எம்.ஜி.ஆருக்கு ‘வாத்தியார்’ பட்டம் வந்தது எப்படி?

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு கேரம் போர்டு விளையாட்டிலே அதிக ஆர்வம் உண்டு. எம்.ஜி.ஆருடன் சேர்ந்து விளையாடுகிறவர்கள் எம்.ஜி.ஆரைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஒரு போதும் விளையாடமாட்டார்கள்.

காரணம், எம்.ஜி.ஆரைத் தோற்கடித்துவிட்டு தான் வெற்றிபெற்றுவிட்டேன் என்று எம்.ஜி.ஆரிடம் எப்படிக் காட்டிக்கொள்ள முடியும்?

கேரம் விளையாட்டில் எம்.ஜி.ஆரைத் தோற்கடிக்க முடியாது என்பதும் உண்மையே. அவரிடம் ஸ்டைகர் வந்துவிட்டால், மிக நிதானமாக எந்த ஆங்கிளில் ஸ்டைகரை வைத்து எவ்வளவு வேகத்தில் அடித்தால் அந்தக் காய் குழிக்குள் விழும் என்பதை முதலில் தீர்மானம் செய்து கொள்வார்.

படப்பிடிப்பின்போது கேமிரா ஆங்கிள் பார்த்துப் பழக்கப்பட்டவரல்லவா! அதனால் எம்.ஜி.ஆர் அவர்கள் கேரம் விளையாடுவதைப் பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கும்.

ஒரு நாள் சண்டைக்காட்சி எடுப்பதாக இருந்தது.

அன்று சண்டைக் காட்சியில் பங்கேற்க பம்பாயிலிருந்து ஷெட்டி என்பவர் வந்திருந்தார். ஷெட்டி என்பவர் நல்ல உடல்வாகு! மொட்டை அடித்திருப்பார்.

‘நவரத்தினம்’ படத்தில் ஒரு நடனக்காரியுடன் எம்.ஜி.ஆர் நடனமாடும்போது அவருடன் சண்டையிடுவதைப் பார்த்திருக்கலாம்.

ஷெட்டி

அன்று அந்த ஷெட்டியுடன் தான் எம்.ஜி.ஆர் அவர்கள் சண்டையிடுவதாகப் படமாக்கப்படுகிறது.

அப்போது பக்கத்து தளத்தில் என்.டி.ஆர் நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் ஷெட்டியுடன் சண்டைக்காட்சியில் நடிக்கும் விவரம் என்.டி.ஆருக்குத் தெரிந்தது.

உடனே தனது படப்பிடிப்புத் தளத்திலிருந்து எம்.ஜி.ஆரைப் பார்க்கச் சென்றார்.

என்.டி.ஆரைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் வந்து கட்டித் தழுவி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார்.

இருவரும் உட்கார்ந்து நலன்களைப் பேசினார்கள்.

அதன்பிறகு “நான் முக்கியமாக உங்களைப் பார்க்க வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு? அதச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்”.

“என்ன விஷயம்? சொல்லுங்க” என்றார் எம்.ஜி.ஆர்.

“இப்ப நீங்க பம்பாயிலிருந்து வந்திருக்கிற ஷெட்டிகூடத்தானே சண்டைப் போடறீங்க?”

“ஆமாம்”

“அவர் கூட சண்டைப் போடும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க”.

“ஏன்?”

“அவன் சண்டைப் போடற மாதிரி நடிக்கச் சொன்னா, நெஜமாகவே என் மூஞ்சியில குத்திட்டான். இதோ இந்த இடம் எனக்கு வீங்கிப் போச்சு. ஒரு வாரம் ட்ரீட்மெண்ட் எடுத்துட்டுத்தான் மறுபடி நடிக்க வந்தேன்.

அப்படி செஞ்சதுக்கு அவன் ஒரு மன்னிப்புக் கூடக் கேக்கல! ஸ்டண்டுல இதெல்லாம் சகஜம்னு சொல்லிட்டுப் போயிட்டான்” என்றார்.

இதைக் கேட்ட எம்.ஜி.ஆருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது.

