கொஞ்சம் வேலை; நிறைய வருமானம் – இது என்ன ஃபார்முலா?

“கொஞ்சம் தான் வேலை பார்க்கணும். ஆனால் நிறைய சம்பாதிச்சிடணும். ஒரு கட்டத்திற்கு மேல் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்பது பலரது ஆசை. இதற்கு வாய்ப்பு இருக்கிறதா..?

கொஞ்ச நேரத்தில் நிறையச் சம்பாதிப்பது எப்படி? இதுதான் உங்களுடைய கேள்வியாக இருக்க முடியும். அதற்கான விடையைத் தான் பார்க்கப் போகிறோம். நம்மைப் போலவே உலகத்தில் பல பேர் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம்.

இத்தாலியரான வில்ஃபிரடோ பேரிட்டோ பின்பற்றிய விஷயம் நமக்கும் பயன்படும். பேரிட்டோ ஒரு பெரிய பொருளாதார நிபுணர். இவர் 1896-ல் ஒரு ஆரய்ச்சிக் கட்டுரைக்காக, இத்தாலியில் இருக்கக்கூடிய பணக்காரர்களையும், சொத்துக்களையும் ஆய்வு செய்தார்.

அந்த ஆராய்ச்சியின் முடிவு இதுதான். இத்தாலியில் இருக்கக்கூடிய 20 சதவிகித பணக்காரர்கள், 80 சதவிகித சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். மீதம் 80 சதவிகிதம் பேரிடம் இருப்பது, வெறும் 20 சதவிகித சொத்துக்களே!

ஆச்சர்யமான இந்த உண்மை, அவரைப் பிற நாடுகளின் நிலையையும் ஆராயச் சொன்னது. வியப்பூட்டும் விதமாக பல்வேறு நாடுகளிலும் இதே விகிதாச்சாரம் விரவிக் கிடந்ததைக் கண்டுபிடித்தார் பேரிட்டோ.

பணம், சொத்தில் மட்டும்தானா, பிற துறைகளிலும் இதே நிலை இருக்கிறதா.? என்று அடுத்த ஆராய்ச்சிக்குப் போனார்கள், அவரது ஆதரவாளர்கள்.

அட, அங்கும் அதே நிலைதான். இப்படி உருவானதுதாள், 80 : 20 ஃபார்முலா.

உதாரணத்திற்கு, சில துறைகளை எடுத்துக் கொள்ளலாம்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஐ.டி துறையை ஆராய்ச்சி செய்து அதன் முடிவில் கம்ப்யூட்டர் சாப்ட்வேரைப் பொறுத்தவரையில் அதில் ஏற்படும் 80 சதவிகித பிரச்சினைகள் 20 சதவிகித வைரசால் மட்டுமே ஏற்படுகிறது.

எனவே, அந்த 20 % வைரஸ்களைக் களைந்து விட்டால், 80 % பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று கண்டுபிடித்து.

விளையாட்டுத் துறைக்கு வருவோம். பல்வேறு விளையாட்டுகள் உலகம் முழுக்க இருந்தாலும், கால்பந்தோ, கிரிக்கெட்டோ தான் 80 சதவிகித ரசிகர்களைக் கொண்டிருக்கிறது. மீத 80 சதவிகித விளையாட்டுகளில், 20 சதவிகித ரசிகர்கள் தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.

உலகெங்கும் வரி கட்டுவோரின் விகிதமும் இப்படியே இருக்கிறது. 80 சதவிகித வருமான வரியை 20 சதவிகிதப் பணக்காரர்கள் கட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, உலகத்தில் உள்ள மொத்த சொத்துகளையும் கணக்கிட்டு மதிப்பிட்ட போது, அது 82.7% சொத்துக்கள் 20 % மிகப் பெரிய பணக்காரர்களின் வசமே இருப்பது தெரிய வந்தது.

உலகம் முழுவதும் ஏறக்குறைய 20 : 80 தத்துவம் இயற்கையாகவே அமைந்திருந்தது. அந்தத் தத்துவம் எல்லாவற்றிலும் எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது.

எவ்வளவோ விகிதாச்சாரங்கள் 70:30, 50:50, 60:40, 40:60 என்று எல்லாம் இருக்கிறது. ஆனால், அதைவிட 80:20 என்ற தத்துவம், எல்லாத் துறைகளிலும், நிறைய விஷயங்களில் மிக அதிகமாகப் பொருந்துகிறது.

