மகா ஜனங்களே, நீங்கள்தான் எங்களுக்குத் தலைவர்கள்!

தொலைக்காட்சி, பத்திரிகை என்று பல ஊடகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றித் தான் பேச்சு. அலசல் எல்லாம்.

இதே திரைப்படத்துறையில் மக்களிடம் மனம் திறந்து பேசிய நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மூன்று கலைஞர்களின் கருத்துக்கள் மட்டும் இங்கே:

”நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாடச் செய்திகளாகி வருகின்றன. நடிகர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்து இருக்கிறார்கள்.

ஏன், நானே மூன்று தலைமுறைக்குச் சொத்துச் சேர்த்து வைத்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிரபல நடிகர்கள் என்பதால் எல்லாம் தெரிந்தவர்கள் என்று அவர்களை ஒருபோதும் நம்பி விடாதீர்கள்.

அவ்வாறு நினைப்பது தவறு.

நடிகர்கள் அரசியலில் தோற்றால் கவலை இல்லை. வெற்றி பெற்றால் உங்கள் நிலை என்னவாகும் என்பதை யோசியுங்கள். எனவே நடிகர்களை அரசியலில் தோற்கடிக்க வேண்டும்’’

என்று சென்னையில் நடந்த சமூக நீதிப் பாதுகாப்பு மாநாட்டில் பேசியிருக்கிறார் நடிகர் சத்யராஜ்.

2.6.1996 ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் நடிகர் கவுண்டமணியிடம் கேட்கப்பட்ட கேள்வி.

“ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும்?’’

இதற்கு கவுண்டமணியின் பதில்:

“தன்னைப் பத்தின நிஜ ரூபத்தைப் பொத்திப் பொத்தி மூடணும். பெட்டிக்கடையில் பீடியைக் கட்டுக்கட்டா உள்ளே தான் வைச்சிருப்பான். அப்போ தான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளியே கொட்டிப் பரத்தி வியாபாரம் பண்ணிப் பாருங்க. பீடி விக்காது.

நான் விழாக்கள், பேட்டிகள்னு எதுக்கும் ஒப்புக்கிறதில்லை. கலை நிகழ்ச்சி என்ற பெயரில் துபாய், சிங்கப்பூர் போறதில்லை.

ரசிகர் மன்றம் இருந்தது. இப்போ மன்றத்தை எல்லாம் கலைச்சுட்டேன்.

என் பிறந்த நாள் என்னன்னே மறந்து போச்சு.

முக்கியமா டி.வி.க்குப் பேட்டி கொடுக்கிறதில்லை.

கவுண்டமணியை சினிமாவுலே மட்டும் பாரு. அது தான் ‘கிக்’!‘’

கவுண்டமணியை விடச் சுளீர் ரகம் மலேசியாவில் நடிகர் எம்.ஆர்.ராதா பேசிய பேச்சு தான்!

“என்னைப் பார்க்கிறீங்க… ஆக்ட் பண்றோம். சந்தோசப்பட்டுக்கிட்டுப் போங்க. கோவிலுக்குப் போங்க. சாமியைக் கும்பிடுங்க. மரியாதையா வெளியே வாங்க. சாமி கிட்டேயே உட்கார்ந்து குடும்பம் நடத்தாதீங்க. அது நல்லாயிருக்காது.

அதே மாதிரி எங்களைப் பார்த்தால் ‘நல்லாயிருக்கு’ன்னு அபிப்பிராயம் சொல்லிட்டுப் போயிடணும். அதை விட்டுட்டு நாங்க தான் பெரிசுன்னு காலம் பூராவா நினைச்சுக் கிட்டிருக்கணும்.

ஒரு அறிவாளியைப் பத்தி நினைக்கக் கூடாதா?

இந்த நாட்டிலே உள்ள நல்ல அதிகாரிகளைப் புகழுங்கள்.

கலைஞர்கள் என்றால் உயர்ந்தவர்களா? அப்படி அல்ல. இப்போது கோடீஸ்வரர்கள். அதோடு இன்கம்டாக்ஸ் பாக்கிக் காரர்களும் நாங்க தான். நாங்க பெரிய தப்பெல்லாம் செய்வோம்.

இன்கம்டாக்ஸ் என்பது என்ன? அது மக்களுடைய பணம். மக்களுடைய பணத்தைக் கொடுக்காம ஏமாத்துற கூட்டம் இந்தச் சினிமாக் கலைஞர்கள் அவ்வளவு பேரும்.. நான் உட்பட.

எதுக்குச் சொல்றேன்? சில பேரு பயந்துக்கிட்டு டாக்ஸ் கட்டுறாங்க. நான் பதிமூணு லட்சம் கட்டணும். அவங்க எங்கிட்டே எப்படி வாங்கப் போறாங்க? நான் எங்கே கட்டப் போறேன்? அது ஒண்ணுமில்லே. வருஷா வருஷம் வரும். ஆகட்டும் பார்க்கலாம்னு விட்டுக்கிட்டே இருக்கேன்.

எதுக்காக இதைச் சொல்றேன்.. நாங்க இவ்வளவு தப்புச் செய்றவங்க. மக்களுடைய பணத்தை மோசம் பண்றவங்க. இங்கே என்னை நீங்க வரவேற்க சினிமா தான் காரணம். இல்லைன்னா யாராவது திரும்பிப் பார்ப்பானா?

நாங்க பணக்காரங்களா ஆனதுக்காக ராவும், பகலும் நாங்க நினைக்க வேண்டியது மக்களை.

நீங்க டிக்கெட் வாங்கிக் கொடுத்த பணத்திலே தான் நாங்க பணக்காரங்க ஆனோம். உங்களுடைய பணம்.

உங்களுடைய பணத்தாலே முன்னேறியவர்கள் சினிமாக்காரர்கள்.

நீங்கள் தான் எங்களுக்குத் தலைவர்கள்.

அதை விட்டுட்டு எங்களைத் தலைவராக்கிட்டு ரொம்பப் பேரு இருக்காங்க. அந்த நிலைமை உங்களுக்கு வரக்கூடாது.

இதைத் தான் உங்களுக்குச் சொல்றேன்

ஆகவே எனது அருமைத் தோழர்களே!

இதெல்லாம் ஓவர்! தலைக்கு மேலே ஓவர்’’

– எம்.ஆர்.ராதாவின் வெளிப்படையான இந்தப் பேச்சுக்கு மலேசிய மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு அன்று!.

-இதுவும் தமிழ்த் திரைப்பட நடிகர்களின் குரல்கள் தான்.

19.02.2022  5 : 30 P.M

Comments (0)
Add Comment