பேச்சாளனின் அரசியல் வாழ்க்கை!

நூல் வாசிப்பு:

பிரபல பத்திரிகையாளரும் நாவலாசிரியருமான ஏக்நாத் எழுதியுள்ள நான்காவது நாவல் அவயம். அவயம் என்றால் நெல்லைத் தமிழில் சத்தம் என்று பொருள். ஒரு கம்யூனிஸ்ட் பேச்சாளரின் வாழ்க்கைக் கதையை விவரித்துச் செல்லும் நாவல்.

முன்னுரையில் பேசியுள்ள ஏக்நாத், “பெருங்கோபமும் பேரமைதியும் சேர்ந்தே அமைகிறது வாழ்க்கை. எங்கே எது எப்படி வெளிப்படுகிறது என்பது விதிப்பாடு.

மேகத்தில் இருந்து பொழியும் மழைபோலல்ல அது. மலையில் இருந்து தரை நோக்கி விழும் நீர்வீழ்ச்சியாகவும் சலசலத்து ஓடும் நதியாகவும் அதை கொள்ள முடியாது.

அது எந்த வரையறைக்குள்ளும் சிக்காத வகையை கொண்டது. நேற்று அப்படியாகவும் இன்று இப்படியாகவும் நாளை எப்படியாகவும் மாறும் வித்தைகளைக் கொண்டது. அதனால் தான் அதை, வாழ்வு என்கிறார்கள்.

இந்தக் கதையில் வருகிற பேச்சாளர் மாடசாமியின் வாழ்க்கையும் அப்படித்தான். எங்கோ ஆரம்பித்து, எப்படியோ முடிகிற ஒவ்வொரு மனித வாழ்க்கைக்குள்ளும் நிரம்பிக் கிடக்கிறது பெருங்கதைகள்.

அப்படி ஒரு மனிதனின் கதை இது. சாதாரண மனிதனொருவனின் பலவீனம், அவனை எங்கு கொண்டு செல்கிறது என்பதையும் எங்கெல்லாம் சுழற்றியடிக்கிறது என்பதையும் பேசுகிறது இந்தப் புனைவு.

அவயம் என்பதை, சத்தம் என்ற பொருளில் பயன்படுத்தி இருக்கிறேன். நெல்லை, தென்காசி மாவட்டங்களில், ‘ஏம்ல அவயக்காடா கெடக்கு?’, ‘அங்கென்னல இவ்வளவு அவயம்?’ என்ற பேச்சு வழக்கு இருக்கிறது” என்று முன்கதைச் சுருக்கமாக விவரித்துள்ளார்.

அவயம் நாவல் பற்றி கவிஞர் மு.ரா.சுந்தரமூர்த்தி எழுதியுள்ள அணிந்துரையை ‘தாய்’ இணையதள வாசகர்களுக்காக வழங்குகிறோம்…

உலகெங்கும் விரவிக் கிடக்கிறது கதைகள். எங்கும் எதிலுமென எங்கெங்கும் இருக்கிறது அது. அதன் மீது ஏறி மிதித்தபடியோ ஏறி அமர்ந்தபடியோதான் நம் பயணம் இருக்கிறது என நினைத்துக்கொள்கிறேன் பல நேரங்களில்.

அந்தக் கதைகள் எதையோ சொல்கிறது, அல்லது எதையும் சொல்கிறது. அவற்றைக் கேட்டுக்கேட்டு வளர்ந்த காதுகள், பார்த்துப் பார்த்து வளர்ந்த கண்கள், அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றன. இப்படி கதைகளில் வளர்ந்து, கதைகளில் உருண்ட வாழ்க்கைதான் நமக்கு.

இன்று வேறு வாழ்க்கை முறை, உருமாறிய வைரசாக வந்துவிட்டாலும் கதைகள் இல்லாத வாழ்க்கை இல்லவே இல்லை.

அப்படியான பெரும் கதைகளை, ஒரு வாழ்க்கையை நண்பர் ஏக்நாத்தின் படைப்புகளில் கடந்த சில வருடங்களாக பார்க்கிறேன்.

