முதல் படத்திலேயே எனக்குத் தேசிய விருது கிடைத்தது ஒரு விபத்து!

– கே.வி. ஆனந்தின் அன்றைய பேட்டி

ஒளிப்பதிவு செய்த முதல் படத்துக்காகவே தேசிய விருது பெற்றவர் கே.வி.ஆனந்த். தொடர்ந்து அவர் பணிபுரிந்த காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன் போன்ற படங்களும் தரமான ஒளிப்பதிவுக்காகப் பேசப்பட்டவை.

கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவில் வந்த லெஜன்ட் ஆஃப் பகத்சிங், காக்கி, நாயக் போன்ற இந்திப் படங்கள் நம்ம ஊர் கேமிராமேன்களுக்கு பாலிவுட்டில் மரியாதையைத் தேடித் தந்தன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கே.வி.ஆனந்த் செய்திருக்கும் ‘செல்லமே’ படத்தின் ஒளிப்பதிவை எல்லோரும் பாராட்டி முடித்தாயிற்று. ‘கனா கண்டேன்” படம் மூலமாக இயக்குநராகியிருக்கும் அவரை கேள்விகள் ஆயிரம் பகுதிக்காகச் சந்திக்கிறார் நடிகை ரோகிணி.

கேமராமேன் ஆவதற்கு முன்பு பத்திரிகைகளில் போட்டோகிராபராகப் பணிபுரிந்திருக்கிறீர்கள். அதில் கிடைத்த சில அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

அசைட், இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா, கல்கியில் ப்ரீலான்சராக இருந்தேன். எனக்கு அது ஒரு பொழுதுபோக்கு மாதிரி. ஒரு போட்டோவுக்குப் பத்து ரூபாய் கிடைக்கும். ஒரு ரிப்போர்ட்டுக்காகப் போகும்போது அது எதைப் பற்றி என்பதை முதலில் தெரிந்துகொள்வேன்.

ஸ்பாட்டில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். சில பேர் இன்டர்வியூ தரும்போது கேஷுவலாக இருப்பார்கள். சில நேரங்களில் கோபம் வரும்போது வெளியே போ என்று அனுப்பிடுவாங்க. அதனால் நான் முதலிலேயே அவர்களை போட்டோ எடுத்துவிடுவேன். இந்தப் பயிற்சியெல்லாம் சினிமாவில் எனக்கு ரொம்ப உயோகமாக இருந்தது.

இந்தியா டுடேயில் இருந்தபோது பெண் சிசுக்கொலை பற்றிய ரிப்போர்ட்டுக்காக நானும் வாசுகியும் போனோம். நாங்கள் சந்தித்த பொன்ணுக்கு நான்கு பெண் குழந்தைகள். அதில் முதலில் பிறந்த ஒரு குழந்தையை நெல்மணி கொடுத்துக் கொன்று விட்டார்கள்.

உயிரோடு இருந்தவற்றில் இன்னொரு பெண் குழந்தைக்குப் பையன்களுக்கான ட்ரெஸ் போட்டிருந்தார். ஆண் குழந்தை இல்லையே என்ற ஆசையில் அப்படி செய்தார்களாம். அப்போதே முடிவு செய்தேன், இதுதான் பத்திரிகை கவரில் வர வேண்டும் என்று அந்த போட்டோ வெளிவந்தபோது நிறைய பேர் பாராட்டினார்கள்.

ஒருமுறை வடகலை, தென்கலை பிரிவுகளுக்கு இடையே இருந்த பிரச்சினையைப் பற்றிய ரிப்போர்ட்டுக்காக ஸ்ரீரங்கத்துக்கு ஒரு முறை போனோம்.

எங்களுக்கு இன்டர்வியூ கொடுத்துக் கொண்டிருந்த அம்மா திடீரென்று எதிர்ப் பிரிவைச் சேர்ந்த இன்னொரு அம்மாவைத் திட்ட ஆரம்பித்தார்.

ஒருவரையொருவர் திட்டிக்கொண்டே இரண்டுபேரும் வெளியே ரோடு வரைக்கும் வந்துவிட்டார்கள்.

ரோட்டுக்கு ஒரு பக்கத்தில் இந்த அம்மா. இன்னொரு பக்கத்தில் அந்த அம்மா. இவர்களுக்குப் பின்னால் ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் தெரிகிறது. பிரச்சினையைத் தெளிவாகக் காட்டுவதற்கு இது போதுமென்று தோன்றியது. இதுவும் இந்தியா டுடேயில் கவர் போட்டோவாக வந்தது.

விருதுநகர் பக்கத்தில் ஒரு கிராமம். அங்கே மொத்தம் சுமார் 300 பேர்தான் இருப்பார்கள். அதில் 20 பேருக்கு போலியோ. அதுவும் எல்லாம் சின்னக் குழந்தைகள். அவர்களைப் பார்க்கும்போதே கஷ்டமாக இருந்தது.

இவர்களுடைய வேதனையை பவர்ஃபுல்லாக போட்டோவில் எப்படி கொண்டுவருவது என்று யோசித்தேன். வைட் ஆங்கிள் லென்ஸ் போட்டுக்கொண்டு, அவர்களுக்கு ரொம்ப பக்கத்தில் போனேன்.

எல்லா குழந்தைகளையும் மேலே பார்க்கச் சொன்னேன். முதலில் சிரித்தபடி போஸ் கொடுத்தார்கள். பத்து ஸ்டில்ஸ் எடுத்ததுக்கு அப்புறம் எல்லா முகத்திலும் ஒரே விதமான சோகம். அதை அப்படியே பதிவு செய்தேன். இந்த போட்டோவையும் பரவலாகக் கவனித்தார்கள்.

இந்த விஷயம் பத்திரிகையில் வெளியான பிறகு கவர்ன்மெண்ட் பார்வைக்குப் போனது. உடனடியாக நிதியுதவி அந்தக் கிராம மக்களுக்குக் கிடைத்தது.

பத்திரிகை அனுபவம் சினிமாவில் எனக்கு அட்வான்டேஜ் ஆகத்தானிருந்தது. டைரக்டர் கதை சொல்லும்போதே விஷுவலைஸ் பண்ணி விடுவேன்.

ஒளிப்பதிவில் உங்களுக்கென்று ஏதேனும் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறீர்களா?

இது ஒரு டீம் ஓர்க். தனித்தன்மையென்று சினிமாவில் எதுவும் கிடையாது. டைரக்டரைத் தவிர வேறு யாருக்கும் தனித்தன்மை இல்லை. என்னைப் பொறுத்தவரை எக்ஸ்போஷர் விஷயத்தில் நான் ரொம்ப தீர்மானமாக இருப்பேன்.

எனக்குச் சின்ன ரூமில் ஒயிட்வால் பிடிக்காது. பர்ன அவுட் ஆகும். ரொம்ப ப்ரைட்டாகவும் இருக்கும்.

ஒரே கேமராமேனின் ஒரு படத்தில் ஸ்லோவாகவும் இன்னொரு படத்தில் ஸ்பீடாகவும் இருக்கிறதென்றால் அந்த டீம் சரியில்லையென்றுதான் அர்த்தம்.

முதல்வன் படத்தில் வரும் ‘அழகான ராட்சசியே’ பாட்டுக்கு மட்டுமே 50 லட்சம் பட்ஜெட். இதுபோன்ற சமயங்களில் நான் ஒர்க் பண்ணுகிற விதத்தை அந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்வேன்.

பி.சி.ஸ்ரீராமிடம் எப்படி அஸிஸ்டென்டாக சேர்ந்தீர்கள்?

இந்தியா டுடேயில் நான் ஃபிரிலான்சராகத்தான் இருந்தேன். போட்டோகிராபருக்கு ஆள் தேவைப்படுவதாக ஒருமுறை சொன்னார்கள்.

நான் எடுத்த போட்டோக்களை அனுப்பி வைத்தேன். அங்கே போட்டோ எடிட்டராக இருந்த ரகுராய் நன்றாக இருக்கிறதென்று சொன்னார். திடீரென்று ஒருநாள் அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

அப்புறம் அந்த வேலை ரவிஷங்கருக்கு கிடைத்தது. என்னைவிட பெட்டரான ஆளுக்குத்தானே இந்த வேலை கிடைத்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

கொஞ்ச நாட்களுக்கு இங்கே இருக்க வேண்டாம் என்று தோன்றியது. அந்தமான் நிக்கோபாரென்று கிளம்பிவிட்டேன். அப்போது எனக்கு 21, 22 வயசு இருக்கும். சின்ன வயசுக்கே உரிய திமிர் இருந்தது.