ஒவ்வொருவரும் சினிமாவில் நிஜமாகவே சண்டைபோட்டுக் கொண்டால் என்ன ஆகும்? என்.டி.ஆர் எவ்வளவு பெரிய நடிகர், கோடான கோடி ரசிகர்களைக் கொண்டவர், அனைவரிடத்திலும் அன்பாகப் பேசக்கூடியவர், பண்புள்ள மனிதர். அவரிடம் இப்படியா நடந்து கொள்வது? என்று வருத்தப்பட்டார்.

“நம்ம சவுத் இண்டியன் ஆர்ட்டிஸ்ட்டுன்னா பாம்பேக் காரணுங்களுக்கெல்லாம் இளக்காரம், நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. நான் என்னோட படப்பிடிப்புத் தளத்திற்குப் போறேன்” எனக்கூறி என்.டி.ஆர் சென்றுவிட்டார்.

எம்.ஜி.ஆர் ஆழ்ந்து யோசித்தார்.

இன்றைக்குப் படப்பிடிப்பை ரத்து செய்துவிடலாம் என நினைத்து டைரக்டரை அழைத்து மூன்று தினங்கள் கழித்து சண்டைக்காட்சியை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டார்.

ஷெட்டியை அழைத்து நீங்கள் வெயிட் லிப்ட் தூக்குபவரா எனக் கேட்டார்.

அவர் “ஆமாம்” என்றார்.

“எத்தனை பவுண்ட் வெயிட் தூக்குவீங்க?”

“முந்நூற்றி ஐம்பது பவுண்ட்”.

“ஓ.கே… மூன்று நாட்கள் கழித்து ஷூட்டிங்” எனக் கூறிவிட்டு ஸ்டுடியோவிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

வீட்டிற்குச் சென்று வெயிட் லிப்ட் ஆட்களை அழைத்து முந்நூற்றி ஐம்பது பவுண்டுக்கும் மேல் நான் தூக்க வேண்டும். அதற்கான பயிற்சியை எனக்குத் தாருங்கள் என்று கேட்டார்.

தொடர்ந்து பயிற்சி எடுத்த எம்.ஜி.ஆர் 350 பவுண்டைத் தூக்கினார். அன்று ஷெட்டியுடன் ஆன படப்பிடிப்பு – இருவரும் மேக்கப் போட்டுக் கொண்டு படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தார்கள்.

அன்றைக்கு நம்பியார் என்கிற ஸ்டண்ட் மாஸ்டர்தான் மாஸ்டர். எம்.ஜி.ஆருடன் தைரியமாகக் கேரம்போர்டு விளையாடும் ஸ்டண்ட் மாஸ்டர் அவர்தான்.

ஸ்டண்ட் மாஸ்டரை அழைத்து – முதல் ஷாட்டில் நான் ஷெட்டியின் முகத்தில் அடிப்பது போல ரிகர்ஷல் கொடுங்கள் என்றார் எம்.ஜி.ஆர்.

ஸ்டண்ட் மாஸ்டருக்கு ஏன் இவர் இப்படிக் கேட்கிறார் என்று புரியவில்லை.

எம்.ஜி.ஆர் சொன்ன மாதிரியே ஷெட்டியின் முகத்தில் எம்.ஜி.ஆர் குத்துவது போல ஒத்திகை பார்க்கப்பட்டது.

அடுத்து படப்பிடிப்புக்கான டேக் ஆரம்பமானது. ஸ்டார்ட் காமிரா, ஆக்ஷன் என்றதும் எம்.ஜி.ஆர் ஒரு சுற்றி சுற்றி ஷெட்டியின் முகத்தில் குத்த, ஷெட்டியின் முகம் கிழிந்து ரத்தம் வந்து விட்டது.

சற்றும் எதிர்பாராத ஷெட்டி என்ன இப்படி செஞ்சுட்டீங்க? என்று கேட்டபோது, சண்டைக் காட்சியில் இதெல்லாம் சாதாரணமாய் நடப்பதுதான் எனக் கூறினார்.

ஷெட்டிக்கு என்.டி.ஆரிடம் இதேபோல் தானும் சொன்னது நினைவுக்கு வந்தது.

“நான் ஏன் இப்படிச் சொன்னேன்னு தெரியுதா?” எனக் கேட்டார்.

“தெரியுது.. நான் தவறு செய்துவிட்டேன்” என்று வருத்தத்தைத் தெரிவித்தார்.

“இந்த வருத்தத்தைப் பக்கத்து படப்பிடிப்பில் இருக்கும் என்.டி.ஆருக்குச் சொல்லுங்கள்” என்றார்.