அவருடைய ’கெடைக்காடு’, ’ஆங்காரம்’, ’வேசடை’ நாவல்கள் தந்த வாழ்க்கையை, இன்னும் மனதில் அசைப் போட்டுக்கொண்டே இருக்கிறேன்.

ஒரு முழு வாழ்வையும் ஏற்ற இறக்கங்களுடன் விரிவாக விவரித்துச் செல்லும் நாவல்கள் தமிழில் அரிது.

அதிலும் ஒப்பீட்டு அளவில் உதாரணத்திற்கு சொல்வதனால் வங்க மொழிபெயர்ப்பு நாவல்களான விபூதி பூஷண் பந்தோபாத்யாய-வின், ‘இலட்சிய இந்து ஓட்டல்’, அதீன் பந்த்யோபாத்யாய-வின் ‘நீலகண்ட பறவையைத் தேடி’, பஞ்சாபி நாவலான நானக் சிங்கின் ‘கவி’ போல தமிழில் இந்த ‘அவயம்’ நாவல் வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்

ஏக்நாத்தின் நாவல்களில் அவர் வாழ்ந்த கிராமமே முக்கிய அங்கம் வகிக்கிறது. அவரது பிரமிக்க வைக்கும் மொழிநடை, இயல்பாக அவர் கையாளும் சொற்கள், கதைக் களத்தையும் கதை மாந்தர்களையும் நம் மனதில் காட்சிகளாக விரிவடைய செய்கின்றன.

கதைப் படிக்கிறேன் என்பதைவிட கதைப் பார்க்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு கதை சொல்லியின் லாவகம் நம்மை, கதை நடக்கிற கிராமத்திற்கு இழுத்துச் சென்று விடுகிறது. ஒரு சம்பவம் கதையாகிறதா?

இல்லை அந்தச் சம்பவம் கதையை நமக்குள் விதைக்கிறதா? என்றால் விதைக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஊரில், அரசியல் கட்சிக் கூட்டமோ, கோயில் கொடை விழாவோ சகஜமானது தான் என்று கடந்து போகிற அதே நேரத்தில், அங்கு நடக்கிற ஏதோ ஒரு சம்பவம் நம்மை இடறி விழ வைத்து விடுகிறது.

அந்த சம்பவத்தோடு போய்விடுவதில்லை, நமக்குள் விதையாய் அது மறைந்து நின்று விடுகிறது, விதை மண்ணைக் குடைவது போல், மனதைக் குடைந்து நின்று நிலைபெற்று விடுகிறது.

என்றோ ஒரு நாள் அது முளைவிட்டு விரிந்து மரமாய் கிளைபரப்பி நமக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

ஏக்நாத்திற்குள் விழுந்த விதைகள் ஒவ்வொன்றும் வீரியம் மிக்கவை என்பதை அவர் காட்டும் கதைகள் வெளிப்படுத்துகின்றன.

கற்பனை செய்து, இட்டுக்கட்டி, தகவல்களைத் திரட்டி, சம்பவங்களைத் தொகுத்து பின்னப்பட்ட கதையல்ல அவர் நாவல்கள்.

அவை ரத்தமும் சதையுமாக கிராம ஆத்மாவின் குதூகுலத்தையும் வேதனை விசும்பல்களையும் உண்மை சாட்சியாய் நின்று உணர்ச்சிப் பொங்க எடுத்துச் சொல்ல முற்படுகிறது.

அது ஆணிவேரும் சல்லி வேர்களையும் கொண்ட மரமும் அதன் கிளைகளும் போல உள்ளும் வெளியுமாக எழுந்து நின்று பிரமிக்க வைக்கிறது.

வாசகனை உள்ளிழுத்துக்கொண்டு புழுதிப் பறக்கிற கிராமத்துத் தெருக்களிலும் கண்மாய் சேறு சகதிகளிலும் வனாந்தர புல்வெளிகளிலும் வயல் வரப்புகளிலும் உருளும் ஏக்நாத் கதைகள், போகிறபோக்கில் சொல்லிக்கொண்டு போவது போல் இருந்தாலும் அவை ஒரு இலக்கு நோக்கி விரையும் அம்பாக நம்மை இழுத்துச் செல்வதாகவே இருக்கிறது.