இந்த 80:20 விதிக்கும் நம் வருமானம் வளர்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் என்ன சம்பந்தம்… எப்படி சாத்தியம்? என்று கேட்கலாம்.

நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கலாம், அல்லது ஒரு நிறுவனத்தை நடத்தலாம். 80 சதவிகித வருமானம் 20 சதவிகித வாடிக்கையாளர்களிடமிருந்து வருகிறது என்று தெரிந்துவிட்டால், அந்த 20 சதவிகித வாடிக்கையாளர்களை மட்டும் ஸ்பெஷலாகக் கவனிக்கத் தொடங்க வேண்டும்.

அவர்களுக்கு கூடுதலாக எந்தெந்த வகையில் சேவை செய்ய முடியும்? அவர்களிடத்தில் எப்படி நாம் நிறைய நற்பெயரை பெற்று இன்னும் கொஞ்சம் கூடுதலாக வருமானத்தைக் கூட்டலாம்? என்று யோசிக்க வேண்டும்.

படிக்கும்போது, கொஞ்சம் ‘விசு’த்தனமாக இருந்தாலும், கூர்ந்து கவனித்தால் வெற்றியாளராகும் சூட்சுமம் இதில் அடங்கி இருப்பதை நீங்கள் உணர முடியும்.

வருமானத்தை உயர்த்துவதற்கு, முடிவுகளை எடுப்பதற்கு இன்னும் சொல்லப்போனால், புதுமைகளைக் கண்டறிவதற்கு இந்த 80 : 20 விதியை எல்லா நிர்வாக ஆலோசகர்களும், நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன.

முதலில் கேட்ட கேள்விக்கு வருகிறேன். “நான் ஜாலியா இருக்கணும் சார். கொஞ்ச நேரத்தில் நிறைய சம்பாதித்து விட்டு சம்பாதித்ததை ஜாலியாக செலவு செய்ய வேண்டும்.

எதிர்காலத்துக்கும் எடுத்து வைக்க வேண்டும். எதிர்காலத்தில் காலாட்டிக் கொண்டே சாப்பிட வேண்டும். இதற்கு என்ன செய்யலாம்?” என்ற கேள்விக்கு பொருளாதார அறிஞர் ரிச்சர்ட் கோச் பதில் சொல்கிறார்.

அவர் அப்படிச் சம்பாதித்தவர்தான் என்பதால், அவரை நம்பி நாமும் இறங்கலாம். 11 நிறுவனங்களைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திய அவர் சொன்ன விஷயம் இதுதான்.

“நான் காலம் முழுவதும் உழைத்து என்ன செய்யப் போகிறேன்? என்னுடைய 80 % சம்பாத்தியத்தை 20 % வாழ்நாளில் சம்பாதித்து விட்டேன்.

இனிமேல் எனக்கு எதற்கு காலம் முழுவதும் சம்பாத்தியம்? என்று எனது 40-வது வயதிலேயே ஓய்வு பெற்றுவிட்டேன்.

நீங்கள் உங்களுடைய வாழ்க்கையின் ஒட்டுமொத்த வரலாற்றை திரும்பிப் பார்த்தால் உங்களுடைய 80 % சம்பாத்தியம் 20 % உழைப்பிலேயே கிடைத்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த சூட்சுமத்தைக் கண்டறியுங்கள்.

ஆக எந்த 20 சதவிகித உழைப்பின் மூலம் 80 சதவிகித சம்பாத்தியம் கிடைக்கிறது? என்பதை அறிந்து அதில் மட்டுமே நேரத்தைச் செலவிடுங்கள். கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

ஸ்மார்ட்டாக உழைத்து நிறைய சம்பாதியுங்கள், மீதமிருக்கிற 80 % நேரத்தை ஜாலியாக செலவிடுங்கள்!’ என்கிறார் ரிச்சர்ட்

இந்த ஆராய்ச்சியில் உங்களுக்கு நேரடியான வழிமுறை கிடைக்கவில்லை என்று நினைக்காதீர்கள்.

உங்களுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பதை பட்டியலிட்டு இந்த வருமானத்தின் 80 % எந்த 20 % வழிகளில் வருகிறது என்று ஆராயுங்கள்.

அந்த 20 % வழிகளில் மேலும் மேலும் உழைத்து கூடுதலாக வருமானத்தை ஈட்டிக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் 80 சதவிகித நேரத்தை ஓய்வாகக் கழிக்கலாம் என்பது உங்களாலும் சாத்தியம்தான்.

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ நூலிலிருந்து.

25.02.2022  1 : 30 P.M

Comments (0)
Add Comment