ஷெட்டி, என்.டி.ஆரை சந்தித்து தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.

என்.டி.ஆர் ஷெட்டியை அழைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரிடம் வந்தார்.

பிறகு ஷெட்டியைக் கட்டித் தழுவினார் எம்.ஜி.ஆர்.

“நீங்க வெயிட் லிப்ட் தூக்கறவர் உங்க உடம்புல இருக்கிற பவர் அதிகம். நாங்க வெறும் சண்டைக்காட்சி மட்டும் நடிக்கிறவர் இல்ல. டான்ஸ், பாட்டு, லவ்சீன்னு கலந்து நடிக்கிறவங்க. அதனால நாங்க உடம்ப ரஃப்பா வெச்சுக்க முடியாது.

ஆனா அதே நேரம் எங்களாலயும் இப்படி அடிக்க முடியும்னு உங்களுக்குப் புரியவைக்கத்தான் அப்படிச் செஞ்சேன். நாம இனிமேல் நண்பர்கள் – சண்டை புடிக்கிற மாதிரி நடிக்கலாம். யாரையும், யாரும் காயப்படுத்தக் கூடாது” என்று எம்.ஜி.ஆர் கூறிய அறிவுரையில் ஷெட்டி நெகிழ்ந்து போனார்.

அன்றைக்கு நடந்த சண்டைக்காட்சிகளின் இடைவேளையின் போது ஸ்டண்ட் மாஸ்டர் நம்பியாரும், எம்.ஜி.ஆரும் கேரம்போர்டு விளையாடினார்கள். கேரம்போர்டு விளையாடும்போது எம்.ஜி.ஆர் ஜெயித்து விட்டு எழுந்தார்.

அப்போது “இன்னொரு ஆட்டம் போடலாம் உட்காருங்க வாத்தியாரே” என்று ஸ்டண்ட் மாஸ்டர் சொன்னார்.

“என்னப் போயி வாத்தியாருன்னு சொல்றீங்க?” – எம்.ஜி.ஆர் கேட்டார்.

“ஒவ்வொருத்தரையும் திருத்தி அரவணைக்கிறீங்க! நியாயப்படி பாத்தா நீங்க தான் எல்லோருக்கும் வாத்தியார்” என்று கூறினார் ஸ்டண்ட் மாஸ்டர்.

அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்டண்ட் நடிகர்கள் மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் வாத்தியாரே! வாத்தியாரே” என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

சின்னவர், சின்னவர் என்று அழைத்தவர்களுக்கு ‘வாத்தியார்’ என்று அழைப்பதில் அதிகப்பிரியம் இருந்தது. அதன்பிறகு படத்தில் வாத்தியாரே என்று அழைக்கும் வசனங்களைப் புகுத்தினார்கள்.

இதையே ‘நம்நாடு’ என்று அழைக்கும் படத்தில் ‘வாங்கய்யா வாத்தியாரைய்யா’ என்று பாடலாக வெளிவந்தது. அதன்பிறகு சாதாரண மக்களுக்கு எம்.ஜி.ஆர், வாத்தியார் ஆனார்.

****

– எம்.ஜி.ஆரின் உறவினரும், வழக்கறிஞருமான முனைவர் குமார் ராஜேந்திரன் தொகுத்திருக்கும் ‘எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் இருந்து ஒரு பகுதி…

800 பக்கங்களும் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்ட அழகான இந்த நூலின் விலை ரூ.1800.

சென்னை புத்தகக் கண்காட்சியில் அறிமுகச் சலுகையாக 30 சதவிகித தள்ளுபடியுடன் ரூ.1250-க்கு கிடைக்கிறது.

அத்துடன் எம்.ஜி.ஆரைப் பற்றி அவரது மனைவி திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் எழுதிய ‘எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்’ என்ற 150 ரூபாய் மதிப்புள்ள நூல் இலவசமாகக் கிடைக்கிறது.

இந்த நூலிலும் எம்.ஜி.ஆரைப் பற்றிய இதுவரை வெளிவராத பல அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நூல் பற்றிய மேலும் தகவல்களுக்கு…

மெரினா புக்ஸ்
ஸ்டால் எண் – 261 & 262
அலைபேசி: 88834 88866 / 75400 09515

Comments (0)
Add Comment