மதம் தொடர்பாக இன்று நம் முன் இருக்கும் கேள்விகள்!

எந்த மதமும் பெண்ணை சக உயிராக என்றும் மதித்தது இல்லை. ஆராதிக்கப்பட‌  வேண்டிய தேவதைகளாகக் காட்டிக் கொண்டு, அனுபவிக்கப்பட வேண்டிய போதைப் பொருளாக, அடிமையாக, பதிவிரதையாக, கற்புக்கரசியாக,

சொத்துரிமை இல்லாத வாரிசாக, காட்சிக்கான கவர்ச்சிப் பொருளாகத்தான் அனைத்து மதங்களும் பெண்ணை நடத்தியுள்ளதே தவிர, சக மனுஷியாக எந்த மதமும் என்றும் நடத்த விரும்பவில்லை. நடத்தியதும் இல்லை. இதுதான் கசப்பான உண்மை.

இதில் சில படிநிலைகளில் வேண்டுமானல் மதங்களுக்குள் வித்தியாசம், கால, தேச அளவில் இருக்கின்றதே ஒழிய‌ மற்றபடி நடத்தும் விதத்தில் அடிப்படை வித்தியாசம் எந்த மதத்திலும் மாறுபட்டு இல்லை.

விரிவாக எடுத்துக்காட்டுக்களுடன் இதனை விளக்க முடியும். உதாரணங்களுடன் விளக்கினால் இன்னும் ரொம்பவே கசக்கும்.

சரி, ஹிஜாப் விஷயத்திற்கு வருவோம். சங்பரிவாரங்கள் ஹிஜாப்பை, பர்தாவை எதிர்க்க பெண்ணடிமைத் தனத்தின் சின்னங்களாக அவைகளை சுட்டிக்காட்டி இருந்தால், அதனால் எதிர்க்கின்றோம் எனச் சொல்லி இருந்தால், அப்பொழுது நிலைபாடு வேறு.

ஆனால், அவர்கள் சொல்வது அது ஒரு மதக்குறியீடு என்பதால், மத அடையாளம் என்பதால் எதிர்க்கின்றோம் என்கின்றார்கள்.‌ அதுவும் கல்வி நிலையங்களில் கூடாது என்பதால் எதிர்க்கின்றோம் என்கின்றார்கள்.

சரி, கல்வி நிலையங்களில் திருநீறு, நாமம், கையில் கலர் கலராக கயிறுகள், பூணூல், பொட்டு என சகல மத அடையாளங்களையும் நீக்கி‌விடக் கோருவார்களா? கல்வி நிலையங்களில் சீக்கியர்களை டர்பனை கழற்றச் சொல்ல தைரியம் உண்டா?

காவி உடையுடன் ஒருவர் மாநில முதலமைச்சராக பணியாற்றலாமாம். மதச்சார்பற்ற ஒரு தேசத்தின் பிரதமர் பல அவதார வேடம் போடலாமாம். அதில் எல்லாம் ஒரு
பிரச்சினையும் இல்லையாம். கல்விக்கூடம் மட்டும் தான் பிரச்சினையாம்.

ஆக, அவர்களின் எதிர்ப்பு முழக்கம் பெண்களின் உரிமைக்கானதாக இல்லை. பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரானதாக இல்லை. மத ரீதியாகப் பிரித்தாள்வதே இவர்களின் தந்திரம்.

ஏற்கனவே கல்வியில் அதிலும் பெண் கல்வியில் பின் தங்கியுள்ள முஸ்லீம் பெண்கள் கல்வி கற்க வருவதுதான் இவர்கள் கண்ணை உறுத்துகிறது போலும். அதற்கு ஹிஜாப் ஒரு சாக்கு.

ஆக அரசியல் ஆதாயத்திற்காக, இந்துக்களின் வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக, முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைக்க, கணக்கு போட்டு, வாக்கு வங்கி அரசியல் பகடையை உருட்டுகிறார்கள்.

கல்வி நிலையங்களில் எதற்கு மத அடையாளம் என ‘நியாயம்’ பேசுகிறார்கள்.

ஏற்கனவே பெருந்தொற்றால் பின்னடைவு எய்தி உள்ள பொருளாதாரம், பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கார்ப்பரேட் ஆதரவு, பட்ஜெட், விவசாயிகள் போராட்டம், நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாநிலத் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய அச்சம் ஆகிய எல்லாம் சேர்ந்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப இவர்கள் எடுத்த ஆயுதம் ஹிஜாப்‌‌.

பரபரப்பு, பதட்ட நிலையிலேயே மக்களை எந்நேரமும் வைத்திருக்க திட்டமிடும் பாசிச வியூகம்.

ஒற்றைக் கலாச்சாரம் எனும் புள்ளியை வைத்து கோலம் போடும் இவர்களின் பாசிச வியூகம்.

நீதிமன்ற ஆசீர்வாதத்துடன் நியாயத்தைக் குழிதோண்டி புதைக்க முயலும் பாசிச வியூகம்.

தமிழகத்தின் வாசலை நெருங்கி வந்து விட்டது பாசிச வியூகம்.

‘பத்ம வியூக’த்தை உடைத்து உட்சென்று போரிடும் தந்திரம் அறிந்த, துணிவுள்ள எத்தனை அபிமன்யூக்கள் தயராகவுள்ளனர் என்பதுதான் இன்று நம்முன் எழுந்துள்ள கேள்வி.

-ஆதிரன்

12.02.2022  4 : 30 P.M

Comments (0)
Add Comment