அவரது முந்தைய நாவல்களில் இல்லாத அளவு ’அவயம்’ கதைக்களத்தில் வேறொரு மையம் வெளிப்படுகிறது.

தெற்கத்தி மண்ணின் மணம் மட்டுமல்ல, அந்த மண்ணின் அரசியல் சூழலும் அதன் விளைவுகளுமாக விரிகிறது இந்த நாவல்.

ஒரு பேச்சாளன், கைதட்டல்களில் கொள்ளும் மயக்கமும் அவனின் பேச்சில் மக்கள் கொள்ளும் மயக்கமுமான கதை நகர்வில் நெல்லை சிற்றூர்களில் ஒரு காலகட்டத்தின் அரசியலும் அதன் நீக்கு போக்கும் வெட்ட வெளிச்சமாகிறது.

தமிழில் அரசியல் நாவல் குறைவு, அதனிலும் குறைவு சித்தாந்த அரசியல் பேசும் நாவல். அந்தக் குறையை இந்த ’அவயம்’ நீக்கக் கூடும்.

அரசியல்வாதிகளின் கோணல்முகங்களும் விசித்திர குணநலங்களும் இயல்பு மாறாமல் இழையோடுகிறது, இந்நாவலில்.

அதிலும் ஒரு கட்சியின் பிரச்சாரகனாக அந்தக் கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் பேச்சாளரின் வாழ்க்கை எந்த அளவுக்கு சொல்லிக் கொள்ளும்படி இருக்கிறது என்பதை அழகாக விவரித்து இருக்கிறார் ஏக்நாத்.

மேடையேறி பேசுவதாலேயே அவன் மேல்நிலைக்கு போய்விட்டதாக கொள்ள முடியாமல், அவனது வாழ்க்கை எப்படி சராசரிகளில் இருந்தும் நழுவி சறுக்கி விழுகிறது என்பதை நாசுக்காக சொல்லியிருக்கிறார்.

அவயம் நாவல், பேச்சாளரின் மேதமை எவ்வளவு வேதனையாக இருக்கிறது, பிரச்சாரகன் என்கிற பிரபல்யம் எப்படியெல்லாம் அவனது வாழ்க்கையை சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுகிறது, அல்லது தவறான வழிகளில் இழுத்துப்போய் விடுகிறது என்பதை உணர்த்தியிருக்கிறது.

ஓர் அரசியல் கட்சியில் பேச்சாளரின் பங்கு என்ன முக்கியத்துவத்தில் இருக்கிறது. பிற கட்சி பதவிகளுக்கும் பேச்சாளன் என்கிற பதவிக்குமான வேற்றுமை என்ன?

ஒரு கிராமம் , மக்கள் வாழ்க்கைச் சூழலும் அதன் அரசியலும் ஆசாபாசங்களும் சண்டை, சச்சரவுகள் என எல்லாவற்றையும் ’அவயம்’, அவயம் போட்டுப் பேசுகிறது.

சமூக கட்டமைப்பை தாண்டி அரசியல் எப்படி எல்லாம் கையாளப்படுகிறது. அது யாரை எல்லாம் பாதிக்கிறது.

அரசியல் என்ற அபினி மனிதனைப்படுத்தும் பாட்டையும் ஒரு பேச்சாளனின் அரசியல் வாழ்க்கையும் சொந்த வாழ்க்கையும் எப்படி ஒன்றை ஒன்றை விழுங்குகிறது என்பதையும் வசீகர மொழியில் கதையாக்கி இருக்கிறார் ஏக்நாத்.

எங்கோ உயரத்தில் அமர்ந்துகொண்டு நமக்கு கீழே நடப்பதை வேடிக்கைப் பார்க்கும் அனுபவத்தை ஏக்நாத்தின் இந்த நாவல் கொடுக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அதுதான் இந்த நாவலின் வெற்றியாகவும் இருக்கிறது.

அவயம் (புதினம்): ஏக்நாத்

வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,
9.
பிளாட் எண்: 1080 .
ரோகிணி பிளாட்ஸ்,
முனுசாமி சாலை, கே.கே.நகர்,
சென்னை – 78
விலை: ரூ. 320

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment