ஐந்து முனைப் போட்டியால் அதிரும் கோவா!

ஆட்சியமைக்கப் போவது யார்?

மயக்கும் கடற்கரையைக் கொண்ட கோவா, சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்.
காதல் ஜோடிகளும் விரும்பி செல்லும் தேசம்.

காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி கோவா சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது.
இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓயும் கோவாவின் நிலவரம் என்ன?
பார்க்கலாம்.

குறட்டை விட்ட காங்கிரஸ்

முயல்-ஆமை கதை நிஜமா? புனைவா? என்பது தெரியவில்லை.

ஆனால் கோவா மாநிலத்தில் கடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நிகழ்ந்த சம்பவங்களுடன் இந்த கதை ஒத்துப்போகிறது.

2017 ஆம் ஆண்டு குறட்டை விட்டதால் காங்கிரஸ் இழந்த மாநிலங்களில் இதுவும் ஒன்று. (மற்றொன்று மணிப்பூர்.)

கோவா மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள். 17 தொகுதிகளில் காங்கிரஸ் ஜெயித்திருந்தது. மெஜாரிட்டிக்கு நான்கு குறைவு. பாஜகவுக்கு 13 இடங்கள் கிடைத்தன.

‘’நாம் தானே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளோம். நம்மை தான் ஆளுநர் ஆட்சி அமைக்கக் கூப்பிடுவார். அது வரை காத்திருப்போம்’’ என நினைத்து தூங்க ஆரம்பித்தது காங்கிரஸ்.

அந்தத் தேர்தலில் எம்.ஜி.பி. எனும் மகாராஷ்டிரவாடி கோமந்த கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

சுயேச்சைகள் உள்ளிட்ட உதிரிகள் 7 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தனர்.
அவர்களை பாஜக வளைத்தது. அதனால் ஆட்சி அமைத்தது.

பாஜகவின் மனோகர் பாரிக்கர் முதலமைச்சர் ஆனார்.

(பாஜக ஆட்சி அமைத்தபின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தினம் ஒருவர் என்ற கணக்கில் ஆளும் முகாமுக்கு மாற, இன்றைய தேதியில் காங்கிரசிடம் இரு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர்.)

2 ஆண்டுகள் முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச்சில் இறந்தார்.

அவருக்கு பின் பொறுப்பேற்ற பிரமோத் சாவந்த், இப்போதைய கோவா முதல்வராக இருக்கிறார்.

ஐந்து முனைப் போட்டி

நடைபெற இருக்கும் தேர்தலில் கோவாவில் 5 முனைப் போட்டி நிலவுகிறது.

பாஜக 40 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான கோவா பார்வர்டு பிளாக் 3 இடங்களிலும் நிற்கிறது.

ஆம் ஆத்மி 39 இடங்களில் தனித்து போட்டியிடுகிறது.

காங்கிரசை காலி செய்யும் திட்டத்தில் உள்ள மம்தாவின் திரினாமூல் காங்கிரஸ் கட்சி கோவாவிலும் களம் இறங்குகிறது. எம்.ஜி.பி. கட்சியுடன் உடன்பாடு வைத்துள்ளது.

அந்தக் கட்சிக்கு 13 இடங்களைக் கொடுத்து விட்டு 26 இடங்களில் திரினாமூல் போட்டியிடுகிறது.

பக்கத்து மாநிலமான மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடத்தும் சிவசேனாவும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் (என்.சி.பி.)கோவாவில் தனிக்கடை விரித்துள்ளனர்.

என்.சி.பி. 12 தொகுதிகளிலும், சிவசேனா 9 இடங்களிலும் களம் காண்கிறது.

வெற்றி யாருக்கு?

என்.சி.பி – சிவசேனா கட்சிகள் காங்கிரசுக்கு தலைவலி என்றால் மம்தா கட்சி திருகுவலியாக உள்ளது.

காங்கிரஸ் வாக்குகளை மம்தா கட்சி தின்றுவிடும் என ஒரு பேச்சு நிலவுகிறது.

ஆரம்பத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என கருதப்பட்டது. ஆனால் அரசியல் வானிலை அவ்வப்போது மாறுகிறது.

எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்கிறது, சில நாட்களுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள்.

பாஜக அதிகபட்சம் 18 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றி பெறும் என்கின்றன கணிப்புகள்.

கடந்த தேர்தலில் ஒரு இடத்திலும் வெல்லாத ஆம் ஆத்மி, இந்த முறை 4 முதல் 8 இடங்களில் வெல்லலாம்.

மம்தா கூட்டணிக்கு 5 தொகுதிகள் கிடைக்கலாம்.

தேர்தல் முடிவுகளுக்கு பின் குதிரை பேரம் ஜோராக நடக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

– பி.எம்.எம்.

12.02.2022  1 : 30 P.M

Comments (0)
Add Comment