தாலும் முஸ்லீம்களின் வீட்டுமொழி தமிழ்தான். அவர்களது மொழி வித்தியாசமாக இருக்கும்.

யாழ்ப்பாணத் தமிழில் பல தூய தமிழ்ச் சொற்கள் அழியாமல் இருக்கும். அகரம், இகரம், உகரம் உண்டு. அது, இது என்று சொல்வது போல இரண்டுக்கும் நடுவில் உள்ளதை “உது” என்று சொல்வது யாழ்ப்பாணத் தமிழிலேதான் உண்டு.

கொழும்பில் இந்தியப் பேச்சுப் பாணி கலந்த மொழி நடை. அம்மம்மா – அப்பப்பா, என்று கூப்பிடுவது ஒரு தனி அழகு. தாத்தா, பாட்டியைத்தான் இப்படிச் சொல்வார்கள்.

மற்றவர்களைவிட தமிழில் எனக்குப் பற்று அதிகம் இருந்தது. அதற்குக் காரணம் எனக்குத் தமிழைக் கற்பித்த ஆசிரியர்களான ஆ.பொன்னுத்துரையும், பண்டிதர் சிவலிங்கமும். அவர்கள்தான் தமிழுணர்வை ஊட்டியவர்கள்.

தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டபோது எதிர்ப்பு எழுந்த மாதிரி, கொழும்பில் சிங்கள மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டபோது அதை எதிர்த்து நின்றவர்களில் நானும் ஒருவன்.

பிறகு இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வதால் நமது மொழி தாழ்ந்து போனதில்லை என்கிற உணர்வு வந்தது. மற்ற மொழிகளைப் படித்துப் புரிந்து கொள்ளும்போதுதான் நம் மொழியையும் எப்படி வளர்க்கலாம் என்கிற உந்துதல் ஏற்படுகிறது. கல்தோன்றாக் காலத்து மூத்த மொழி ஏன் அதே இடத்தில் நிற்கிறதே என்கிற ஆதங்கம் ஏற்படுகிறது.

இலங்கைத் தலைநகரான கொழும்பு நகருக்கு அழகைக் கூட்டுகிற மாதிரி எத்தனை இடங்கள்? காந்தியின் காலடி பட்ட விவேகானந்தா மண்டபம்.

இங்குதான் வீரபாண்டிய கட்டபொம்மன் சினிமா வருவதற்கு முன்பே அதை நாடகமாக்கி அதில் கட்டபொம்மனாக நான் நடித்தேன்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வந்தபோது அங்கு லட்சக்கணக்கில் திரண்ட கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். அதில் சிங்களர்தான் பெரும்பான்மையினர். அவர்கள்தான் எம்.ஜி.ஆரைப் பார்க்க முண்டியடித்துக்கொண்டு போனார்கள்.

அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் குதிரைப்படை வர வேண்டியதாயிருந்தது. மக்கள் திலகமும், நடிகர் திலகமும் அவர்களது கதாநாயகர்கள்.

எந்த அளவுக்கு இன ஒற்றுமை இருந்தது பாருங்கள்? 1958-ல் இனக்கலவரம் வந்த பிறகும்கூட இந்த அளவுக்கு ஒற்றுமை இருந்தது.

பாரதி சொன்ன மாதிரி இந்த ஒற்றுமைக்கிடையில் அக்கினிக் குஞ்சை வைத்து விட்டார்கள். வெந்து தணிந்தது காடு. ஆனால் மறுபடியும் 83-ல் துளிர்த்தது. கொழுந்து விட்ட தீ இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. அதுதான் என்னுடைய மனத்தாங்கல்.

கலைகளின் கேந்திர ஸ்தலமான முருகன் தியேட்டர் இன்னொரு முக்கியமான இடம். டி.கே.எஸ். சகோதரர்கள். ஆர்.எஸ்.மனோகர் போன்றவர்கள் இங்கேயே தங்கி நாடகம் போட்டிருக்கிறார்கள்.

பல கலைகள் அரங்கேறின இடம் அது. அந்த இடத்தை இன்னும் அழியாமல் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

இதே மாதிரி டவர் மண்டபம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு மியூசியமாகி இருக்கிறது.

அரசியல்வாதிகளும், மதவாதிகளும், இனத்துவேஷிகளும், மக்களைக் கூறு போட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மக்களை பிணைக்கக் கூடியது கலை ஒன்றுதான்.

1983-ம் ஆண்டு இனக்கலவரம் வந்தபோது ‘இனி தமிழ் பேசி இங்கு இருக்க முடியுமா?’ என்று பலர் சந்தேகப்பட்ட காலமும் உண்டு.

ஆனால் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அதே கொழும்பில் மே தினக் கொண்டாட்டம். கால்ஃப்பேஸ் என்கிற இடத்தில் அது நடந்தது. கொழும்பின் அழகான இடங்களில் இதுவும் ஒன்று.

அந்த நிகழ்ச்சி அரசே நடத்தும் நிகழ்ச்சி. தமிழகத்திலிருந்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, கங்கை அமரன் குழுவினருடன் வந்திருந்தார்கள்.

