தேர்தல் முடிவுக்காகத் தான் வாக்களித்தவர்கள் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஏதோ ஒரு எண்ணுக்காகப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
அந்த எண் ஒரு ஆட்சியை உயரவும் வைக்கலாம். கீழிறக்கவும் செய்யலாம்.
எப்படியோ – வாக்குப் பதிவு இயந்திரங்களில் இருப்பது வாக்காளப் பெருமக்களின் நம்பிக்கை.
இந்த வாக்கைப் பெறத் தேர்தலுக்கு முன்னால் ஆயத்தங்களை எல்லாம் பல கட்சிகள் செய்திருக்கின்றன என்பது வாக்காளர்களுக்கு நன்றாகவே தெரியும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது பலருடைய கவனம் கூடியிருக்கிறது. சில சந்தேகங்களும் கூடியிருக்கின்றன.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை வைத்துத் தான் மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமையை நிறைவேற்றுகிறார்கள்.
தாங்கள் விரும்பியவர்களுக்கு நம்பிக்கையுடன் வாக்களிக்கிறார்கள்.
ஆதார் உள்ளிட்ட பல்வேறு அடையாளங்களைக் காண்பித்த பிறகே ஒருவர் வாக்களிக்க உரிமை வழங்குகிற அரசு, அவருடைய வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும் இல்லையா?
வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகளோ, விதிமீறல்களோ எந்தச் சந்தேகத்தையும் உருவாக்கிவிடக்கூடாது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் மூன்றடுக்குப் பாதுகாப்பை விட, மிக முக்கியமானது வாக்களித்த மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை.
அந்த நம்பிக்கைக்குச் சிறிதும் பங்கம் வராமல் இயங்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
#