இன்னும் நீதி கிடைக்கவில்லை…!

– ஐ.நா.,வில் இந்தியா கவலை

பயங்கரவாதத்தால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த கருத்தரங்கம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ்.திருமூர்த்தி, “உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்கள் அச்சுறுத்தலாக உள்ளன. மும்பை மற்றும் பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

இந்தத் தாக்குதல்களை நடத்தியோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

ஆனால், அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்து, 20 ஆண்டுகள் கடந்த பின்னும், சில தலைவர்கள் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்வதை பார்க்கிறோம்.

பயங்கரவாதத்தைத் தடுக்க, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எட்டு அம்ச திட்டத்தை இந்த சபையில் வெளியிட்டுள்ளார். அதன்படி, பயங்கரவாதத்தை ஊக்குவிப்போரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்தை வரையறுப்பதில் இரட்டை நிலைப்பாடு கூடாது.

இந்தியாவின் அண்டை நாடு, ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்கிறது. இந்த அமைப்புடன் இணைந்து, அல் – குவைதா, தெற்காசியாவில் செயல்படும் ஐ.எஸ் – கே ஆகிய அமைப்புகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றன.

மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் – இ – தொய்பாவுக்கு, ஜெய்ஷ் – இ – முகமது அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

இதை பல முறை ஆதாரங்களுடன் இந்தியா எடுத்துரைத்தும் அது குறித்து, ஐ.நா., பொதுச் செயலர் வெளியிட்டுள்ள பயங்கரவாத தடுப்பு அறிக்கையில் இடம் பெறவில்லை.

வருங்காலத்திலாவது உறுப்பு நாடுகள் அளிக்கும் விபரங்கள் பாரபட்சமின்றி ஐ.நா., அறிக்கையில் இடம் பெறும் என நம்புகிறோம்” எனக் கூறினார்.

11.02.2022  4 : 20 P.M

Comments (0)
Add Comment