ஒரு பாடல் இடையே வரும்போது ஒரு சிரேஷ்ட அமைச்சரின் பேச்சை நிறுத்தச் சொல்லிக் கூச்சலிடுகிறது கூட்டம். ஜனாதிபதி புரிந்துகொண்டு அவரது பேச்சை நிறுத்திக் கலைஞர்களைப் பாடச் சொன்னார்.

அப்போது எஸ்.பி.பி. ஒரு தமிழ்ப் பாடலைப் பாடின போது அங்கு திரண்டிருந்த சுமார் பத்து லட்சம் பேரும் அலைகள் ஆடின மாதிரி ஆடினார்கள். அதில் ஒன்பது லட்சம் பேராவது சிங்களர்களாக இருப்பார்கள்.

தமிழ்ப் பாடலுக்குச் சந்தோஷமாக ஆடினபோது மனதுக்கு நிறைவாக இருந்தது. “இப்படித்தானே இருக்க வேண்டும் சமுதாயம். எதற்காக இனக்கலவரம்,” என்று மனசுக்குள் அப்போது பெரிய தாகம்.

கலைக்கு எவ்வளவு மகத்தான சக்தி இருக்கிறது? ஆகவே மக்கள் மத்தியில் இனத்துவேஷமோ, வெறுப்போ இயல்பாக இல்லை என்று தான் சொல்வேன்.

இப்போதுகூட கடைசியாக நடந்த ஆடி வேல் விழாவின்போது வெள்ளவத்தை பகுதியில் ஆறு கி.மீ. தூரம் வரை பிரதானப் பாதையில் மூன்று நாட்கள் முழுக்க விளக்குக் கம்பங்கள், ஒலிப்பெருக்கிகளில் தேவாரம், திருவாசகத்தைக் கேட்க முடிவது எவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது?. ஏன் இப்படியே தொடர்ந்து இருக்கக்கூடாது? வன்முறையை யாரோ தூண்டிவிட, அதில் நாமும் பாதிக்கப்பட்டு, அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டுமா என்கிற கேள்வி இப்போதும் மனதில் எழுகிறது.

இம்மாதிரியான ஏக்கம் தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களர்களுக்கும் இருக்கிறது. இதைப் பிரதிபலிக்கிற வகையில் ‘சரோஜா’ என்கிற திரைப்படம் வந்திருக்கிறது.

ஒரு சிங்களச் சிறுமியும், தமிழ்ச்சிறுமியும் எப்படிப் பாசத்தால் இணைகிறார்கள்?, அவர்களை எப்படி ஒரு சிங்களத் தாய் தங்களது பிள்ளைகளாக வளர்க்கிறாள் என்பதைச் சொல்கிற படம் வர முடிகிறதே? (சில மிகைப்படுத்தல் இருந்தாலும்கூட!)

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சேர, சோழ, பாண்டியர் வழிவந்தவர்கள் என்று சொல்வதில்லையா? அந்தச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மத்தியில் எத்தனையோ சண்டைகள், உயிரிழப்புகள் நடந்திருக்கலாம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கு ஏற்பட்ட உயிரிழப்பும், இழைக்கப்பட்ட அநீதியும் அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டப்பட்டிருந்தால் இன்றைக்கு ஒற்றுமை சாத்தியமாகியிருக்குமா?

அதே மாதிரி இலங்கையிலும் வன்முறையை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டிவிடக்கூடாது என்கிற எண்ணம் எங்களிடத்தில் இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் அந்த நாட்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த நாங்கள் சிங்களக் கலைஞர்களுடன் சேர்ந்து போவோம். இலங்கையில் ‘பைலா’ என்பது பிரபலமாக இசை வடிவம்.

அது போர்த்துக்கீசியரால் அறிமுகப்படுத்தப்பட்டு சிங்கள இசைவடிவத்துடன் ஒன்றிவிட்டது. அதில் பிரபலமானவர் எம்.எஸ்.பெர்னாண்டோ என்கிற சிங்களக் கலைஞர்.

எழுபதுகளிலிருந்து எண்பதுக்களுக்குள் அவர் யாழ்ப்பாணத்துக்குப் போனபோது அவரைத் தோளில் வைத்து உற்சாகமாக வரவேற்று அழைத்துப் போயிருக்கிறார்கள் தமிழர்கள். பெரிய கொண்டாட்டமான வரவேற்பு. அவர் சாவதற்கு ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைச் சந்தித்தபோது கண்கலங்கச் சொன்னார்.

“எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தம்பி! இப்படிப் பண்ணிட்டாங்களே? இதற்கு யார் காரணம் அரசியல்வாதிகளா? மதத்தலைவர்களா? அல்லது இனத்துவேஷம் பிடித்தவர்களா? முன்பிருந்த மாதிரியான காலம் திரும்பவும் வராதா?

இந்தக்குரலும், அதிலிருந்த ஏக்கமும், பரிதவிப்பும் அவருக்கு மட்டுமல்ல. இன்று இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களரிடமும் இருக்கவே செய்கிறது என்பதுதான் உண்மை.”

  • மணா-வின் ‘ஊர்மணம்’ நூலில் இருந்து…
Comments (0)
Add Comment