பதினைந்து நாள் அங்கே தங்கி இருந்தேன். அப்போது தான் தெளிவாக ஒரு முடிவுக்கு வந்தேன். பத்திரிகையில் வேலை கிடைக்கவில்லையென்றால் என்ன?

அதுக்கு இணையாக சினிமா மேல் ஆர்வம் இருந்தது. லயோலாவில் கம்யூனிகேஷனில் டிப்ளமோ படித்திருந்தேன். பிலிம் சேம்பரில் மெம்பராகவும் இருந்து நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன்.

அந்தமானிலிருந்து திரும்பியவுடனே நேராக பி.சி.சாரைப் போய்ப் பார்த்தேன். நான் எடுத்த போட்டோக்களைப் பார்த்துவிட்டு “ஏற்கனவே நாலைந்து பேர் இருக்கிறார்கள். நீ சேர்ந்தால் ஆறாவது ஆளாகத்தான் சேர முடியும்” என்றார். யோசிக்காமல் உடனே சேர்த்துவிட்டேன்.

பி.சி.சார் அப்போது ‘கோபுர வாசலிலே’ படம் பண்ணிக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் முதல் அஸிஸ்டெண்டாக இருந்த ஜீவா, இன்னொரு பக்கம் முத்துகுமார், திரு.எம்.எஸ்.பிரபு என்று ஒரு கூட்டமே புயல் மாதிரி நின்று கொண்டிருக்கும்.

முதல் நாள் செட்டில் “நாம யாருங்கறதை நிரூபிக்கணும்” என்ற ஆர்வக் கோளாறில் ஒரு காரியம் பண்ணினேன். “மெயினை ஆஃப் பண்ணுங்க” என்று பி.சி.சார் சொன்னார்.

நான் குடுகுடுவென்று ஓடிப்போய் ஜெனரேட்டர் ஸ்விட்சை ஆஃப் பண்ணினேன். மற்ற அஸிஸ்டெண்ஸ் எல்லாம் என்னை நோக்கி பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தார்கள்.

“ஆபீஸ் மெயின் ஸ்விட்சை ஆஃப் பண்ணச் சொன்னா ஜெனரேட்டர் ஸ்விட்சையா ஆஃப் பண்ணுவ? பல்பு எல்லாம் என்னாகும்? எல்லாமே செம காஸ்ட்லி” என்று டென்ஷனாகி விட்டார்கள்.

ஒருமுறை லூப் போர்டை எடுக்கச் சொன்னார்கள். என் காதில் ப்ளு போர்டு என்று விழுந்தது. மெயின் பாக்ஸைத் தூக்கிச் கொண்டு போனேன். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒருவனிடம் என்ன திறமை இருக்கிறதென்று தெரிந்துகொண்டு அதுக்கேற்றதுபோல் பி.சி.சார் அவனுக்குக் கற்றுக் கொடுப்பார். உதாரணமாக பைக் ரிப்பேர் ஆகிவிட்டதென்றால் திரு பைக்கைப் பிரித்துப் பார்த்துவிடுவான்.

பி.சி.சார் அவனுக்கு அந்த பைக்கில் கேமராவைச் சரியான ஆங்கிளுக்காக எங்கே வைக்க வேண்டும் என்பதை ஹோம் ஓர்க் பண்ணச் சொல்லிக் கொடுப்பார். தான் பத்திரிகைகளில் போட்டோகிராபராக இருந்ததால் கலர் பிரிண்டிங் வேலைக்காக என்னை லேபுக்கு அனுப்புவார்.

முதல் படத்திலேயே உங்களது ஒளிப்பதிவுக்கு தேசியவிருது கிடைத்ததைப் பற்றி சொல்லுங்கள்?

‘தேன்மாவின் கொம்பத்து’ படத்துக்காக எனக்கு விருது கிடைத்ததை ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் அந்தப் படம் சினிமாஸ்கோப்கூட கிடையாது.

