‘குதிரைவால்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்!

இயக்குநர் இரஞ்சித்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், யாழி நிறுவனத்துடன் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் – ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய நடிகர் கலையரசன், “குதிரைவால் எனக்கு மிகவும் ஸ்பெஷல் படம். ராஜேஷ் முதன்முதலில் இந்தப் படத்தை நான்கரை மணி நேரம் கதை சொன்னபோதே கதை என்னை மிகவும் கவர்ந்தது. இது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது” என்றார்.

இயக்குநர்களில் ஒருவரான மனோஜ் லினோனல் ஜாசன், “நான் இயக்குநர் பா.இரஞ்சித்தின் பெரிய ரசிகன், அதனால்தான் இப்படி ஒரு படத்தை இயக்க முடிந்தது என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

மற்றொரு இயக்குநர் ஷயாம் சுந்தர், ”குதிரைவால் படத்தைப் பற்றிச் சொல்லும்போது எழுத்தாளர் ராஜேஷை பற்றிப் பேசாமல் இருக்கமுடியாது.

இந்தப் படம் உருவாக அவர்தான் காரணம். அதுமட்டும் அல்ல, அவருடைய கதையின் மூலம் தனிப்பட்ட முறையில் நான் நிறையக் கற்றுக் கொண்டேன்” என்றார்

இயக்குநர் பா.இரஞ்சித், “நான் பார்த்த சினிமாவால் பாதிக்கப்பட்டு சினிமா எடுத்தேனா, இந்த சமூகம் அதுபோன்ற ஒரு சினிமாவை எடுக்கவிடவில்லை.

பல கேள்விகள் கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களைப் பேசுகிற திரைப்படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஆள் நான். ஆனால், அதை ரசித்து மிகச் சந்தோஷமாகத்தான் செய்துகொண்டிருக்கிறேன்.

இந்த கதை என்னிடம் சொல்லும்போது, பொருளாதாரரீதியாக என்னால் இப்போதைக்கு உதவமுடியாது, மற்றபடி என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொன்னேன்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தார்கள். நானும், பல இடங்களுக்கு அவர்களை அனுப்பினேன். பிறகு அவர்களுடைய நண்பர் விக்னேஷ் தயாரிப்பதாக முன்வந்தார்.

சினிமா மிகப்பெரிய லாபம் கொடுக்கும் தொழில்தான். ஆனால் எல்லோருக்கும் லாபம் கொடுக்காது. இதை நான் எல்லோரிடமும் சொல்வதுண்டு. படம் தயாரிக்கவேண்டும் என்று வருபவர்களிடம் நான் இதைச் சொல்லாமல் இருக்கமாட்டேன்.

ஏன் என்றால் ஆர்வத்தில் சினிமாவுக்கு வருகிறார்கள். பிறகு அதில் இருக்கும் பாதிப்புகளால் அவர்களால் தொடர்ந்து இயங்கமுடியவில்லை.

அதனால், சினிமாவில் இருக்கும் பாதகங்களை நான் முதலில் சொல்வேன், அதைக் கேட்டுக்கொண்டு தொடர்ந்து பயணிக்க விரும்புகிறவர்களிடம் சினிமாவில் இருக்கும் சாதகங்களை சொல்வேன்.

இப்படி நான் சினிமாவுக்கு வர விரும்பிய பலரைத் தடுத்திருக்கிறேன். அப்படித்தான் விக்னேஷிடம் சினிமாவில் பாதகங்களை கூறினேன். ஆனால், அதை கேட்ட பிறகும் அவர் படம் தயாரிக்கத் தயாராகவே இருந்தார்.

ஒரு படத்தை ஆரம்பிக்கும்போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இருக்கும் உறவு, படம் முடியும்போது இல்லாமல்போகிறது.

இது என் சினிமா பயணித்ததில் நான் எதிர்கொண்டிருக்கிறேன். அவ்வளவு பிரச்சனைகள் இங்கு இருக்கிறது.

நமக்கு இடையே இருப்பவர்களே பிரச்சனையை உருவாக்கிவிடுவார்கள். அப்படி ஒரு சூழலில் விக்னேஷும், மனோஜும் படம் ஆரம்பிக்கும் போது எப்படி நட்பாக இருந்தார்களோ இன்று வரை அதே நட்போடு தொடர்வது மிகப்பெரிய விஷயம்.

மாயாலாஜத்திற்கும் நிஜத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பு தான் இந்த படம். என்னுடைய ஓவியங்களில்கூட இதை நான் பயன்படுத்தியிருக்கிறேன்.

அதாவது, என்னுடைய அக உணர்வுக்கும், புற உணர்வுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. என்னுடைய அகஉணர்வுபடி என்னால் வாழமுடியுமா? என்றால் அது முடியவே முடியாது.

காரணம், அது எல்லையற்றது. யாருக்கும் யாரும் அடிமை இல்லை, சக மனிதனை மனிதாக நேசிக்கவேண்டும் என்று சொல்வது என் அக உணர்வு. ஆனால், புற உணர்வில் பார்க்கும்போது இங்கு யாரும் அப்படி வாழ்வதில்லை.

நாம் பார்த்து வியந்த ஜாம்பவான்கள், புகழ்பெற்ற கலைஞர்கள்கூட அந்த வேறுபாட்டை கடைப்பிடிப்பதைப் பார்த்து அவர்களிடம் இருந்து விலகியிருக்கிறேன்.

குதிரைவால் அற்புதமான படமா? என்றால், இல்லை. சில குறைகள் இருக்கிறது. ஆனால், அந்த குறைகளை மறந்து, படத்தில் சொல்லப்பட்டிருக்கும் புதிய விஷயங்கள் இருக்கும்.

இந்த கதையைக் கையாண்ட விதம், காட்சிகளைப் படமாக்கிய விதம், என அனைத்தும் தமிழ் சினிமாவுக்கு மிக புதிதாக இருக்கும்.

இந்தப் படத்தோட அனுபவம் ரசிகர்களுக்கு மிக புதியதாக இருக்கும். இது சினிமாவுக்கே ஒரு புதிய பாதையை அமைக்கும் என்று நம்புகிறேன்” என்று விரிவாகப் பேசினார்.

– பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment