‘மூன்றாம் பிறை’க்கு வயது 40!

தயாரிப்பாளரின் சிலிர்ப்பான அனுபவங்கள்.

தமிழ் சினிமா உலகில் அழியாத காவியங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள படங்களில் ஒன்று ‘மூன்றாம் பிறை’.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் ரீலீஸ் ஆனது இந்தப் படம்.

கமலஹாசனுக்கு முதன் முறையாக தேசிய விருது வாங்கிக் கொடுத்த படம் என்ற பெருமையுடன் ஸ்ரீதேவி, பாலு மகேந்திரா ஆகியோரின் அபரிமிதமான திறமையை உலகுக்கு பறை சாற்றிய படம் என்ற சிறப்பும் உண்டு.

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனுக்கு இது முதல் படம்.

மூன்றாம் பிறை உருவான விதம் குறித்த சிலிர்ப்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் தியாகராஜன்.

மூன்றாம் முறைக்கு மூல காரணம் மணிரத்னம்

“மூன்றாம் பிறை, உருவாக்கத்துக்கு இயக்குநர் மணிரத்னமே முதல் காரணம்’’ என 80-களுக்கு அழைத்துச் சென்றார் தியாகராஜன்.

“இயக்குநர் மணிரத்னம் எனது குழந்தைப் பருவ நண்பர். எனது தந்தை கோவிந்தராஜன், மணிரத்னத்தின் தந்தை ரத்னம், வீனஸ் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் வீனஸ் மூவீஸ் என்ற சினிமா கம்பெனியின் பங்குதாரர்கள்.

அப்போது நான் எனது மாமனார் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் நிறுவனத்தை கவனித்துக் கொண்டிருந்தேன்.

தனியாக பட நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும், ஆனால் வித்தியாசமான படங்களை உருவாக்க வேண்டும் என்ற தாகம் கொண்டிருந்தேன்.

மணிரத்னம் அவ்வப்போது என்னுடன் சினிமா டிஸ்கஷன் செய்வார்.

அவர் ‘பல்லவி அனு பல்லவி’ எனும் சினிமாவை எடுத்திருந்த நேரம்.

ஒருநாள் “எனது படத்தில் பாலுமகேந்திரா என்பவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். அருமையான ஸ்கிரிப்ட் வைத்துள்ளார். அவரை இயக்குநராக அறிமுகம் செய்கிறீர்களா?’’ என மணி என்னிடம் கேட்டார்.

ஓ.கே. சொன்னேன்.

பாலுமகேந்திரா என் வீட்டுக்கு வந்து ‘மூன்றாம் பிறை’ கதையைச் சொன்னார். நானும் எனது தந்தையும் கதை கேட்டோம்.

ரொம்பவும் பிடித்திருந்தது. மூன்றாம் பிறையைத் தயாரிக்க முடிவு செய்தேன்.

முழுக்கதையை தயாரிக்க ஒரு மாதம் அவகாசம் கேட்டார். ஓட்டலில் ரூம் போட்டுக் கொடுத்தோம்.

பக்காவாக திரைக்கதையும், வசனமும் தயாரானது. 35 லட்சம் ரூபாய் பட்ஜெட் கொடுத்தார்.

பூஜை போட்டோம். படம் வளர ஆரம்பித்தது. பெங்களூரில் இண்டிரியர் ஷுட்டிங். ஊட்டியில் அவுட்டோர்.

கண்ணே… கலைமானே

கண்ணே கலைமானே பாடலுக்கான சூழலை இளையராஜாவிடம் விவரித்தார் பாலுமகேந்திரா.

கண்ணதாசன் தான் அந்தப் பாடலை எழுத வேண்டும் என அனைவரும் முடிவு செய்தோம்.

அவர் உடல் நலம் சரி இல்லாமல் இருந்த நேரம். சொந்த ஊருக்கு சென்று ஓய்வு எடுக்க திட்டமிட்டிருந்தார்.

நோய் வாய்ப்பட்டிருந்ததால் பாடல் எழுத முதலில் தயக்கம் காட்டினார். எனது தந்தையும் அவரும் நண்பர்கள். தந்தைக்காக ஒப்புக்கொண்டார்.

ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வந்தார். சிச்சுவேஷனைக் கேட்டார். 10 நிமிடத்தில் பாடலை எழுதிக் கொடுத்து விட்டுக் கிளம்பினார்.

விநியோகஸ்தர்கள் தயக்கம்

முழுப்படமும் முடிந்தது. விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டுக் காட்டினோம். பலருக்கு பிடிக்கவில்லை.

“என்னய்யா படம் எடுத்திருக்கீங்க?’’ என சலிப்பாக சொல்லிவிட்டு, வியாபாரம் பேசாமல் போனார்கள்.

படம் ரிலீசாகி பிக்-அப் ஆனதும் அதே விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கிச் சென்றார்கள்.

பல தியேட்டர்களில் மூன்றாம் பிறை வெள்ளிவிழா கண்டது. சென்னை சுபம் தியேட்டரில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஓடியது என குதூகலித்து, சகஜ நிலைக்கு வந்தார் தியாகராஜன்.

-பி.எம்.எம்.

19.02.2022  10 : 50 A.M

Comments (0)
Add Comment