அப்போது வந்த தேவர் மகன், ரோஜா போன்ற படங்களின் ஒளிப்பதிவுக்குக்கூட விருது கிடைக்கவில்லை. திடீரென்று ஒருநாள் போனில் கூப்பிட்டு எனக்கு விருது கிடைத்திருப்பதைச் சொன்னார்கள்.

‘தேன்மாவின் கொம்பத்து’ படத்தின் ஒளிப்பதிவுக்கு இயக்குநர் பிரியதர்ஷன் புது ஆளான உங்களைக் கூப்பிட்டது ஏன்?

முதலில் பி.சி.சாரை இந்தப் படத்தின் ஒளிப்பதிவுக்குக் கேட்டிருந்தார்கள். அவர் மே மாதம் படத்தில் கமிட் ஆகியிருந்தார். அப்புறம் சந்தோஷ் சிவனிடம் பேசினார்கள். அவர் பர்ஸாத் படம் பண்ணிக் கொண்டிருந்தார்.

பிறகு ஜீவாவுக்கு அட்வான்ஸ் வரைக்கும் கொடுத்தாகிவிட்டது. காதலன் பட ஷுட்டிங் ஆரம்பமானதால், பிரச்சினையாகி அவரும் வர முடியவில்லை. கடைசியில் பி.சி.சார் என்னை சிபாரிசு பண்ணியிருக்கிறார்.

இது எனக்குத் தெரியாது. ஒருநாள் ப்ரியதர்ஷனிடமிருந்து அழைப்பு வந்தது.

“என்னோட படத்துக்கு பி.சி.சாரைக் கூப்பிட்டேன். அவரால் வர முடியவில்லை. அவருடைய ஒர்க்கில் குறைந்தபட்சம் 25 சதவீதம் வந்தால் சந்தோஷம், 50 சதவீதம் கிடைத்தால் நான் அதிர்ஷ்டக்காரன்” என்று சொன்னார்.

கேரளாவில் மின்சார வசதிகூட இல்லாத ஒரு தொலைதூரக் கிராமம்தான் அந்தப் படத்தின் கதைக்களம். ஆனால் அவர் என்னிடம் பேசும்போது படத்தில் பேக்லைட் பயன்படுத்துவாயா என்று கேட்டார். இந்த சப்ஜெக்ட்டில் எப்படி முடியும் என்று கேட்டேன். உடனே அவருக்கு என்மீது நம்பிக்கை வந்தது.

உங்கள் முதல் படத்துக்கான உடனடியான வரவேற்பு எப்படி இருந்தது?

படம் முடியும்வரைக்கும் ‘ரஷ்’ கூட போட்டுப் பார்க்கவில்லை. அந்தளவுக்கு ப்ரியதர்ஷன் பி.சி.யை நம்பினார். குட்லக்கில் பிரிவ்யூ முடிந்த உடனே நானும் என் அஸிஸ்டெண்ட் இரண்டு பேரும் பக்கத்திலிருக்கும் பெட்டிக்கடைக்கு ஓடிவந்துவிட்டோம்.

எல்லோரும் என்னைத் தேடினார்கள். நான் படத்தின் ஒளிப்பதிவில் செய்த தவறுகளெல்லாம் அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. ஆனால் வந்தவர்கள் அனைவரும் எனக்கே கை கொடுத்துக் கொண்டிருத்தார்கள். ஒரு ஹீரோ மாதிரி உணர்ந்தேன்.

இயக்குநர் என்ற அடுத்த கட்டத்துக்கு இப்போது நகர்ந்திருக்கிறீர்கள்.

ஒரே மாதிரி வேலையைச் செய்து கொண்டேயிருப்பது போன்ற உணர்வு அதுக்காக சினிமாட்டோகிராபி ஒரே போர் என்று சொல்ல முடியாது.

ஏன் டைரக்ஷன் பண்ணிப் பார்க்கக் கூடாது என்று தோன்றியது. அது ஒரு நல்ல கமர்ஷியலான ஸ்டெப்.

டைரக்ஷன் பக்கம் வர உங்களை ஈர்த்தது எது?

எனக்குச் சின்ன வயதிலிருந்தே படிக்கிற பழக்கம் உண்டு. தமிழ்வாணன், சுஜாதா, ஜெயகாந்தன் புத்தகங்களையெல்லாம் விரும்பிப் படிப்பேன்.

சிவசங்கரியின் புத்தகங்கனைப் படிக்கும்போது பெண்களை இப்படியும் பார்க்கலாமா என்று தோன்றும். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படிக்கும்போது ஜுரம் வந்த மாதிரி ஃபீல் பண்ணுவேன். இந்த மாதிரியான வாசிப்பால் நல்ல சினிமா பார்க்க வேண்டுமென்ற ஈடுபாடு வந்துவிட்டது.

இப்போது தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் என்ன?

பாலசந்தர் எனக்கு ரொம்ப பிடித்த டைரக்டர். பாரதிராஜா, மகேந்திரன் படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். என்னைப் பொறுத்தவரை நம் பக்கத்தில் இருப்பவர்களைக்கூட மறந்துவிட்டு பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அது நல்ல படம்.

முதல்வன் படம் பார்க்கும்போது அப்படித்தான் உணர்ந்தேன். ‘நாட்டாமை’ படம் எனக்குப் பிடித்திருந்தது. இப்போது தேஜா ரொம்ப சின்ன வயதிலேயே கமர்ஷியல் டைரக்டராகச் சாதித்துக் காட்டியிருக்கிறார்.

பி.சி.சாரிடம் உள்ள டெக்னிக்கல் எக்ஸலன்ஸ் என்னைப் பிரமிக்க வைக்கும். அவருடைய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஸ்டைலில் இருக்கும். முதன்முதலில் பேக்லைட் போட்டது அவர்தான்.

இப்போது அவர் முழுதாக அந்த ஸ்டையிலிருந்து வெளியே வந்துவிட்டார். ஆனா மற்றவர்கள் அதை இன்னும் ஃபாலோ பண்ணுகிறார்கள். பி.சி.சாருடைய அஸிஸ்டெண்ட்கள்தான் இப்போது இன்டஸ்டிரியைக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது தமிழ் சினிமாவில் டெக்னிஷியன்களின் முக்கியத்துவம் ரொம்பவே கூடியிருக்கிறது. ‘காக்க காக்க’ படம் எடிட்டிங் காரணமாகத்தான் ஓடியது. அதனோட எடிட்டர் ஆன்டனிக்கு மூன்று போன் லைன்கள் இருக்கின்றன. எந்த லைனிலும் அவரைப் பிடிக்கவே முடியாது. அந்தளவுக்கு அவர் பிஸி.

நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் கனா கண்டேன் என்ன மாதிரியான படம்?

முதலில் ஏ.எம்.ரத்னத்துக்காக நான் வைத்திருந்த கதை வேறு. இப்போது பி.எல்.தேனப்பனின் தயாரிப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் கனா கண்டேனின் கதை அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. திரில்லருக்குரிய விறுவிறுப்பில் ஒரு லவ் ஸ்டோரியைச் சொல்லியிருக்கிறோம்.

கேமராமேன்கள் டைரக்ட் செய்யும்போது ஸ்கிரிப்டில் கோட்டை விட்டு விடுகிறார்களே?

ஏன் தங்கர்பச்சான் ஜெயிக்கவில்லையா? அவர் இயக்கிய அழகி, சொல்ல மறந்த கதை போன்ற படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றிருக்கின்றன.

நிச்சயமாக என்னுடைய படம் ஒரு சினிமாட்டோகிராபர் எடுத்தமாதிரி இருக்காது.

எனக்கு என்ன பிடிக்கிறதோ அதை நான் செய்து கொண்டிருக்கிறேன். எனக்குப் பிடித்த விஷயங்கள்தான் சினிமாட்டோ கிராபியில் செய்தேன். அது மக்களுக்குப் பிடித்திருந்தது. என் படமும் நிச்சயம் அவர்களுக்குப் பிடிக்கும்.

– தொகுப்பு: கார்த்திகா

– 2005 பிப்ரவரியில் அளித்த பேட்டி

Comments (0)
Add Comment