பரபரவென்று நகரும் திரைக்கதையோடு ஒரு கமர்ஷியல் படத்தை பார்த்து எத்தனை நாட்களாகி விட்டது.
இந்த ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் வெளியாகியிருக்கிறது விஷ்ணு விஷால், ரெபா மோனிகா ஜான், கௌதம் வாசுதேவ் மேனன், மாலா பார்வதி, ரைசா வில்சன் உட்படப் பலர் நடித்திருக்கும் ‘எஃப்.ஐ.ஆர்’.
தொடக்கத்தில் பெரிதாக ஒரு புள்ளி வைத்துவிட்டு, அதைச் சுற்றிக் கோலமிடுவதைப் போலக் காட்சிகளைக் கோர்த்திருக்கிறது திரைக்கதை. அந்த நுட்பம் இறுதிவரை பார்வையாளனை இருக்கை நுனியில் இறுகப் பிடித்து வைத்திருக்கிறதா?
தீவிரவாதி முத்திரை!
ஐஐடியில் கெமிக்கல் என்ஜினியரிங் பிரிவில் கோல்டு மெடல் வாங்கியவர் இர்ஃபான் அகமது (விஷ்ணு விஷால்). அவரது தாய் பிரவீனா பேகம் (மாலா பார்வதி) திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றுகிறார்.
படிப்புக்கு ஏற்ற வேலையைத் தருவதற்கு முன்பாக, ஒவ்வொரு நிறுவனத்திலும் தனது மதத்தை உற்றுநோக்குவதைக் கண்டு எரிச்சலடைகிறார் இர்ஃபான். பகுதி நேரமாக வேலை பார்க்கும் ஒரு வேதி நிறுவனத்திலேயே முழுநேரமாகச் சேர்கிறார்.
இந்தச் சூழலில் பணி நிமித்தம் கோயம்புத்தூர் செல்லும் இர்ஃபான், அங்கிருந்து நேராக ஹைதராபாத்துக்கு செல்கிறார். அங்கிருக்கும் குடோனில் இருந்து சில வேதிப் பொருட்களைக் கொண்டுவர உத்தரவிடுகிறார்.
சென்னை திரும்புவதற்காக ஹைதராபாத் விமான நிலையத்துக்குச் செல்பவர், தனது மொபைலை பறிகொடுக்கிறார். அந்த நேரத்தில், அவரது மொபைல் கொண்டு ஒரு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படுகிறது.
ஏற்கனவே, தேடுதலுக்குரிய ஒரு தீவிரவாதியைப் பிடிக்க முடியாமல் திணறும் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளின் சந்தேகப் பார்வை இர்ஃபான் நோக்கித் திரும்புகிறது.
அதன்பிறகு கிடைக்கும் சில சாட்சியங்கள் இர்ஃபானை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த, அப்பாவியான அவர் உண்மையைக் கண்டறிவதற்காக சாகசங்களில் ஈடுபடுவதுதான் மீதிக்கதை.
இஸ்லாமிய மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் ஐ.எஸ். தீவிரவாதத்தைச் சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்டர் திருநாளன்று கொழும்புவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் திரைக்கதையில் இடம்பெற்றுள்ளது.
ரத்தினச் சுருக்கமாக காட்சிகள், பாத்திரங்களின் வேகமான செயல்பாடுகள், வெவ்வேறு லொகேஷன்கள், தீவிரவாதி யார் என்ற முடிச்சை அவிழ்ப்பதை நோக்கி நகரும் திரைக்கதை என்று பரபரவென்று நகரும் படத்தின் நடுவே,
காரணமேயில்லாமல் முஸ்லிம் என்பதற்காகவே ஒருவர் மீது தீவிரவாதி முத்திரை குத்துவது நியாயமா என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த்.
அபாரமான காட்சியாக்கம்!
முறுக்கேறிய உடலுடன் சிரிப்பு, சோகம், அழுகை, ஆத்திரம், காதல் என்று அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாத்திரம் விஷ்ணு விஷாலுக்கு.
அவரும் சரி, அவரது தாயாக நடித்த மாலா பார்வதியும் சரி, மிகப்பாந்தமாக அந்தந்த பாத்திரங்களில் பொருந்திப் போயிருக்கின்றனர்.
இது போன்ற திரைக்கதைகளைத் தேடித் தேடி நடிக்கும் வழக்கத்தை விஷ்ணு விஷால் கைவிடாமல் இருந்தால், அவர் படங்களுக்கான எதிர்பார்ப்பு கண்டிப்பாகப் பெருகும்.
போலீஸ் அதிகாரியாக வரும் கௌரவ், அஸ்வின், வில்லன்களாக நடித்த ராம் (இயக்குனர் ஆனந்த் ஷங்கரை நினைவூட்டுகிறார்) மற்றும் அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ஜாஸியாக நடித்தவர் உட்படப் பலரும் தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர்.
