கொரோனா பரவல் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கடந்த ஆண்டு மக்கள் தொகையை சுமார் 8 கோடியை நெருங்கி இருக்கலாம் என கணிக்கப்பட்டது.
இறப்பைக் காட்டிலும் பிறப்பு அதிகமாக இருப்பதால் மக்கள் தொகை எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அரசு வெளியிட்டு இருக்கும் தகவலின்படி, கடந்த ஆண்டு பிறப்பு, இறப்பு வித்தியாசம் வரலாற்றிலேயே இல்லாதவாறு மிகவும் குறைந்துள்ளது.
அதாவது கடந்த ஆண்டு தமிழகத்தில் 9,02,367 பேர் பிறந்து இருப்பதும் 8,70,192 பேர் இறந்து இருப்பது தெரியவந்துள்ளது.
பிறப்பு, இறப்பு இடைவெளி 3.69% ஆக சுருங்கியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2018-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்த வித்தியாசம் 59% ஆக இருந்தது.
அப்போது பிறப்பை காட்டிலும் இறப்பு கணிசமாக குறைந்துள்ளது. 2019ல் இந்த சதவீதம் 48.23 ஆகவும் 2020ல் 35.93 ஆக இருந்துள்ளது.
இந்த நிலையில் 2021ம் ஆண்டில் ஏறக்குறைய பிறப்புக்கு இணையாக பலர் இறந்து இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.