குப்பையில் வீசப்படும் பாட்டில்களில் கலைப்பொருட்கள்!

மீள்பதிவு:

சென்னையைச் சேர்ந்த 30 வயதான வித்யா பட் மற்றும் அவரது கணவர் சுஷ்ருதா இருவரும் சேர்ந்து குப்பையில் கழிவுகளாக வீசப்படும் பாட்டில்களில் கலைப் பொருட்களை உருவாக்கி மக்களின் கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.

பயோமெடிக்கல் பொறியாளரான வித்யாவின் பேரார்வம் கலையின் மீதிருந்தது.

புதிய தொழில்முயற்சிக்கு அவர் சித்தாரா எனப் பெயரிட்டார். எது பொழுதுபோக்காக தொடங்கப்பட்டதோ அதுவே பின்னாளில் முழுநேரப் பணியாக மாறிவிட்டது.

“என் குழந்தைப் பருவத்தில் இருந்தே கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களில் ஆர்வம் இருந்து வந்தது. கல்லூரியில் படிக்கும்போது கல்வியால் ஏற்பட்ட பல அழுத்தங்களால், அவற்றில் கவனம் செலுத்தமுடியவில்லை.

கலைமீதான கவனமும் குறையத் தொடங்கியது. நான் செய்த கலைப்பொருட்கள் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெற்றபோது, அதில் முழுமையாக ஈடுபடலாம் என துணிச்சலாக  முடிவெடுத்தேன்” என்று பேசத் தொடங்குகிறார் வித்யா.

ஏன் சித்தாரா என்று பெயரிட்டார்கள்? “நானும் சுஷ்ருதாவும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். சித்தாரா என்றால் கலை மற்றும் வடிவம் என்று பொருள். பொதுவாக தேவாரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிறந்த கலைப்பொருட்களைச் செய்வதில் மிகத் திறமையானவர்கள்” என்று பூர்விகத்துக்குப் போய்வருகிறார்.

முதல் பாட்டிலில் ஓவியம் தீட்டியதை நினைவுகூரும் வித்யா, “அதுவொரு அமுல் கூல் பாட்டில். அது வீட்டில் சும்மா கிடந்தது. அதை தயார் செய்து முடித்து, அதில்  விளக்கு ஏற்றியபோது நான் மிகப்பெரும் உத்வேகத்தை அடைந்தேன்” என்கிறார்.

வீட்டில் செய்த கலைப்பொருட்களை நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கி சோதனை செய்தார்.

பின்னர் 2017 டிசம்பரில், அவர் ஒரு கண்காட்சியில் கலந்துகொண்டார். அங்கு கிடைத்த பெருத்த வரவேற்பில், அதையே முழுநேரமாக செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார் வித்யா.

கலைப் பொருட்கள் உருவாக்கம் பற்றி விரிவாகப் பேசுகிறார் வித்யா:

“நாம் முதல்கட்டமாக இரண்டு வகையான பாட்டில்களைப் பயன்படுத்தினேன். ஒரு பாட்டில் உயரமானது.

அடுத்த பாட்டில் தலைகீழானது. முதல்வகை பாட்டில்களில் எல்ஈடி லைட் பொருத்துவேன்.

அடுத்த வகையான பாட்டிலில் மர ஸ்டான்ட் செய்து வைப்பேன். அந்த மரப்பலகையும் வீணாக உள்ளதுதான். ஒட்டுமொத்தமாக குப்பையில் வீசப்படும் பொருட்களை ஒருங்கிணைத்து கலைப் பொருட்களை உருவாக்குகிறேன்” என்று விளக்குகிறார்.

பாட்டில்களை கலையாக உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட வித்யா, பழைய பொருட்கள் வாங்கும் கடையில் இருந்து பழைய பாட்டில்களைப் பெறுகிறார்.

நேரம் கிடைக்கும்போது வித்யாவும் அவரது கணவரும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

அங்கிருந்து பழைய பாட்டில்களை எடுத்துவருகிறார்கள். சென்னையில் இருப்பதால், அவர்கள் உடனடியாக செல்லக்கூடிய இடமாக கடற்கரை இருப்பதால் பாட்டில்களுக்குப் பஞ்சமில்லை.

பாட்டிலில் டிசைன் செய்வது பற்றிப் பேசும் வித்யா, “அழகியலான விஷயங்களில் சுஷ்ருதாவுக்கு ஆர்வம் அதிகம். அவருடைய ஆலோசனைகளை நான் கவனமாக கேட்டுக் கொள்வேன்.

அன்றாட வாழ்க்கையில் கிடைக்கும் உத்வேகம், வெளிச்சமான நிறங்கள், தினமும் பார்க்கும் காட்சிகள், பயண அனுபவங்களைக் கொண்டும் டிசைன் செய்கிறேன்” என்று ஆர்வத்துடன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

கிளாஸ் பெயிண்டிங் எனப்படும் கண்ணாடியில் ஓவியம் தீட்டும் கலையில் அவர் பயிற்சி பெற்றவரல்ல. சுய ஆர்வத்தால் அந்தக் கலையைக் கற்றுக் கொண்டிருக்கிறார்.

இதுவரை இரண்டு ஆண்டுகளில் குப்பையில் வீசப்பட்ட 350 பாட்டில்களில் இரவு விளக்குகளைச் செய்திருக்கிறார்.

விளக்குகள் இல்லாத பாட்டில்கள் 300 ரூபாய்க்கும்  விளக்குடன் பாட்டில்கள் ஆயிரம் ரூபாயில் தொடங்கி பல விலைகளில் விற்கப்படுகின்றன.

பாட்டில்களின் கலைநயத்தைப் பொருத்தே விலை நிர்ணயிக்கப்படுகிறது.

எப்படி சந்தைப்படுத்துகிறார் வித்யா? “இன்ஸ்டாகிராம் மூலம்தான் நாங்கள் வாடிக்கையாளர்களைப் பெறுகிறோம். அதன் மூலமாகத்தான் எங்களை மக்கள் கண்டு கொள்கிறார்கள்.

ஆனால் மார்க்கெட்டிங் செய்வதற்கு கூடுதலான நேரம் ஒதுக்க முடியவில்லை. வாய் வார்த்தைகளில்தான் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.

தொடர் வாடிக்கையாளர்கள் எங்களுக்கு இருப்பது மேலும் உற்சாகப்படுத்துகிறது” என்று மகிழ்ச்சியுடன் முடிக்கிறார் வித்தியாச தொழில் கலைஞர் வித்யா.

– தான்யா

Comments (0)
Add Comment