அஜய் திவான் எனும் பாத்திரத்தில் மிடுக்காக கௌதம் மேனன் வந்து போகிறார் என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.
பிரார்த்தனா ராமன் எனும் வழக்கறிஞராக வரும் மஞ்சிமாவுக்கும், அர்ச்சனா கிருஷ்ணமூர்த்தியாக வரும் ரெபா மோனிகாவுக்கும் அளவான காட்சிகள் தான். முன்னவர் உணர்வுகளால் திரையை நிரப்ப, பின்னவர் ஸ்டைலாகவும் அழகாகவும் வந்து போகிறார்.
இவர்களுக்கு நடுவே விறைப்பான என்ஐஏ அதிகாரியாக ரைசா வில்சன் வருவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் விஷயம்.
விஎஃப்எக்ஸ் மற்றும் டிஐ நுட்பங்களுக்கு ஏற்றவாறு திறன்மிக்க திட்டமிடலுடன் அமைந்திருக்கிறது அருள் வின்சென்டின் ஒளிப்பதிவு.
பரபரவென்ற கேமிராவின் ஓட்டத்தோடு இயைந்து மிகநேர்த்தியான திரைக்கதையைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது பிரசன்னா ஜிகேவின் படத்தொகுப்பு.
சில்வாவின் சண்டைக்காட்சி வடிவமைப்பு காட்சிகளின் தன்மைக்கேற்ற வகையில் இருப்பது மாபெரும் ப்ளஸ்.
எஃப்ஐஆரை பொறுத்தவரை, விஷ்ணு விஷாலையும் தாண்டி ஹீரோவாக ஜொலிப்பது பின்னணி இசையில் வீர்யமூட்டியிருக்கும் அஸ்வத்.
ஹீரோ அறிமுக பாடல் முதல் பின்பாதியில் வரும் சோகப் பாடல் வரை அனைத்தையும் மெலடி மெட்டுகளாகவே அமைத்திருப்பது எந்தவிதத்திலும் செயற்கையாகத் தோன்றவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஹீரோ தீவிரவாதியா இல்லையா என்பதைவிட, அவர் அப்பாவியா இல்லையா என்பதுதான் திரைக்கதையின் மையம். அதனை இறுதிக்காட்சி வரை நகர்த்திக்கொண்டு சென்றதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த்.
போலீஸிடம் இருந்து தப்பிக்கும் விஷ்ணு விஷால் தன் தாயைத் தேடி மருத்துவமனைக்குத்தான் வந்திருப்பார் என்று சொல்லப்படும்போது, அவசர அவசரமாக ஸ்ட்ரெச்சரில் ஒரு நோயாளியைக் கொண்டுசெல்லும்போதே அவர் அந்த இடத்தில் இருக்கிறார் என்பது நமக்குப் புரிந்துவிடுகிறது.
ஆனால், அந்த ஊகம் எப்படிச் சரியானது என்பதைச் சொன்ன விதத்தில் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். போலவே, கிளைமேக்ஸில் பைக்கில் ஒரு நபர் குறித்த சஸ்பென்ஸையும் லாவகமாக நம் மூளைக்குள் திணிக்கிறார்.
இவ்வளவு பரபர கதையில், இர்ஃபான் பாத்திரத்தின் பின்னணியை ஒரு தீவிரவாத நெட்வொர்க் மிக அலட்சியமாக ‘ஹேண்டில்’ செய்யுமா என்ற கேள்வியும் எழவே செய்கிறது. ஆனால், அதைவிட திரைக்கதையின் வேகம் அதிகம் என்பதால் நம்மால் அதனைப் புறந்தள்ளவும் முடிகிறது.
விஷ்ணு விஷாலின் உண்மையான அடையாளம் என்னவென்பதை அவசர கதியில் சொல்லி முடிக்குமிடத்தில் மட்டுமே முழுமையின்மை தென்படுகிறது.
இஸ்லாம் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் பயங்கரவாதச் செயல்பாடுகளை ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒரு முஸ்லீம் புலனாய்வு அதிகாரி தடுத்து நிறுத்துவதுதான் ‘ட்ரெய்ட்டர்’ படத்தின் கதைக்களம்.
‘என்னது விஸ்வரூபம் கதையை அதுக்கு முன்னாடியே காப்பி அடிச்சுட்டாங்களா’ என்று கேள்வி எழுப்பினால், அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.
வழக்கமான ஆக்ஷன் திரைப்படம் என்றாலும், அபாரமான காட்சியாக்கத்தினால் டான் செடில் நடித்த ‘ட்ரெய்ட்டர்’ படத்திற்கான சமர்ப்பணமாக மாறியிருக்கிறது ‘எஃப்ஐஆர்’. வெல்டன் மனு ஆனந்த் அண்ட் டீம்!
-உதய் பாடகலிங்கம்
14.02.2022 12 : 30 P.M